நிமிர்த்தும் நிகழ்த்துக் கலை! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

திருவல்லிக்கேணியை ஒட்டிய சேப்பாக்கத்தில் மசூதி ஒன்று உண்டு. அதன் எதிரே போகும் தெருவுக்குப் மசூதி தெரு என்றே பெயர். அந்தத் தெருவில் வலதுபுறமாக அமைந்திருந்தது “இந்து பால பாட சாலா”

எனது ஆரம்பக் கல்வி அந்தக் கல்விச் சாலையில்தான் தொடங்கியது. இன்று அந்தப் பள்ளி அங்கே இல்லை. ஏதோ ஒரு கம்யூனிஸ்ட் அலுவலகமாக மாறிவிட்டது.

அந்தப் பகுதியைக் கடக்கும்போதெல்லாம் காரை விட்டு இறங்கி, அந்தக் கட்டடத்தைக் நோக்கி சில நொடிகளாவது நன்றியாஞ்சலி செய்த பின்தான் நகருவேன்.

இன்று பாடலாசிரியனாக, குறும்படத்துக்கான சர்வதேச விருதை இந்தியாவுக்காக வாங்கித் தந்த முதல் இயக்குநராக, வேலு நாச்சியார் திரைப்படத்தின் திரைக்கதை – இயக்குநராக, ஓர் எழுத்தாளனாக நான் பரிணமித்து நிற்கிறேன் என்றால் அதற்குக் காரணம், “இந்து பால பாட சாலா” என்னும் அந்தப் பள்ளி என்னுடைய மாணவப் பருவத்தில் எனக்குள் இட்ட மூல விதை தான்.

ஆம், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் இந்து பால பாட சாலா பள்ளியில் கலை இலக்கிய நாடக நிகழ்வு நடைபெறும். அதற்குப் “பாலர் சபை” என்று பெயர்!

பெரும் வசதிகளில்லாத அன்றைய சாதாரணப் பள்ளி என்பதால், அன்று ஒருநாள் மட்டும் பள்ளியின் மேல் மாடியில் 5, 6, 7ஆம் வகுப்புக்கான தடுப்புகள் விலக்கப்படும். அகன்ற விரிந்த அந்த ஹாலில், பள்ளி மாணவர்களாகிய நாங்கள் வேடமிட்டுக்கொண்டு நாடகம் நிகழ்த்திக் காட்டுவோம்.

வீரபாண்டிய கட்டபொம்மனாக, பகத்சிங்காக, கண்ணகியாக, வ.வு.சியாக, லஜபதிராயாக வேடமிட்டுக்கொண்டு அசத்துவோம். சக மாணவர்கள் – ஆசிரியர்கள் அனைவரும் கூடி கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்துவார்கள்.

“பாலர் சபையில்” பங்குகொண்ட சிறந்த நடிகர்களுக்கு ஹெச்.எம். கையால் பரிசளித்துக் உற்சாகமூட்டுவார்கள்.

சிரித்த முகத்தோடு ஹெச்.எம்மை அருகே கண்ட மாணவர்களாகிய எங்களுக்குச் சொல்லொணாததோர் உற்சாகம் கரை புரண்டோடும்.

“ஹெச்.எம்” என்றாலே “அச்சம்” என்ற நிலை மாறி, மாணவர்களாகிய எங்களது மனதுக்குள் ஒரு கொண்டாட்ட நிலை ஏற்பட்டு, அதுவே ஒரு பொறுப்புணர்வாகப் பரிணமித்து, அதன்பிறகு மாணவப் பருவத்துக்குண்டேயான சேட்டைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒழுக்கமானவர்களாக, ஒழுங்காக படிக்கும் மாணவர்களாக நாங்களாகவே மாறிக்கொண்டோம்.

அன்று என்னோடு படித்த அனைவரும் இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். சமூக சேவையில் முன்னணியில் நிற்கிறார்கள். இந்த மண்ணின் மீதும், மண்ணின் பெருமை மீதும், சமூகத்தின் மீதும் மாளாத பெருமையும் அக்கறையும் எங்களிடையே ஏற்பட அதுவே காரணமாக அமைந்து விட்டது.

இந்தச் சூட்சுமத்தை அன்றைய பள்ளிகள் மேற்கொண்டிருந்தன.

அதற்குப் பின்பான கல்வி முறையோ வெறும் படிப்பு, படிப்பு என்றே மாணவர்களை விரட்டி, விரட்டி அதிகப்படியாக விளையாட்டு என்ற அளவோடு நின்று கொண்டு மாணவ – மாணவியர்களுக்கு வேறெந்த விதமான புறச் செயல்பாடுகளும் இல்லாமல் செய்து விட்டது.

மாணவர்களின் மனதில் இந்த மண்ணின் மீதும், நமது சமூகத்தின் மீதும், சக மனிதர்களின் மீதும் பெரியதொரு அக்கறை இல்லாமல் “படித்தோமா, வேலைக்குப் போனாமா, சம்பாதித்தோமா…” என்னும் மன நிலைக்கு ஆட்படும் அளவுக்கு மலிந்து போக வைத்து விட்டது. அதனால், ஒரு ஜெனரேஷனே பாதிக்கப்பட்டுவிட்டது என்பது காலக் கொடுமையே.

இதை உணர்ந்து கொண்டார்கள் இன்றைய பெற்றோர்கள்.

“எங்கள் குழந்தைகளுக்குக் கல்வி மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது. இந்த சமூகத்தின்பால் அவர்களை நகர்த்தி தயார்படுத்திக் கொடுங்கள்…” என்று பெற்றோர்கள் தொடர்ந்து வற்புறுத்த ஆரம்பிக்க, பள்ளிகளில் இப்போது யோகா சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

யோகா என்பது உடல் நலத்துக்கு நலம் பயப்பதுதான். கூடவே, அதன் மூலம் மன நலமும் மேம்படும்தான்.

அப்படி மேம்பட்ட அந்த மாணவர்களின் உடல் – மனநலத்தை சமூகத்தின் பக்கமாகவும் திருப்பியாக வேண்டும். ஆம், இந்த மண்ணின் கலாசாரத்தை, மேன்மையை மாணவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும். அப்போதுதான் அது பூரணப்பட்டு ஒளிரும்.

மாணவப் பருவத்தில் என்ன விதைக்கிறோமோ அதுதான் பின்னாளில் அவர்களின் ஆளுமையை தீர்மானிக்கும்!

அதனை கருத்தில்கொண்டு, முதன் முறையாக “THEATRICS IN YOUR SCHOOL” அதாவது, “பள்ளிகள் தோறும் நிகழ்த்துக்கலை” என்னும் இயக்கத்தை தோற்றுவித்து, அதன் பயனாக “பள்ளித்தலமனைத்தும் வேலு நாச்சியார்” என்னும் பெண்ணீயக் கொண்டாட்டத்தையும் முன்னெடுத்து விட வேண்டும் என்னும் ஆழமான எண்ணம் எனக்குள் எழுந்தது.

உடனடியாக எனது டீமை அழைத்து கூடிப் பேசினேன். எல்லோரும் கலந்து ஒரு முடிவெடுத்தோம். வாழும் கலை மொத்தத்தையும் அதிலேயே அடக்கி விட வேண்டும் என்று எண்ணம் கொண்டோம்.

தனது பரத நாட்டிய திறமையால் “வாழும் வேலு நாச்சியார்” என்றே புகழ் பெற்றுவிட்ட எனது மனைவியார் மணிமேகலை சர்மா அவர்களின் OVM டான்ஸ் அகாடமியின் வாயிலாக, ஒவ்வொரு பள்ளியிலும் 15 நாள்கள் கொண்ட நிகழ்த்துக் கலையினைப் பற்றிய வொர்க் ஷாப் ஒன்றை நடத்தி, அதில், THEATRE FUNDAMENTALS – DRAMATURGY – ACTING AND PERFORMANCE – PERFORMANCE TECHNIQUES – DANCE – HISTORICAL RE – ENACTING – STAGE PRESENCE – YOGA – STAGE MANAGEMENT – MAN MANAGEMENT SKILLS – GREEN ROOM STRATEGIES என சகலவற்றையும் போதிக்கத் திட்டம் வகுத்தோம்.

இதைப் பரீட்சார்த்தமாகச் செயல்படுத்திப் பார்க்க எங்களை சகல விதத்திலும் ஊக்குவித்தது “பொன்னேரி வேலம்மாள் போதி கேம்பஸ்” நிர்வாகம். இதற்காக, போதி கேம்பஸின் நிர்வாகி மரியாதைக்குரிய கீதாஞ்சலி சசிகுமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

“எங்கள் குழந்தைகளை ஆளாக்கிக் கொடுத்து விடுங்கள். அது போதும்…” என்றார். நிர்வாகத்தை நிகழ்த்துக் கலையினை நோக்கி மொத்தமாக முடுக்கி விட்டார்.

அந்தப் பள்ளியில் திறமையான 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 15 நாள்கள் “தியேட்டர் சயின்ஸ்” மொத்தத்தையும் சொல்லிக் கொடுத்தோம். முடிவில், அவர்களைக் கொண்டே “வேலு நாச்சியார்” நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினோம்!

என்னுடைய வேலு நாச்சியார் நிகழ்வில் நடிக்கும் தொழில்முறைக் கலைஞர்களான ஆதவ், மாரிக்கனி, வினோத், கணேஷ், பிரகாஷ் எனது மகன் வேணுகோபால் பிரசன்னா உள்ளிட்ட அனைவரும் உறுதுணையாக இருக்க, பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும், இந்த மண்ணின் வரலாற்றை மேடையேற்றப் போகிறோம் என்னும் எல்லையில்லாத உற்சாகத்தோடு ஈடுபட்டு உழைக்க “வொர்க் ஷாப்” நாள்கள் களை கட்டிப் போனது.

முடிவில், அந்த மேஜிக்கை பொன்னேரி வேலம்மாள் போதி கேம்பஸின் மாணவர்கள் இந்த மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நிறைந்த அரங்கத்தில் நிகழ்த்தியே காட்டி விட்டனர்!

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பங்காற்றிய அனைத்து மாணவர்களும் 11ஆம் வகுப்பை சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு நாளும் பயிற்சி முடிந்ததும் தங்கள் பெற்றோர்களிடம் சென்று தங்கள் அனுபவத்தை அவர்கள் சொல்லச் சொல்ல “நீட்” கவலைகள் ஏதுமின்றி பெற்றோர்கள் அனைவரும் பரவசத்தோடு தங்கள் குழந்தைகளை நிகழ்த்துக் கலைக்கு உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

இதனால், நாங்கள் நடத்திய தியேட்டர் வொர்க் ஷாப்பில் மாணவர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது.

கலைகளைக் கற்றுக்கொள்வது பேரனுபவம். அப்படி நாம் கற்றுக்கொண்ட கலை சார்ந்த சூட்சுமங்களை அடுத்தொரு தலைமுறைக்குக் கடத்துவது என்பது சுகானுபவம்.

அப்படித்தான் கடந்த நாள்கள் எனக்குள் நிறைந்து நகர்ந்தன. அந்த ஒவ்வொரு நொடியும் சொல்லொணாததோர் உற்சாகம் என் மனமெங்கிலும் கரை புரண்டு கொண்டேயிருந்தது.

மாணவ மாணவியர்கள் என்னுடைய அதட்டலையும் அன்பையும் ஒன்றாகப் பாவித்து, என்னை ஆசானாக மட்டுமல்லாமல் ஒரு தகப்பன் ஸ்தானத்திலும் வைத்துக்கொண்டாடியது என்னை நெகிழச் செய்து விட்டது.

எழுத்து எனக்கு உயிர். அதையும்கூட கவனிக்க முடியாத அளவுக்கு என்னைக் கட்டிப் போட்டு விட்டார்கள் அந்த மாணவ மாணவியர்.

மின்னம்பலத்தின் காமராஜ் அவர்கள் பெரும் ரசனையாளர். அவர் கேட்டால் கட்டுரை எழுதிக்கொடுக்க பெரும் எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கும்போது, என்னையும் அழைத்து “ஏன் சார்…உங்கள் கட்டுரையை கடந்த வாரங்களாக எங்களுக்கு அனுப்பவில்லை?” என்று நட்பு கலந்த அதட்டலோடு கேட்டார்.

“மன்னிக்கவும் சார். அதற்குண்டான நேரம் எனக்கு வாய்க்கவில்லை…” என்று பள்ளி மாணவர்களிடையே நான் செய்து கொண்டிருக்கும் பணியினை எடுத்துச் சொல்ல சொல்ல நெகிழ்ந்து,

“அடடா, அற்புதமான பணியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆகட்டும், பொறுமையாக எழுதி அனுப்புங்கள்…” என்று வாழ்த்தினார்.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்…

வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தில் “பெரிய மருதனாராக” நடித்தவன் “மாணவ்” என்னும் பெயருடைய குஜராத்திப் பையன்.

கிரிக்கெட்டில் மாநில அளவில் சாதித்த அவனுக்கும் தியேட்டருக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஆனால், ஆர்வம் அதிகம்.

என் கண்ணிலோ அவன்தான் பெரிய மருதனார் ரோலுக்குப் பொருத்தமானவனாக இருப்பான் என்று தோன்றியதும் அவனை செலக்ட் செய்து விட்டேன்.

என்னிடம் அவன் வரும்போது அவனிடம் உடைந்த குஜராத்தி மொழி கலந்த தமிழ்தான் இருந்தது. நிகழ்வுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் எல்லோரும் பயந்தார்கள்.

ஆனால், 15 நாள்கள் நாங்கள் கொடுத்த தியேட்டர் பயற்சியின் முடிவில் அவன் வாயில் தெள்ளு தமிழ் துள்ளி விளையாடியது.

“எட்டடி பாயும் வேங்கைப் புலியை

ஒற்றை அடியில் சாய்ப்பவன் நான்!

தாயாம் தமிழை

தமிழ்த் திருமண்ணை

தோளில் சுமந்து திரிபவன் நான்!

ஹா…ஹா…ஹா…

பெரிய மருது. என்னைத் தெரிகிறதா…?

சங்கொலிக்க கொம்பூத

சிங்கமென செந்தமிழர்

கூட்டம் அது கோட்டையேறி மோதும் – நாங்கள்

கொஞ்சம் போல கண் சிவந்தால் போதும்!”

மேடையேறி இப்படி அவன் ஆவேசமாக பேசியபோது, மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது.

நிகழ்வின் முடிவில் அவனைப் பெற்றோர் உறவினர் அனைவரும் மேடையேறி வந்து “எங்கள் பிள்ளையிடம் இப்படி ஒரு திறமை இருப்பதை இன்றுதான் கண்டு கொண்டோம்…” என்று பள்ளி நிர்வாகிகளிடமும் என்னிடமும் சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போனார்கள்.

போலவே, வேலு நாச்சியாராக நடித்த மாணவி மானஸா ஒரு புரொஃபஷனலாகவே தன் திறமையை வெளிப்படுத்தினார். சின்ன மருதுவாக நடித்த லெனின் லோகேஷ் பிய்த்து உதறினான். கர்னல் பாஞ்சோராக நடித்த மாணவன் சூரஜ் அரங்கத்தைக் கட்டி இழுத்தான். ஹைதர் அலியாக தோன்றிய அம்ரித் அரங்கத்தை நெகிழச் செய்தான். குயிலியாக கொந்தளித்த மாணவி ஐஸ்வர்யாவும், உடையாளாகத் தோன்றி நெகிழ வைத்த மாணவி காவியாவும் அரங்கத்தைக் கண்ணீரால் நிறைத்துப் போனார்கள்.

முத்துவடுகர் நிகேஷ், தொண்டைமான் ஜீவன் என ஒவ்வொரும் கேரக்டராகவே மேடையில் நிறைந்து வாழ்ந்தார்கள்.

இந்த மண்ணின் பெருமையை உயர்த்திச் சொல்லும் மூன்று துள்ளிசைப் பாடல்களுக்கு புயலாக எழுந்து நடனமாடிய அத்துனை மாணவ மாணவியரும் நமது மண்ணுக்கேயுரிய ஆபாசமில்லாத உடல்மொழியோடு துள்ளித்துள்ளி ஆடி அரங்கத்தைக் கட்டிப் போட்டார்கள்.

அரங்கில் நிறைந்திருந்த பற்பல முக்கியஸ்தர்களும் பெற்றோர்களும் முன்னூறு வருடத்துக்கு முந்தைய தமிழகத்துக்கு ஒரு “டைம் மெஷின்” வைத்துப் பயணம் போனதைப்போல உணர்ந்து பரவசப்பட்டார்கள்.

சாதி, மதம் என்பது ஏதும் பார்க்காமல் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ் மண்ணின் விடுதலைக்காகப் போராடிய இந்த தியாக மண்ணில் பிறந்தது தாங்கள் செய்த பாக்கியம் என்னும் நெகிழ்வோடு அரங்கம் விட்டு மௌனமாக – நிறைவாக அகன்றார்கள்.

அந்த நெகிழ்வை, அந்த நிறைவை இந்த மாநிலமெங்கும் விதைக்க எண்ணம் கொண்டிருக்கிறோம்.

பெற்றோர்களும், பள்ளி நிர்வாகங்களும், மீடியாக்களும் “பள்ளித்தலமனைத்தும் வேலு நாச்சியார்” என்னும் எங்கள் முயற்சினை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று சமூக அக்கறையுள்ள ஒரு படைப்பாளனாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டுவிழா என்ற பெயரில் பள்ளி – கல்லூரிகளில் இனி சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போடும் வழக்கம் ஒழிய வேண்டும்.

மேற்கத்திய நாடகங்களை காப்பியடித்து பள்ளி மாணவர்களுக்குப் புகுத்தும் அபத்தம் அறுக்கப்பட வேண்டும்.

அதனால் இந்த மண்ணுக்கோ அல்லது நமது மாணவர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதையும், அவர்களின் எதிர்கால வாழ்வை இது போன்ற அந்நிய படைப்புகளால் செறிவாக்கிவிட முடியாது என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நம் மண்ணை சார்ந்த வீர – தியாக வரலாறுகள் பள்ளிகளில் மேடையேறட்டும். அதன் மூலம் மாணவப் பருவத்திலேயே இந்த மண் சார்ந்த அக்கறையும் – பெருமையும் உண்டாகட்டும். இந்த மண்ணின் எதிர்காலம் சிறக்கட்டும்.

இந்த வேண்டுகோளை மின்னம்பலத்தின் செழித்த வாசகர்களிடையே விடுக்கும் இந்த தருணத்தில்…

வேலு நாச்சியார் வெற்றி சரித்திரத்தை வெளிக்கொணர பெருந்தூணாக நின்ற – நிற்கும் பெருந்தகையாளர் வைகோ அவர்களுக்கும்,

“பள்ளித்தலமனைத்தும் வேலு நாச்சியார்” என்னும் எங்கள் விடுதலை முயற்சியினை அரவணைத்து ஆரம்பித்து வைத்த பொன்னேரி வேலம்மாள் போதி கேம்பஸ் நிர்வாகத்துக்கும் OVM டான்ஸ் அகாடமியின் சார்பாக நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முயற்சிக்குப் பெற்றோர்களிடம் இருந்த பெருத்த ஆரவாரத்தால் டிக்கெட்டுகள் மொத்தமும் விற்றுத் தீர்ந்துவிட, இரண்டு நாள்களாக நடைபெற்ற வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தின் மொத்த வசூலான 18 லட்ச ரூபாயை “அடையாறு கேன்ஸர் சென்டருக்கு” வழங்கிய அந்தப் பள்ளி நிர்வாகத்தின் அருங்குணத்தால்… இந்த மண்ணுக்காக வாழ்ந்து மறைந்த வேலு நாச்சியார், பெரிய மருதனார், சின்ன மருதனார், கோபால நாயக்கர் போன்றோர்களின் பேராத்மா இந்த நேரம் குளிர்ந்திருக்கும்.

ஆம், தமிழ் மண்ணின் சுயமரியாதையைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து மறைந்த வேலு நாச்சியாரும் – பெரிய மருதனாரும் – சின்ன மருதனாரும் – கோபால நாயக்கரும் இந்த மண்ணை அரசாண்டவர்கள் மட்டுமல்லர். கொண்டு கொண்டாடப்பட வேண்டிய குலச்சாமிகள்.

அவர்களைப் போன்ற வரலாற்று நாயகர்களைப் பள்ளிகள்தோறும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை ஆகும்.

ஊர் கூடி தேரிழுத்தால் குலச்சாமிகளின் மனம் குளிரும்.

இந்த மண்ணில் மாரி மழை பெய்யும். எதிர்கால சமூகம் செழித்துக் கொழிக்கும்.

கொழிக்கட்டும்!

**கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா**

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share