ஸ்ரீராம் சர்மா
“ஆவலாதி” என்று ஒரு சொல் உண்டு. அதற்கு ஈடு கொடுக்கும் பொருள் ஒன்று உண்டென்றால் அது “காமம்”.
ஆம், மனிதனின் “ஆவலுக்கு ஆதி” காமமே.
புழு – பூச்சி முதற்கொண்டு மனித உயிர்கள் வரை, உடல் எடுத்த உயிர்கள் அத்துனைக்கும் இயற்கையால் வாரி இறைக்கப்பட்ட “இலவச வரம்” காமம்.
காமம் என்பது சாதாரணமானதல்ல. உலக உயிர்களையெல்லாம் தன் வசப்படுத்த வல்ல பேராழி அது. பேராழி மட்டுமல்ல, பேராழியின் தரைப்பட்ட பெரும் பள்ளம். ஹ… அதனினும், கீழ்ப்பட்ட “மாயக் கிடங்கு”.
உண்மையில், காமம் என்பது வெகு இயல்பானது. ஒவ்வோர் உயிரும் கொண்டு, கொண்டாடத்தக்கது.
ஆனால், இலவசம் என்று ஒன்று கிடைத்துவிட்டால் சும்மா விடுவானா மனிதன்? அதன் ஆழம் தேடி, அகழ்ந்து, கீறிக் குடைந்துவிட மாட்டானா?
சும்மா கிடைக்கும் ஒன்றை சுலபத்தில் விட்டுவிடாத குணம் படைத்த மனிதன், பாய்ந்து பிறாண்டுவதால்தான் காமம் என்பது “ச்சீய்” என்றாகி விடுகிறது.
சரி, காமத்தை எப்படித்தான் சரிக்கட்டுவது?
காமம் என்னும் அந்த மாயக் கிடங்குக்கு “சாவி” ஒன்று உண்டு. அது, காதல்.
ஆம், காமத்தை – காதல் முந்த வேண்டும். காமத்தின் இலக்கைக் காதலின் திசை நோக்கிச் செலுத்த வேண்டும். இரண்டையும் பின்னிப் பிணைத்தாக வேண்டும்.
காதலோடு கூடிய காமம்தான் முழுமை பெறும்.
காதல் செய்யப்படாத காமத்தில் அனுகூலம் உண்டாவதில்லை.
“வரட்டு, வரட்டு” என்று வெளிப்படும் காமம், கக்கூஸில் தொங்கும் ஒட்டடைக்குச் சமம்.
இதை மார்பில் அடித்துக்கொள்ளாத குறையாக, உலகில் தோன்றிய அத்துனை இலக்கிய நூல்களும் கதறக் கதறச் சொல்லியிருக்கின்றன.
என்ன புண்ணியம்… படித்தால்தானே?
“மனிதனே, காமத்தை அலங்கோலப்படுத்திவிடாதே. காமம் என்பது அழகானதொரு புஷ்பம். அதைப் பல வகைகளில் நுகர்ந்து, சுகித்துக்கொள்வாயாக…” என்று மன்றாடிச் சொன்ன இலக்கியங்கள் இங்கே பல உண்டு.
ஈடு இணையற்ற ஞானாசிரியரான நம் திருவள்ளுவனார் எழுதித் தந்த “காமத்துப் பால்” அதன் கொடுமுடி.
காதலோடு கூடிய காமத்தில் இருக்கும் ரசம் அலாதியானது.
**இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர் கொண்டனள்.**
மார்கழிப் பொன் மஞ்சத்தின் மீதேறிக் கூடல் செய்யும் கணவன், தன் நோக்கத்தைச் சற்றே நிறுத்திவிட்டு…
“அம்மாடி, நான் சாகும் வரையில் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்கிறான்.
“ஐயோடா, அடுத்த ஜென்மத்தில் என்னை விட்டுக் கொடுத்துவிடுவாயோ…” என்று குபுக்கெனக் கண்ணில் நீர் தளும்பி வரப் படபடத்துப் பார்க்கிறாள் மனைவி.
இருவரும் விழிகளைத் துடைத்தபடியே, தங்கள் நோக்கத்தில் முன்னேறுகிறார்கள். இது வள்ளுவர் காட்டும் காட்சி.
வள்ளுவத்துக்கு முற்பட்ட வாத்ஸ்சாயனம், பின்தோன்றிய கொக்கோகம், உலகப் பாரம்பர்யக் களமான எல்லோரா குகை சிற்பங்கள் மொத்தமும் காதல் வழியேதான் காமத்தை வலியிறுத்துகின்றன.
காமத்தை, காதல் கலக்காமல் கரடு முரடாக அணுகுவதால்தான் துன்பம். படுக்க விழையும் மனிதர்கள் அதற்கு முன் கொஞ்சம் படிக்கவும் விழைந்தால் காமத்தால் துன்பமில்லை. கட்டிக்கொள்வதற்கு முன் கொஞ்சம் கற்றுக்கொள்வது தவறில்லை.
தமிழ் மற்றும் ஃப்ரெஞ்சு இலக்கியங்களில் காமம் மிக அதிகமாகக் கொண்டாடப்பட்டிருந்தாலும், தமிழில்தான் அணுக்கமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது எனலாம்.
**மலரினும் மெல்லிது காமம் சிலரது
செவ்வி தலைப்படுவர்**
என்கிறார் திருவள்ளுவர்.
தமிழ் இலக்கியங்கள் யாவும் காமப் பெரு வாசலை மெல்லத் திறக்கவே சொல்லிக் கொடுத்திருக்கின்றன.
எனதிளம் பிராயத்தில், காமத்தின் ஜன்னல்களாக எனக்கு வாய்த்தது புகழேந்திப் புலவரின் வெண்பாக்கள்தான்.
“புலவர்க்கு வெண்பா புலி” என்பார்கள். அந்தப் புலியின் கடை வாயில், காமத்தின் ஜொள் ஒழுக வைத்திருப்பார் புலவர்.
ஒரு வெண்பாவில் இப்படிச் சொல்வார்…
காமத்தின் உச்சத்தில் நாயகி, நாயகனை இறுக அணைக்கிறாள்.
அவள் காமத்தின்பாற்பட்டு அவ்வாறு அணைக்கவில்லை…
“இன்னுமா என் கூர்மை மிகுந்த கொங்கைகள், உன் மார்பை துளைத்து முதுகுப் புறமாக வெளிப்படவில்லை? உன் மேல் நான் கொண்ட காதல் அவ்வளவுதான் என்று எண்ணிவிடாதே” என்று “மேலும்” இறுக்குகிறாள் என்பார்.
**இதுதான், காதலோடு கூடிய மெல்லிய காமம்.
வெறும் காமம் என்ன செய்யும்?
காள மேகப் புலவரிடம் போனால் தெரியும்.**
காளமேகப் புலவரின் சிலேடை மொழிகளில் சிக்கிக்கொண்ட காம வெண்பாக்கள் ஒன்றா இரண்டா?
வேசியையும் – பனைமரத்தையும் இணைத்து அவர் பாடிய பாடல் ஒன்றைப் பார்ப்போம்…
கட்டித் தழுவதலால் கால் சேர ஏறுதலால்
எட்டிப் பன்னாடை இழுத்தலால் – முட்டப்போய்
ஆசைவாய் கள்ளை அருந்துதலால்; அப்பனையும்
வேசை எனலாமே விரைந்து.
இந்த வெண்பாவுக்குப் பொழிப்புரை தேவையில்லை. ஆனாலும், சொல்லாமல் விட்டால் சிலர் சபிக்கக் கூடும். அதனால், சொல்லிவிடுகிறேன். வேசி என்றால் “கால் கேர்ள்”.
கள் உண்ண முடிவெடுத்துவிட்ட மனிதர்கள்…
பனைமரம் – கால் கேர்ள் இரண்டையும் முதலில் கட்டித் தழுவுவார்கள். பிறகு, கால் சேர ஏறுவார்கள். ஆடைகளை எட்டி நீக்குவார்கள். பனை மரத்தில் “பன்னாடை” என்று ஒன்று உண்டு. அதனை, நீக்கிய பின்தான் கள் குடிக்க முடியும். பிறகு, அவளை முட்டுவதை போல் எகிறி கிஸ் அடிப்பார்கள்.
புரிந்துவிட்டதா?
சரி, ஏன் காளமேகப் புலவருக்கு இந்த ஆவலாதி?
இன்றைய சினிமா நட்சத்திரங்களுக்கு சமூகத்தில் ஒரு “ஸ்டார் அந்தஸ்து” இருக்கிறது அல்லவா? அதுபோன்றதொரு ஸ்டார் அந்தஸ்து “காளமேகம்” போன்ற புலவர்களுக்கு இருந்த காலம் அது.
அதனால், காளமேகத்திடம் பொன்னும், பொருளும் குவிந்து கிடந்தது. மிகுதியாக இருந்த அந்த செல்வத்தை ஒரு வேசி “ரெய்டு” அடித்துவிட்டாள். அந்தக் கடுப்பில், அவளைப் பனைமரமாக நிற்க வைத்து வயிற்றெரிச்சலைத் தீர்த்துக்கொண்டார் காளமேகப் புலவர்.
அது போக,
‘தனிப்பாடல் திரட்டு’ ஒன்றில் இவ்வாறு படித்திருக்கிறேன்…
“வேழ வாயன்ன அல்குல்”
இதன் அருஞ்சொற்பொருள் இப்படியாக…
“அன்ன” – அப்படிப்பட்ட
அல்குல் – பெண் உறுப்பு
வேழ வாய் – யானையின் வாய்
யானையின் வாய் போல இருக்கிறதாம் பெண்ணுறுப்பு.
யானையின் வாய் எப்படியிருக்கும்? அகன்றாற் போல இருந்து, கீழே சிறுத்து வரும். அதன் இதழோரங்கள் ஈரப் பசையோடு காணும். சுற்றிவர சிறு மயிர்கள் கொச கொசவென்று இருக்கும்.
இந்த “அழகு” வர்ணனையெல்லாம் போக, மேலும் ஒரு விஷயம் இருக்கிறது.
ஆம், யானை வாய்க்குள் சென்ற எதுதான் மீண்டிருக்கின்றது?
“வேழ வாயன்ன அல்குல்” என்பதன் முழுமையான அர்த்தம், அங்குதான் சொடுக்கி நக்கலாடுகிறது.
இதைப் படித்த பின்பு, யானையைக் காணும்போதெல்லாம் என் முகத்தைத் திருப்பிக்கொண்டிருக்கிறேன்.
சரி, வள்ளுவப் பேராசனிடம் வந்துவிடுவோம்.
**புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.**
இதைக் காட்டிலும் மெல்லிய காமம் ஒன்று உண்டா?
“மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி..” என்கிறாள் ஆண்டாள்.
இதைவிட ஒரு நாசூக்கு உண்டா ?
ஆண்டாளின் மாயமொழியைத் தன் வசப்படுத்திக்கொண்ட கவியரசர் கண்ணதாசன், ‘தைப்பாவை’ என்னும் தன் தனிப் படைப்பில்…
“அற்றைச் சிறுமியரோ ஆளானாள் நேற்றிரவில்;
இற்றைக்கே காதல் எப்படித்தான் ஈர்த்தாளோ?
பற்றாத பூந்தனத்தைப் பார்த்துத் தவித்தாளோ” என்கிறார்.
“பற்றாத பூந்தனம்” என்பதற்கு மேல் அதைக் கௌரவப்படுத்திவிட முடியுமா? கவியரசர் கண்ணதாசனால் மட்டுமே முடியும். காரணம், இளகி வழியும் அவரது காதல் மனம்.
வேறு ஒரு பாடலில்,
“ஏதில் குணத்தான் இளங்காளை காதல் வெறிப்
போதில் வரைந்த பூப் போன்ற சித்திரங்கள்” என்கிறார்.
ஆம், “காமம் என்பது யோகத்தின் வாசல். அதன் அளவறிந்து முட்டுக. அல்லாவிடில் சகலமும் முறிபட்டுப்போகும்” என்று மெல்லிய காமத்தின் அவசியத்தை உணர்த்துகிறார்.
சமஸ்கிருதத்தில்,
மாமுனிவராக வணங்கப்படும் “ஜெயதேவர்” எழுதிய “அஷ்டபதி” மிகப் பிரசித்தமானது.
அதிலும், காம ரஸம் ததும்பி வழியும்.
ராதையையும் – கண்ணனையும் வைத்துப் பிழிந்திருப்பார்.
“ஷ்ருத கமலா குசல குண்டலே…” என்று தொடங்கும், அவரது அஷ்டபதிப் பாடலில் அதைப் பரிபூரணமாக உணரலாம்.
‘காமத் தூவல்’ இல்லாத பக்தி இலக்கியங்கள் இங்கே இல்லை.
அவை விரசமாக தெரியாததற்குக் காரணம் அதில் ஊடாடும் பக்தி ரசமே. பக்தி என்பது காதலே அன்றி வேறில்லை.
வாத்ஸ்யாயனரிடம் வருவோம். காமம் என்ற பேச்செடுத்தாலே வாத்ஸ்யாயனர்தானே .
வாத்ஸ்யாயனரை ‘மஞ்சள் புத்தகத்தார்’ என்றே இதுகாறும் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அது மாபெரும் தவறு.
வாத்ஸ்யாயனம் என்பது காமத்தை மட்டுமே போதிக்கும் நூல் என்பது அறிவீனமாகக் கொள்ளப்படும்.
காமம் மட்டுமல்லாது, மருத்துவம், ஆரோக்கியம், சமூகம், மானுடம் எனப் பற்பல செய்திகளையும் உள்ளடக்கிச் சொல்லப்பட்டதே வாத்ஸ்யாயனம். படித்துப் பாருங்கள் புரியும்.
சாதி பேதங்களை அடியோடு ஒழிக்க சொன்னது வாத்ஸ்யாயனம். குழந்தை விவாகத்தை மறுத்துச் சொன்னது வாத்ஸ்யாயனம். விதவை மறுமணத்தை அந்த நாளிலேயே வலியிறுத்திச் சொன்னது வாத்ஸ்யாயனம்.
அந்த வாத்ஸ்யாயனம்,
“புணர்வுக்கு முன்னும் பின்னும் ப்ரஸ்தாபிக்கப்படும் ‘காதல் மொழி’களில் தான் ‘காமம்’ என்பது உயிர் பெறுகிறது” என்று வலியுறுத்திச் சொல்கிறது.
ஜனமேஜயர் காலத்தில் வாழ்ந்து, அவரது சர்ப்ப யாகத்தில் கலந்துகொண்டவர் வாத்ஸ்யாயனர் என்கிறார்கள்.
பீஷ்மரின் அம்புப் படுக்கையின்போது , அவரால் சொல்லப்பட்ட பீஷ்ம கீதையைக் கேட்டவர்களில் ஒருவர் வாத்ஸ்யாயனர்.
அப்படிப்பட்ட வாத்ஸ்யாயனர் மொழியப்பட்ட ‘வாத்ஸ்யாயனம்’ கீதைக்கு ஈடானது என்றால், அது அதிகமில்லை.
யோகத்துக்கு ஒரு கீதை என்றால், அதன் முதல் படியான காமத்துக்கு ஒரு வாத்ஸ்யாயனம். அதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரே வழி, வாத்ஸாயனத்தைக் காதலோடு படிப்பது மட்டும்தான்.
இந்தக் கட்டுரையின் கருப் பொருளான **காதல், காமம், இரண்டும் கலந்த போகம், அதன் வழியே ஞானம்** என சகலத்தையும் கண்டடைந்து கரையேறியவர் கவியரசர் கண்ணதாசன்.
காலத்தால் அழியாத அவரது பாடல் ஒன்றின் வழியே இந்தக் கட்டுரையிலிருந்து வெளியேறிவிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும்
காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ?
கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.