லா.ச.ரா காட்டிக்கொடுத்த லயம்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். ‘சுருக்’ எழுத்தாக லா.ச.ரா என்றால் தமிழ் இலக்கிய எழுத்துலகம் நிமிர்ந்து கொள்ளும்.

லா.ச.ராவின் எழுத்தாளுமை அப்படிப்பட்டது. ஈடு இணையற்றது. ரசானுபவம் மிளிரும் அவருடைய எழுத்தின் ஜாலம் வேறு ஓர் உலகுக்கு நம்மை இட்டுச்செல்லும் வல்லமை படைத்தது.

அவரது ஆழ்ந்த எழுத்துகள் எல்லாம் “வரிகளுக்கு மேலே மிதக்கும்” தனித்த வாசகர்களுக்கே உரித்தானது. மாய மொழி பேசுபவர் என்று அவரை வியப்பார்கள்.

அப்படிப்பட்ட லா.ச.ராவிடம் நானும், என்னிடம் அவரும் சிக்கிக்கொண்ட காலகட்டம் ஒன்று அமைந்தது. லா.ச.ரா எனக்கொரு ஞான குருவாக பின்னாளில்தான் தோன்றினார். ஆனால், அவருடனான எனது ஆரம்ப கால அனுபவம் குரங்குக் கையில் சிக்கிய பூமாலை போல சுவாரஸ்யமானது.

அன்று, பதின்ம வயதை கடந்தேறிய வயது எனக்கு. லா.ச.ரா அவர்களுக்கோ ஏறத்தாழ 70 போல இருந்திருக்கக் கூடும்.

எனக்கு ஒரு சகோதரர். சைக்காலஜியில் எம்.ஏ. முடித்தவர். ஜோஸியம், வான சாஸ்திரம், மருத்துவம் என பல துறைகளில் ஞானம் படைத்தவர். கூடவே, அற்புதமான எழுத்தாளர். அவரால் இந்தச் சமூகத்துக்கு கேடு ஒன்றும் இல்லையென்றாலும், தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொண்டு “சித்தம் போக்கு சிவன் போக்காக” அவர் சுற்றிவந்த காலம் அது.

சைக்காலஜி துறையில் அவரை ஒரு புத்தகம் எழுத வைக்க வேண்டும் என்னும் ஆவலோடு, “மனிதனுக்குள் ஓர் பயணம்” என்னும் தலைப்பையும் கொடுத்து, “எழுது, எழுது” என்று விடாமல் துரத்தினேன். ஒருவழியாக எழுதி முடித்தார். எனது நண்பர் செல்வராஜ் அவர்களின் எஸ்.எஸ். பதிப்பகம் வாயிலாக அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. அட்டைப் படத்தை அட்டகாசமாக வரைந்தளித்து ஆசீர்வதித்தவர் “வர்ண வாருதி” மாருதி சார்.

“விந்து என்பது, மனித மூளையின் திரவ நீட்சி” என்று அவர் எழுதிய அந்தப் புத்தகத்தின் வாசகம் அன்று பலரது பாராட்டைப் பெற்றது. தமிழக அரசாங்கத்தின் அந்த ஆண்டின் “சிறந்த நூல்” என்னும் விருதும் அதற்குக் கிடைத்தது. அன்றைய அமைச்சரால் பரிசும் அளிக்கப்பட்டது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

முன்னதாக, அந்த நூலுக்கு “அணிந்துரை” எழுதித் தரும்படியாக லா.ச.ரா அவர்களை அணுகினேன்.

ஒரு புதுமுக எழுத்தாளர் எழுதும் ஒரு சாதாரண சைக்காலஜி புத்தகத்துக்கு, “எழுத்துப் பிரம்மம்” லா.ச.ராவிடம் முன்னுரை கேட்பதா என்று யாரும் மருகிப் பலனில்லை. வழக்கம்போல எனக்கு அமைந்து விடும் அதிர்ஷ்டம் அது.

எனது நாடக, இசை வாழ்வில் எனக்கு அமைந்த எனது பால்ய நண்பன் தினகர். “லெதர் இன்டர்நேஷனல்”என்னும் உலகளாவிய ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகிய அவனது அப்பா சங்கரன் சார்…

சங்கரன் சார் மதியம் கிடந்து ஓய்வெடுக்கும் சமயங்களில், அவருக்கு ஹிந்து பேப்பரை படித்துக்காட்ட எனக்குக் கிடைக்கப் பெற்ற வாய்ப்பு…

மைலாப்பூர், ஜகதாம்பாள் அவென்யூ வீட்டில் தன் பால்ய நண்பன் சங்கரன் சாரை சந்திக்க வரும் லா.ச.ரா…

சங்கரன் சாரும், லா.ச.ராவும் சேர்ந்து தங்களது பால்யக் கொண்டாட்டத்தோடு சமைத்துத் தள்ளும் வத்தக்குக்குழம்போடு கூடிய சமையல்…

அவர்களது அந்த சமையல் கொண்டாட்டத்துக்கு, மைலாப்பூர் சித்திரக்குள மார்க்கெட்டுக்கு “ஓடும் பிள்ளை, ஓடியாரும் பிள்ளையாக” இருந்த நான் என என் அதிர்ஷ்டம், பற்பல அடுக்குகளாக நீண்டு, லா.ச.ராவை என்னிடம் கச்சிதமாகச் சிக்கிக்கொள்ள வைத்து விட்டது.

அன்றைய நாளில்… தினகர், நான், ரேஹான், சத்யா, சாம், ராகினி என நண்பர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, “சன் ஷைன் யூத் கிளப்” என்னும் பெயரில், ‘ஆல் இண்டியா ரேடியோ’வின் இளைஞர் பிரிவில் கலை நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம். மாதம் ஒருமுறை மாலை 5.30க்கு அது கரகரத்தபடியே ஒலிபரப்பப்படும். அப்போது, நான் எழுதிய ஆன்மிக பிரைவேட் ஆல்பம் இரண்டொன்று கூட வெளிவந்திருந்தது.

மொத்தத்தையும் கேட்க சொல்லி லா.ச.ரா அவர்களை இழுத்து வைத்து விடாமல் துன்புறுத்திக்கொண்டிருந்தோம்.

இடையிடையே, “அணிந்துரை” என்ன ஆச்சு என்று தினகரும், நானும் லா.ச.ராவைக் குடைந்து கொண்டேயிருப்போம் .

“சரி, சரி…உசுர எடுக்காத… என்ன பேரு அதுக்கு ?”

“மனிதனுக்குள் ஒரு பயணம்…”

“ஓஹோ… சரி, அந்தப் பொஸ்தகத்த குடு. உன் வீட்டில் போன் இருக்கா..?”

“இருக்கு சார் “

“ம்ம்… நம்பர் குடு. படிச்சுப் பாக்கறேன். கூப்பிட்டா வரலாம்…”

இரண்டு மாதங்கள் ஓடிக் கழிந்தது. நல்லவேளையாக அந்தப் புத்தகம் அவருக்கு பிடித்துப் போக, போனில் அழைத்தார்.

“அட்ரஸ் குறிச்சுக்கோ, வீட்டுக்கு வாடா…”

லா.ச.ராவின் அப்போதைய வீடு அம்பத்தூரில் இருந்தது.

திருவல்லிக்கேணிவாசிகளுக்கு சுற்றிவர பத்து கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்வதென்றால் பாகற்காயைப் பச்சையாக கடிப்பதைப்போல. அதிலும் நான் ரொம்ப சுத்தம். அம்பத்தூ…ர் என்றவுடன் “பக்” என்று இருந்தது. ஆனாலும், வேறு வழி இல்லை.

எனது பூஞ்சையான “ஹீரோ புக்” வண்டியில், மேடு பள்ளமாக இருந்த அன்றைய அம்பத்தூர் சாலைகளை ஒட்டகச் சவாரியாகக் கடந்து, சலித்துக் கொண்டே ஞானமூர்த்தி நகரை சென்றடைந்தேன்.

வாஞ்சையோடு வாசலுக்கே வந்து விட்ட லா.ச.ரா முகம் மலர…

“வாடாப்பா…ரொம்ப சுத்தி வந்துட்டியோ…” என்றார்.

“உங்களைப் பார்க்க எவ்வளவுன்னாலும் சுற்றலாம் சார்..”

ஏற இறங்கப் பார்த்தவர்… “இவனுக்கு காபி குடும்மா” என்று வீட்டுக்குள் குரல் கொடுத்தபடியே திரும்பி நடந்தார்.

அவரது சிறிய அறையில் அமைதியாக அமர்ந்து கொண்டேன். புத்தக வாசனையும், கொழுக்கட்டை சுண்டல் வாசனையும் கலந்து அடித்தது நினைவில் இருக்கிறது. அது, ஆவணி மாதமாக இருக்கலாம்.

லா.ச.ரா அப்போது எழுதிக்கொண்டிருந்த நாவல் ஒன்றின் கைப்பிரதியை ஒரு குழந்தையின் ஆவலோடு என்னிடம் எடுத்துக்கொடுத்து படித்துக் காட்ட சொன்னார். அந்த எழுத்தின் “வீச்சு” எனக்கு அப்போது பிடிபடவேயில்லை.

முன்பின் அனுபவமில்லாததால், சரி ஓர் பயிற்சியாக எண்ணிப் படித்துக் காட்டலாம் என்று முயன்றுகொண்டிருந்தேன். பாம்பு ஒன்றின் அசையும் வால் நுனி பற்றிய வர்ணனை மட்டும் லேசாக நினைவில் இருக்கிறது.

மொழியின் தோரணை பிடிபடாததால் சுரணை இல்லாமல் படித்துக் காட்டிக் கொண்டிருந்தேன்.

இடையிடையே அவர் கண்களை நோக்கும் போதெல்லாம், “கண்றாவி, உன்னிடமெல்லாம் படிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் பார்…” என்னும் வெறுப்பு அவரது கண்களில் மின்னி மறைய கண்டு, எனக்கு அயற்சி மேலிட்டுக் கொண்டிருந்தது.

காபி வந்ததும், அதைப் பாய்ந்து வாங்கிக் கொண்டேன். அதை, அவர் ரசிக்கவில்லை.

எனக்கு “அணிந்துரை” வேண்டும் என்னும் ஒரே குறிக்கோளோடு நாடகமாடிக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்கு மேலும் வெறுப்பை உண்டாக்கியிருக்கக் கூடும். ஆனாலும், என்னை விடாமல் படிக்க விட்டுக் கொண்டிருந்தார்.

லா.ச.ரா வீட்டு ஜன்னலை மிக ஒட்டி, பக்கத்து வீட்டின் ஜன்னல் ஒன்று அமைந்திருந்தது.

திடீரென “ஐயோ இங்க வாங்கோ…ளேன்…” என்னும் ஓலக் குரல் அந்த ஜன்னல் பக்கத்தில் இருந்து எழுந்து, வீங்கியபடியே பரவியது.

ஆம், அங்கே ஓர் இழவு விழுந்துவிட்டிருந்தது.

பக்கத்து ஜன்னலில், விதவிதமான ஆண் – பெண் கேரக்டர்கள் வந்து, வந்து மோதி அடித் தொண்டைக் குரலோடு அங்குமிங்குமாய் அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி இருக்க, எனக்குப் பதற்றமாகிவிட்டது.

படபடப்போடு எதிரே இருந்த லா.ச.ராவைப் பார்த்தேன். லா.ச.ராவிடம் எந்த சலனமும் இல்லை.

படிச்சது போதும் நிறுத்துடா, ஓலத்தில் லயம் உண்டான்னு பார்ப்போம்…” என்று சன்னமாக முனகியபடியே மெல்ல எழுந்து, ஜன்னல் அருகே போய் மௌனமாக அமர்ந்துகொண்டார்.

ஏதோ, “குரங்கு வித்தையை” பார்ப்பவர் போல, கால் மேல் கால் போட்டுக் கொண்டு, மோவாயில் தன் மடக்கிய மணிக்கட்டை அழுத்திக் கொண்டவர், எதிர் ஜன்னலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘என்ன மாதிரி மனிதர் இவர்?’ எனப் பயம் கலந்த அசூயை எனக்குள் மேலிட்டது.

லா.ச.ராவோ சற்றே முகம் திருப்பி இடக் காதை எதிர் ஜன்னலுக்குக் கொடுப்பதும், சட்டென திரும்பி ஜன்னலுக்குள் உற்றுப் பார்ப்பதுமாகவே இருந்தார்.

சற்று நேரத்தில், பக்கத்து வீட்டு ஜன்னல் “பட்”டென மூடப்பட்டது.

மேலும் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவர், தனக்குத் தானே லேசாக குலுங்கி சிரித்தபடி திரும்பினார்.

“ஸ்ரீராமா, அந்த ப்ரௌன் கவரை எடுத்துக்கோ… மோகன் நல்லாதான் எழுதியிருக்கிறான். இன்னும் நிறைய படிக்கச் சொல். நிறைய எழுதச் சொல். எழுத, எழுதத்தான் எழுத்து. என் ஆசீர்வாதம்…” என்றார்.

துணுக்குற்று அவரை வெறித்துப் பார்த்தேன்!

“என்ன..?” என்றார்.

“சார், அங்கே ஓர் உயிர் போய் விட்டது…”

“சரி…!”

“நீங்கள் என்னவோ தமாஷ் போல பார்த்துக்கிட்டிருக்கீங்க..?”

“……”

லா.ச.ராவின் மௌனம் என்னை மேலும் பேசச் சொல்லி சீண்டியது.

எனது, விவரமற்ற இளம் பிராயம் இன்னும் கொஞ்சம் உசுப்பேற்றி விட்டது.

“சார், நீங்க பெரிய அறிவு ஜீவியா இருக்கலாம். உங்களை என்னால் புரிந்துகொள்ள முடியலைன்னு மட்டும் நினைச்சுக்காதீங்க. நான் கிளம்பறேன்…”

லா.ச.ராவின் முகம், மலத்தை நுகர்ந்தார் போல சீறிச் சுருங்கி பின் நிலை கொண்டது.

“நில்” என்னும் தொனியில் தன் வலக்கையை ஒரு நாட்டியக்காரியின் டோலம் போல திருப்பி, மடக்கி நிறுத்திக் கொண்டு கண்களை மூடிய படியே கேட்டார்.

“டேய்… ஜன்னலுக்கு அந்தாண்ட நீ என்னத்த கவனிச்ச…?”

“ஏன்… எல்லாரும் அழுதுக்கிட்டிருந்தாங்களே… உங்களைப் போலத்தான் நானும் கவனிச்சேன்…”

புருவத்தை உயர்த்தி நக்கலாக சிரித்தவர், “ம்ம்ம்… அவ்வளவுதான் உனக்கு இப்போ வாச்சிருக்கு. போகப் போக உனக்குப் புரியலாம். சரி, இப்போ நீ அந்த ப்ரௌன் கவர எடுத்துக்கிட்டு கிளம்பலாம்” என்றார்.

லா.ச.ரா எறிந்த அந்த அலட்சியமும், அவரது அந்த மினுக்கும் பாம்புக் கண்களும் என்னை ரொம்பவே வெறுப்பேற்றி விட, இளங்கன்று பயமறியாது என்பதைப் போல இறைந்தே கேட்டேன்…

“சார், இப்போ நீங்க சொல்லியே ஆகணும். அப்படி நீங்க என்னத்தத்தான் தனியா கவனிச்சுட்டீங்க…?”

“நீ கிளம்புடா, கவர் எடுத்தாச்சா…?”

“ஆச்சு சார், சொல்லுங்க… அப்படி நீங்க என்னத்தத்தான் கவனிச்சுட்டீங்க…?”

“அழுகைக்கு உள்ளே இருந்த டீட்டெய்ல கவனிச்சிகிட்டிருந்தேன்டா… அதைச் சொன்னா, உனக்கு இப்போ புரியாது… நீ கிளம்பு…”

“அதெல்லாம் சும்மா சார். அழுகைக்கு ஸ்ருதியில்லன்னு நானும் படிச்சிருக்கேன்…”

“பரவாயில்லையே…” என்று சத்தமாக சிரித்த லா.ச.ரா.

“அழுகைக்கு ஸ்ருதியில்லாம இருக்கலாம், ஆனா ஒரு லயமுண்டுடா… அதுல பல விஷயம் அடங்கியிருக்கு. லயம்னா என்னான்னு உனக்கு தெரியும்தானே?”

“லயம்னா, தாளம்”

“வெரிகுட். அழுகையின் லயங்களில் குணமும் பொதிஞ்சிருக்கும்டா… அதைத்தான் கவனிச்சுக்கிட்டிருந்தேன்…”

“சார், தாளத்தோடு யாராவது அழுவார்களா? அதுல குணம் வேற தெரிஞ்சிருமா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா சார்…”

“கெட் அவுட்…”

அன்று, லா.ச.ராவிடமிருந்து வேகமாக கிளம்பிய எனக்கு, அதன்பின் பல லயங்கள் பிடிபட்டுவிட்டன.

ஒவ்வொரு அழுகைக்கும் ஒரு ‘லயம்’ உண்டு என்பதை என் வாழ்க்கை அனுபவம் இன்றளவும் எனக்குப் போதித்துக் கொண்டேயிருக்கின்றது.

வேண்டியவன் இறந்தால் ஒரு லயம். வேண்டாதவன் இறந்தால் வேறொன்று.

கடன் சுமை வைத்து போனவனுக்கு ஒரு லயமான அழுகை. அங்கும், இங்குமாய் சொத்து சேர்த்து வைத்து செத்தவனுக்கு வேறு வகையான நீண்ட தாள கதியோடு கூடிய அழுகை.

புரிந்துகொண்டு வாழ்ந்தவனுக்குண்டான மனைவியின் அடித் தொண்டை லயம் ஒருவிதம். சோரம் செய்து போன உயிருக்கு தனி ரகமான லயம் .

“இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்” என்பதற்கு ஓர் ஓயாத லயம் உண்டு என்பது போல, “போயொழிந்ததே போதும்” என்று விட்டு நிற்கும் இறக்கையறுந்த லயம் ஒன்றும் உணரக் கிடைத்தே வருகிறது.

ஆம், அழுகையின் லயங்களில் உறவுகளின் குணம் வெளிப்பட்டு விடுகிறது. உறவுகளின் குணத்துக்கு ஏற்றாற்போல அழுகையின் லயம் வேறுபடுகிறது என்பது ஆச்சர்யமளித்துக் கொண்டிருக்கிறது.

எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக புரிபட்டு வரும் இந்த வேளையில் லா.ச.ரா என்னும் மாயமொழி பேசும் அந்த ஆசான் என்னெதிரே இல்லை. இன்று அக்டோபர் முப்பது. இன்றோடு அவர் மறைந்து சரியாக 10 வருடங்கள் முழுமையாகிறது.

எண்ணிப் பார்க்கிறேன்.

ஒருவேளை அவர் இன்று உயிரோடு இருந்து, அவரிடம் ஓடோடிப் போய், “லயம் பிடிபட்டிருச்சு சார்…” என்று நான் மண்டியிட்டுச் சொல்ல, “ஹா…ஹா..ஹா…” என்று சிலாகித்து தட்டிக்கொடுக்கும் லா.ச.ராவின் அந்த எள்ளலின் “லயம்” எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்?

எப்படி இருக்குமானாலும் எனக்கோர் அசிங்கமும் இல்லை.

ப்ரம்மத்துக்கு முன்னால் அசிங்கப்பட்டேன் என்பதுதான், அசிங்கம்.

கட்டுரையாளர் குறிப்பு:

ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share