ஸ்ரீராம் சர்மா
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு !
பல்விதமாயின சாஸ்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு !
இப்படிக் கம்பனை அடிபணிந்தேறி உச்சி முகர்ந்தவர் மகாகவி பாரதியார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரது வாழ்வு பலவிதமான சுவாரஸ்யங்களைக் கொண்டது… அதிலொரு ரஸமான சம்பவம் இது…
ஒருமுறை, கம்பரது பெருமையை “கொள்ளப் பொறுக்காத” சோழ நாட்டு மூட அரசன் ஒருவன்… கம்பரிடம் தன் செருக்கைக் காட்ட முயல,
“போடா போ… மன்னவனும் நீயோ வள நாடும் உன்னதோ
உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்”என்று வெளியேறிப் போயே போனான்.
கம்பர் சோழ நாட்டைவிட்டு வெளியேறி விட்டார் என்பதை அறிந்த சேர மன்னன் ஒருவன், அவரது ஆன்ம உயரத்தை உணர்ந்து எல்லை வாயிலில் காத்திருந்தான்.
“ஐயா, நீங்கள் தெய்விகக் கவி என்பதை நானறிவேன். எனது அரசவைக்கு வந்து முதன்மைக் கவியாக தாங்கள் வீற்றிருந்தாலே போதும்…” என்று பணிந்து வேண்டிக்கொள்ள, கம்பரும் சம்மதித்திருக்கிறார்.
அங்கேயும், போலிக் கவிகள் இருப்பார்கள் அல்லவா?
கம்பர் மீது ஆறாப் பொறாமை கொண்ட அந்தப் பொல்லாதவர்கள் கொடும் செயல் ஒன்றைச் செய்தார்கள்.
ஏழை நாவிதர் ஒருவருக்கு பொன்னும் பொருளும் கையூட்டாகக் கொடுத்து, “நாளை அரசவைக்கு வந்து, நீ கம்பனின் சகோதரன் என்று மட்டும் சொல் போதும்… மற்றபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்…” என்று வற்புறுத்தி மிரட்டியிருக்கிறார்கள்.
கையூட்டு பெற்ற அந்த அப்பாவி நாவிதனும் சேர நாட்டு அரசவையில் அவ்வாறே வந்து நின்று, “இந்த கம்பர் நாவிதனாகிய எனது சகோதரர்தான்…” என்று பொய்யுரைக்க, அரசவையே குலுங்கி வெடித்திருக்கிறது.
“அரசே, ஒரு நாவிதரின் சகோதரனா உன் அரசவைக் கவிஞன்…?” என்று போலியாளர்கள் எள்ளி நகையாட… அரசன் வெட்கித்து திகைத்து நின்று போயிருக்கிறான்.
ஆம், நாவிதர் என்றால் கீழானவர்கள் என்று கொண்ட காலம் அது.
இன்றும் கூட, அதுதானே நிலைமை?
மதுரை மாவட்டத்தின் மருதங்குடியில் “இரட்டைக் குவளை” என்னும் அந்தக் கேவலம் இன்றும் கூட இருக்கத்தானே செய்கிறது. கண்ணாடி டம்ளர் என்றும், எவர் சில்வர் டம்ளர் என்றும் சில்லம்பலமாக அசிங்கப்பட்டுக் கொண்டேதானே இருக்கிறது.
இன்றைய நிலைமை இவ்வாறிருக்க, சேர நாட்டு அரசவையை காறித்துப்ப நமக்கு ஏது அருகதை?
சரி, அந்தக் கண்றாவியை வழித்துத் துடைத்துக் கொண்டு கட்டுரையின் நோக்கத்தை தொடர்வோம்…
கேளுங்கள், நாவிதரின் சகோதரன்தான் இந்தக் கம்பர் என்று சபைக் கூச்சல் செய்த அன்றைய பொறாமைக்காரர்களின் அறியாமையை புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்ட கம்பர்,
“ஆம், அரசே…இந்த நாவிதன் என் தம்பிதான்…” என்று துணிந்து சொன்னார்.
கம்பரை அரசவையிலிருந்து நீக்க வேண்டும் என்று எல்லோரும் குரல் கொடுக்க, மன்னனும் கம்பரை கனத்த மனதோடு நீக்கி விட்டான்.
கம்பரை அரசனிடமிருந்து பிரித்து விட்டோம் என்று சதியாளர்கள் இறுமாந்திருந்தார்கள்.
எல்லோரும் எள்ளி நகையாடும்படிக்கு கம்பர் என்னை வைத்து விட்டாரே என்று அரசன் உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தான்.
அந்த இரவில், கலைவாணியைப் போற்றி கம்பர் உருகிப் பாடினார்.
பெருங்கருணையோடு தன் முன்னே தோன்றிய கலைவாணியின் இரு பாத சிலம்புகளில் ஒன்றை மட்டும் பெற்றுக்கொண்டு “சென்று வா தாயே…” என்று பணிந்து வழியனுப்பி வைத்தார் கம்பர்.
மறுநாள், “நாவிதன் என்னும் முறையில், என் தம்பிக்குப் பதிலாக நானே இன்று அரசனுக்கு நாவிதம் செய்யப் போகிறேன்…” என்று கம்பர் சொல்ல, கம்பருக்கு முகம் கொடுக்க முடியாமல் அமர்ந்திருந்த அரசனிடம், “அரசே, இதோ எங்கள் பரம்பரை சிலம்பு ஒன்று என்னிடம் உள்ளது. மற்றுமொன்று என் தம்பியிடம்தான் இருந்தாக வேண்டும். அதை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொடுங்கள். பிறகு உங்களுக்கு நான் சவரம் செய்கிறேன்…” என்று கம்பர் சொல்ல…
ஒன்றும் புரியாமல் அரசனும் படைகளுக்கு உத்தரவிட…படைகளின் பிடியோடு சபைக்கு வந்த அந்த நாவிதன்…
“ஐயோ…அரசே, என் தொழில் சத்தியமாக சொல்கிறேன். அப்படியானதொரு சிலம்பு என்னிடம் இல்லவே இல்லை… கம்பர் என் சகோதரரும் இல்லை… கம்பர் என்னைக் காப்பாற்றவே அப்படி சொன்னார், அவர் மேல் எந்தத் தவறும் கொண்டு விடாதீர்கள்…” என்று மண்டியிட்டுக் கதற…
அரசன் திகைக்க…
அந்த நேரம், கலைவாணி அங்கே தோன்றி தன் மற்றொரு காற்சிலம்பைக் கழற்றிக் கொடுத்து, “அரசனே, இதோ உன்னிடம் இருக்கும் சிலம்பின் ஜோடிச் சிலம்பைப் பார். இந்தக் கம்பன் என் மகன்தான் என்பதை அறிவாய்…” என்று அசரீரியாக விடை கொண்டு எழுந்து மறைய…
“இந்த அப்பாவி நாவிதனை மன்னித்து விடு அரசே…” என்று கம்பனும் வேண்டிக் கொள்ள…
“ஐயோ” வென மூர்ச்சையானான் அந்த அரசன்.
வீராசாமி செட்டியார் அவர்களால் 1880இல் தொகுக்கப் பெற்ற “விநோத ரஸ மஞ்சரி” என்னும் புத்தகத்தின் பக்கங்களில், கம்பரைப் பற்றிக் காணப்படும் ரஸமானதொரு குறிப்பு ஒன்றை என்னளவில் சற்றே விரித்துரைத்திருக்கிறேன்.
கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதைக் காட்டிலும், இடத்துக்கு ஏற்றாற்போல தன் ஈகோவை கம்பர் அடக்கி ஆண்ட விதமே நமக்குப் பெரும் பாடமாகி விரிகிறது.
தனக்குண்டான சோழ நாட்டில், “மன்னவனும் நீயோ..” என்று கோபம் காட்டிய அதே கம்பர், அயலூரான சேர நாட்டில் தன் ஆளுமையை அடக்கி வாசித்து சாதித்துக் கொண்டார். அதற்குப் பெயர்தான் அறிவாண்மை.
ஆம், நம் சொந்த வீட்டில் இருப்பது போல வெளியிடத்திலும் வாழ்ந்து விட முடியாது அல்லவா ?
கம்பரது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கும் இந்த இலக்கியத்தரமான அமானுஷ்யப் பாடத்தினை தன் எளிமையான வாழ்க்கையின் மூலமாக சொல்லிக் கொடுத்தவன் “டொக் டொக்”
திருவல்லிக்கேணியில், “டொக்…டொக்” செல்வம் என்று சொன்னால் போதும். “அட நம்மாளுப்பா…” என்பார்கள்.
“டொக் டொக்” செல்வம் ?
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலின் குதிரைப் பாகன். வெகுளியானவன்.
நாள் கிழமைகளில் தெருவடைத்துக் கோலமிட்டிருக்க, மாட வீதிகளில் பெருமாள் கோலாகலமாக வலம் வருவார்.
ப்ரபந்த கோஷ்டிகளுக்கு வெகு முன்பே கம்பீரமாக அந்த வெள்ளைக் குதிரை வரும்.
அதன்மேல் ஆரோகணித்தபடி இரு புறமும் தொங்கிக் கொண்டிருக்கும் மத்தளத்தை “டம்…டம்….” என்று அடித்தபடியே வருவான் “டொக்…டொக்” செல்வம்.
அந்தக் குதிரை அவன் சொன்னபடியெல்லாம் கேட்கும்.
“க்ருக்” – ”ப்யூச்” – “ஃபிர்ர்ர்க்” – “ஷூக்” என்று ஏதேதோ சப்தமெழுப்புவான். மொத்தத்தையும் புரிந்துகொண்டு நிற்கும் , நடக்கும், ஓடும், கனைக்கும்…
அவன் தொட்டுக் கொடுத்தால் போதும் என்று அவனிடம் செல்லம் கொஞ்சும். அவன் எட்டியே உதைத்தாலும் வாங்கிக் கொள்ளும்.
டொக்….டொக் செல்வத்துக்கும் அந்தக் குதிரை என்றால் உயிர்.
ஆனாலும், கோயில் குதிரை வளர்ப்பால் வரும் வருமானம் டொக் டொக்குக்குப் போதவில்லை.
மெரினா சவாரியாக குதிரைகளை வாங்கி விட்டால் நாலு காசு பார்க்கலாம் என்று எண்ணியவன், ராஜஸ்தானில் இருந்து இரண்டு குட்டிகளை பல லட்சம் கொடுத்து வரவழைத்து தன் வீட்டில் வைத்து போஷாக்காக வளர்த்தான்.
முன்னிரவு வேளையில் நன்றாக குடித்துவிட்டு வருபவனுக்காக குதிரைக் குட்டிகள் ஆசையோடு காத்துக் கொண்டிருக்கும்.
அதுகளோடு கொஞ்சோ கொஞ்சென்று புரண்டு கொஞ்சுவான். அப்படியே தூங்கியும் போவான்.
மெரினா சவாரி முடிந்து வரும் குதிரைகளைக் கொண்டு போய் மனித சந்தடி ஓய்ந்து கிடக்கும் லாயிட்ஸ் ரோட்டின் ஒதுக்குப் புறமாகக் கட்டி வைத்து, குதிரைகளுக்கு வயிறாற தீனி போட்டு முகம் தடவிக்கொண்டாடிய பின்தான் வீட்டுக்குத் திரும்புவான்.
அதிகாலையில், சீயக்காய்ப் போட்டு நான்கு தரம் தன் கைகளைக் கழுவிக் கொண்டுதான் பார்த்தசாரதிக் கோயிலுக்குப் போவான்.
திருவல்லிக்கேணியில் வட நாட்டு சேட்டுக் கல்யாணங்களுக்கு கிராக்கி அதிகம் என்பதால் ஒருமுறை கல்யாண சவாரிக்கு பழக்கப்பட்ட பெண் குதிரை ஒன்றை ராஜஸ்தானிலிருந்து தருவித்திருந்தான் டொக் டொக்.
அதனைப் பழகுவதற்காக நான்கு நாள் கோயில் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு அந்தப் பெண் குதிரையோடு கொஞ்சிக் குலாவி தன் வழிக்குக் கொண்டு வந்து வாடகைக்கு அனுப்பினான்.
பார்த்தசாரதிக் கோயில் குதிரை அவன் நினைவிலேயே இருக்க ஒரு எட்டு போய்ப் பார்த்து விடுவோம் என்று வந்தான்.
ஆசையாய் சென்ற “டொக் டொக்” திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோயில் குதிரையின் முகத்தில் ஆசையாக தடவிக் கொடுக்க, சடாரென்று திரும்பிய அந்தக் குதிரை அவன் கையை வெறி கொண்டு கடித்து விட்டது.
அலறித் துடித்து விட்டான் டொக் டொக் செல்வம்.
ரத்தமாக ஒழுக, ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போனார்கள்..
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் ஒரு விரல் பாதியாக துண்டிக்கப்பட்டுக் கட்டுப் போடப்பட்டது.
ஓடோடிப் போய் டொக் டொக்கை நலம் விசாரித்தோம்.
“ச்சே…என்னாடா குதிரை அது… எவ்வளவு செல்லம் கொஞ்சுவ… உன்னைப் போய் இப்படிப் பண்ணிடுச்சேடா டொக் டொக்…”
டொக் டொக் அலறினான்…
”ஐயோ, பெருமாள் குதிரையைத் திட்டாதீங்க…அது நல்லதுதான். என் பிழைப்புக்காக என் வீட்டில் வைத்து நான் வளர்த்த குதிரை பெண் குதிரை. அதன் வாசனைய சரியாக் கழுவாம, அப்படியே கொண்டு போய் அந்த ஆண் குதிரைக்குக் காட்டுனதும் அதுக்கு வெறி வந்து கவ்விடுச்சு. வாசனைய கழுவாமப் போனது என் தப்புத்தான்… அதுக்கு பெருமாள் குதிரையைத் திட்டாதீங்க… ஐயோ பெருமாள் குதிரையைத் திட்டாதீங்க…” என்று தன் இடது கையால் தலையிலடித்துக் கொண்டான் டொக் டொக்.
டொக் டொக்குக்கு புரிந்த அந்த நியாயம் எல்லோருக்கும் ஒரு பாடம்.
நம்மிடம் இருக்கும் வாசனையை எல்லோரிடமும் கொண்டு காட்டி விடுவதில் நியாயமில்லை தானே?
இதில்தான் வைரமுத்து சறுக்கி விட்டார் என்கிறார்கள்.
வைரமுத்து அவர்களின் விஷயத்தைப் பொறுத்தவரையில்… அமானுஷ்யமாக கலைவாணியே வந்து கால் சிலம்பைக் கழட்டிக் கொடுப்பாளா…? தெரியவில்லை.
இன்றளவில் “டொக் டொக்” கின் குதிரை நியாயத்துக்கு குறைவில்லை.
இந்த அபத்தத்தை இன்னமும் நீட்டிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை.
கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com