ஸ்ரீராம் சர்மா
இலக்கியம், இசை, நாடகம், சினிமா, பத்திரிகை, அனிமேஷன், அரசியல் எனப் பற்பல துறைகளிலும் எனக்குக் கொடுப்பினையாக வாய்த்த கெட்டிப்பட்ட நண்பர்கள் பலர் உண்டு.
என்மேல் அவர்களுக்கொரு குற்றச்சாட்டும் உண்டு.
“வரலாற்றுப் பொக்கிஷமாக நின்று நிலைக்க வேண்டியது அல்லவா உங்கள் தந்தையாரின் வாழ்க்கை வரலாறு. அதைத் தொகுத்துப் புத்தகமாக எழுதாமல், வேறென்னமோ கிறுக்கிக்கொண்டிருக்கிறீர்களே?”
கூடிப் பிரியும் நேரங்களில் எல்லாம் அவர்கள் இப்படிக் கொட்டிச் செல்வார்கள். எனக்கது பழகிப்போய்விட்டது. புகழானோர்க்குப் பிறந்தால் கொடுக்க வேண்டிய கட்டாய விலை அது.
திருவள்ளுவருக்குத் திருவுருவம் கொடுத்த எனது தந்தையார் ‘தமிழோவியப் பெருந்தகை’ கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒருவழியாக 25 எபிசோட்களாகத் தொகுத்து எழுதி முடித்தே விட்டேன்.
மைசூர் சமஸ்தானம், நியோகி வம்சம், விகடகவி, காந்தியடிகள், சுதந்திரப் போராட்டம், நாடகம், சினிமா, மதீனா லாட்ஜ், மாடர்ன் தியேட்டர்ஸ், எஸ்.எஸ்.வாசன், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர், கலைஞர், கண்ணதாசன், பரத நாட்டியப் படைப்பு, லக்ஷ்மி லாட்ஜ், ஓவியர் மாருதி என இன்னுமின்னும் நீளும் எனது தந்தையாரின் வரலாற்றுச் சுவடுகள் எனக்கே வியப்பை உண்டாக்கிவிட்டன.
அன்றைய சேலம் ஜில்லா – காமாட்சிபட்டியில் தொடங்கி, திருவல்லிக்கேணியில் முடிந்த அவரது 81 ஆண்டுக்கால நீண்ட நெடிய வாழ்வில் அத்தனையத்தனை சுவாரஸ்யங்கள்.
அவரோடு பழகிய மாமேதைகள் ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு இந்த மண்ணில் வாழ்ந்து சென்ற மாபெரும் ஆளுமைகள்.
அவர்களில் 25 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கும் எனது தந்தையாருக்கும் இடையே நிகழ்ந்த சுவையான சம்பவங்களை மட்டும் புகைப்படங்களோடு தொகுத்து மிகச் சுருக்கி முடித்திருக்கிறேன்.
சென்ற நூற்றாண்டின் அரியதொரு பொக்கிஷமாக, புத்தகமாக விரைவில் வெளிவரப் போகிறது.
அதிலொரு எபிசோடை மட்டும் எனதினிய மின்னம்பலம் வாசகப் பெருமக்களுக்குப் பகிர விரும்புகிறேன்.
டாக்டர் வ.நம்பி
(எபிசோட் – 12)
கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றில், வ.நம்பி என்னும் பெயரைத் தவிர்க்கவே முடியாது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்துபட்ட தமிழோவியப் பெருந்தகையின் கடைசி நாள்கள் மொத்தமும் டாக்டர் வ.நம்பி அவர்களின் மருத்துவ சிகிச்சையை மட்டுமே நம்பி இருந்தது.
டாக்டர் நம்பி அவர்களைப் பற்றிச் சுருங்கச் சொல்வதென்றால், அன்றைய சென்னையின் மிகப் பிரபலமான மருத்துவர்.
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலுக்கு அருகே, சலீவன் கார்டன் தெருவில்தான் டாக்டர் நம்பி அவர்களின் பிரசித்தி பெற்ற ‘கிளினிக்’ அமைந்திருந்தது.
அவருடைய திறமைக்கும் புகழுக்கும் அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று செட்டிலாகி எவ்வளவோ சம்பாதித்துக் குவித்திருக்கலாம். இன்னுமின்னும் பெரும் புகழ் ஈட்டியிருக்கலாம்.
ஆனால், தன் சொந்த மண்ணின் மக்களுக்காகத் தன் முழுத் திறமையையும் அனுபவத்தையும் அளித்துக் காத்தவர், காத்துக்கொண்டிருப்பவர் வ.நம்பி அவர்கள்.
மருத்துவ உலகில் ஆழங்காற்பட்டவர். கை ராசிக்காரர்.
நம்பி டாக்டர் நாடி தொட்டுவிட்டால் போதும் என்று சென்னை நகரெங்கிலுமிருந்து வரும் மக்கள் அந்த சலீவன் தெருவின் பாதி நீளம் வரை வரிசை கட்டி நின்றுகொண்டிருந்ததை என் கண்ணால் கண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் ஏழை பணக்கார பேதங்கள் இருக்காது. யாராக இருந்தாலும் டோக்கன் சிஸ்டம்தான். இரவு எவ்வளவு நேரமானாலும் இல்லை என்று சொல்லாமல் நின்று மருத்துவம் பார்த்துக் கொடுப்பார்.
விலையுயர்ந்த மருந்துகளை எழுத மாட்டார். கட்டணமும் குறைவாகவே பெற்றுக்கொள்வார்.
மருத்துவர்கள் என்றாலே, பிரிஸ்கிரிப்ஷனில் மருந்தின் பெயர்களை கிறுக்கிச் சுழித்து எழுதுவதே வழக்கம். ஆனால், நம்பி டாக்டர் எழுதும் மருத்துவப் பரிந்துரைச் சீட்டு மிகத் தெளிவாக அச்சடித்தது போல் இருக்கும்.
என்ன மருந்து எழுதியிருக்கிறார் என்பதை ஒரு குழந்தையால்கூடச் சட்டெனப் படித்துவிட முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடம் ஒரு சிறப்புக் குணம் உண்டு.
பிரிஸ்கிரிப்ஷன் பேப்பரின் முடிவில் தன் கையொப்பத்தை “வ.ந” என்று அழகாகத் தமிழில் இட்டுக் கொடுப்பார்.
அது, அவரது தமிழாய்ந்த பரம்பரையால் வந்த அருங்குணம். மருத்துவர் வ.நம்பி வேறு யாருமல்லர்.
திருக்குறளுக்கு உரையாத்த போற்றுதலுக்குரிய தமிழ்ப் பேரறிஞர் ஐயா மு.வரதராசனார் அவர்களின் திருமகன்தான் டாக்டர் வ.நம்பி.
மு.வ அவர்கள் அப்பாவின் கெழுதகை நண்பர்.
1950களில் திருவள்ளுவர் திருவுருவத்தை உயர்த்திப் பிடித்ததில் முன்னணியில் இருந்தவர் ஐயா மு.வ.
மு.வ. அவர்களும் அப்பாவும் குடும்ப நண்பர்களாக பழகித் திளைத்தவர்கள்.
“உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளும் படிக்குத் திருவள்ளுவருக்குப் பொதுவானதொரு திருவுருவம் கண்டது போல, தமிழ்த்தாய்க்கும் ஒரு திருவுருவம் அமைத்துக் கொடுப்பார் எனது நண்பர் வேணுகோபாலர்” என்று முன்மொழிந்தவர் மு.வ.
எனது தந்தையார், தனது நீண்ட நெடிய ஆய்வுக்குப் பின் 1979இல் தமிழ்த்தாய்க்குத் திருவுருவம் கண்டு வரைந்து வைத்தபோது, “தமிழ்த்தாயைக் காண என் கெழுதகை நண்பர் மு.வ. இன்றில்லையே” என்று பெருங்கவலைப்பட்டார். வானொலிப் பேட்டியிலும் பதித்தார்.
அந்த நட்புறவின் நீட்சியாக, 1984இல் வலது கரம் செயலிழந்து, பேச்சிழந்து படுத்த படுக்கையாக இருந்த கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களுக்கு, தனது ஓயாத வேலைபளுவுக்கிடையேயும், அழைத்தபோதெல்லாம் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளித்தவர் வ.நம்பி.
முதன்முறை அவர் சிகிச்சை அளிக்க எங்கள் இல்லம் வந்தபோது, என்னை அழைத்த அப்பா ஒரு பிரவுன் கவரை எடுத்து வரச் சொன்னார். அந்தக் கவரில் ஒரு தொகையை வைத்து, டாக்டர் நம்பியிடம் தன் இடது கையால் தடுமாறிக் கொடுத்தார்.
அதை வாங்க மறுத்த டாக்டர் நம்பி,“ஐயா, எங்களுக்கெல்லாம் திருவள்ளுவரை வரைந்து தந்தது உங்களது வலது கரம். என் தந்தையார் ஸ்தானத்தில் நின்று எனது க்ளீனிக்கை ரிப்பன் வெட்டி ஓப்பன் செய்து வைத்தது உங்களது வலது கரம். அந்தக் கரம் இன்று செயலிழந்து கிடக்கிறது. முதலில், என்னாலான வரை முயன்று உங்களுக்குப் பேச்சை வரவழைத்துவிடுகிறேன். உங்கள் வாயால் என்னைப் பெயரிட்டு அழைக்கும்படி செய்து விடுகிறேன். அதுவே எனக்குப் பெரும் பணி” என்றார்.
ஆறே மாதங்களில் தனது அசாத்திய மருத்துவத்தால், கம்ப ராமாயணச் செய்யுள்களை எல்லாம் மடமடவெனச் சொல்லும் அளவுக்குத் தமிழோவிய மேதைக்குப் பேச்சை வரவழைத்து விட்டார்.
நிற்க.
அப்பாவுக்கு பால்ய கால நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் திரு. சுப்ரமண்யம் பிள்ளை. அப்பாவின் ஆரம்ப கால ‘சுதேச டிராமா பார்ட்டி’யில் ஸ்த்ரீ வேடமிட்டவர்.
எல்லோரும் அவரை சேலம் சுப்புடு என்றே அழைப்பார்கள். நாங்கள் அவரை சுப்புடு சார் என்போம். சேலத்தில் ஏராளமான நிலபுலன்களை உடைய பெரும் செல்வந்தர். அப்பாவின் மேல் அளவற்ற அன்பு கொண்டவர்.
அப்போது அப்பாவுக்குப் பேச்சு வந்துவிட்டிருந்தது. ஆனால், வலது காலில் கடும் வலி ஆரம்பித்துவிட்டிருந்தது. ரூமாசில் எனப்படும் அலோபதி ஆயிலைப் பாதம் முதல் தொடை வரை ஊற்றி நீவி விடுவது எனக்கு வழக்கம்.
வீட்டுக் கதவு வேகமாகத் தட்டப்பட்டது. ஓடோடித் திறந்தேன். கண்ணீரும் முறைப்புமாக நின்றுகொண்டிருந்தார் சுப்புடு சார்.
தன் பால்ய நண்பருக்குக் கை கால்கள் செயலிழந்துவிட்டன என்பதைத் தாமதமாக அறிந்துகொண்டு பதறியடித்து ஓடி வந்தவர்,
“ஐயோ, எங்கள் வேணுவுக்கு இப்படி ஆகிவிட்டதே… கடவுளே உனக்குக் கண்ணில்லையா” என்று ஏதேதோ சொல்லிச் சத்தமாகப் புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
மதியம் வந்த சுப்புடு சார் மாலை வரை புலம்பிக்கொண்டே இருந்தார். “சும்மா இருடா, எனக்கு எல்லாம் சரியாப் போய்விடும்” என்று அப்பாவே அவரை தேற்றும்படி ஆகிவிட்டது.
அது, நம்பி டாக்டர் வரும் நேரம்.
நம்பி டாக்டர் வந்துவிட்டால் வீடே நிசப்தமாகிவிடும். ஊசி விழுந்தால் எதிரொலிக்கும் அளவுக்கு எல்லோரும் மௌனமாகிவிடுவோம்.
நோயாளியைக் கூர்ந்து அவதானிக்கும் வழக்கமுடைய நம்பி டாக்டருக்குக் கொஞ்சம் சப்தம் கேட்டாலும் கோபம் வந்துவிடும்.
அப்பாவும் நம்பி டாக்டரும் மெல்லப் பேசிக்கொள்வார்கள். பிரிஸ்கிரிப்ஷன் கிழிக்கும் சத்தம் மட்டுமே எங்களுக்குக் கேட்கும்.
இந்த முறை சூழல் வேறு மாதிரியாகிவிட்டது.
சுப்புடு சார் இடைவிடாமல் புலம்பிக்கொண்டே இருந்தார். நம்பி டாக்டருக்கு அது தொந்தரவாக இருந்ததோ என்னவோ அவரைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தார்.
அப்பா குறுக்கிட்டு, “மன்னிக்கணும் நம்பி, இவர் என்னுடைய பால்ய நண்பர். பேரு சுப்ரமணியம் பிள்ளை. ரொம்ப நல்லவன். வெகுளியானவன்” என்று சொல்லி, அமைதியாக இருக்கும்படி சுப்புடு சாருக்கு சைகை காட்டினார்.
சுப்புடு சார் அடங்காமல்,
“டாக்டர், நீங்க திறமையானவர், கைராசிக்காரர் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சர்மா என் நண்பன். சமஸ்த்தானத்துல சம்பாதிச்சவன். எத்தனையோ பேரை வாழ வெச்சவன். இவன் இப்படி வலியோட போராடுவதைக் காணச் சகிக்கல. டாக்டர், கெஞ்சிக் கேக்குறேன். உங்களுக்கு என்ன வேணும்னாலும் தாரேன். என்னையே தாரேன். இவன் வலியை மட்டும் இல்லன்னு ஆக்கிடுங்க… ப்ளீஸ்…”
டாக்டர். மூக்கை நிரடியபடி மெல்லச் சிரித்துத் தலையாட்டினார்.
பரிசோதனை முடிந்து அப்பாவின் வலது கையை மெல்லப் பற்றினார் நம்பி டாக்டர்… “ஐயா, ஒன்றும் கவலைப்படுவதற்கு இல்லை.”
அப்பா நன்றியோடு தலையசைத்தார்.
வழக்கம் போல ஐந்து வகையான மாத்திரைகளை தன் பிரிஸ்கிரிப்ஷனில் எழுதியவர், சற்றே இடப்புறம் திரும்பி சுப்புடு சாரை உற்றுப் பார்த்தார்.
பிறகு, மெல்லிய சிரிப்போடு அப்பாவின் பக்கம் திரும்பிச் சொன்னார்.
“ஐயா, உங்கள் கால் வலி தீரத் தன்னையே தருகிறேன் என்கிறார் உங்கள் பால்ய நண்பர். சரி, அப்படியே ஆகட்டும். உங்கள் வலி தீர அவரையே தந்துவிடுகிறேன்.”
ஆறாவதாக ஒரு புது மருந்து ஒன்றை எழுதி நீட்டினார்.
அதை வாங்கிப் படித்த அப்பா வெடித்துச் சிரித்தபடி அந்தச் சீட்டை சுப்புடு சாரை அழைத்துக் காண்பித்தார்.
அதில், வலி தீர – tab. SUBDU என்று எழுதப்பட்டிருந்தது.
SUBDU என்பது சிறந்த வலி நிவாரணி மாத்திரை. [Used for: Treating rheumatoid arthritis]
அதைப் படித்த சுப்புடு சார் கவலை மறந்து சட்டென எழுந்து நம்பி டாக்டரைப் பார்த்துக் கைகூப்பிக்கொண்டு கண்ணில் நீர் வரச் சிரித்தார்.
“இப்படியே சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டிருங்கள். அது போதும் எனக்கு.”
பேரறிஞர் மு.வ அவர்களின் திருமகனார் தன் மருத்துவப் பெட்டியைத் தானே தூக்கிக்கொண்டு, மெல்லப் படியிறங்கி, காரிலேறிப் போனார்.
மேலோர் மேலோரே!
�,”