– ஸ்ரீராம் சர்மா
கொண்டாட்டம்தான் வாழ்க்கை! கொண்டாடத்தானே வாழ்க்கை!
வசதி படைத்தவர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் தங்கள் நிலைமைக்கு ஏற்றார்போல, விட்டுக்கொடுக்காமல் கொண்டாட விரும்பும் பண்டிகை ஒன்று உண்டென்றால் அது தீபாவளி.
இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான். கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல இந்துக்களுக்கு தீபாவளி.
தீபாவளியைப் பலர் பலவிதமாகக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.
சென்னையில் குடியேறிய வடநாட்டு ‘சேட்டு’க்கள் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுவார்கள். பல வகை இனிப்புகள், ஜிகு ஜிகு ஆடைகள், பல வண்ணம் காட்டும் பட்டாசுகள் என அவர்களது கொண்டாட்டம் ஆடம்பரமாக அமர்க்களப்படும். நாங்களும் சேட்டுக்கள்தான் என்று தங்கள் தகுதிக்கு மீறி அட்டகாசம் செய்யும் ஏழை வடநாட்டவர்களும் சென்னையில் உண்டு.
வடசென்னை மக்கள் சினிமாவோடும் கறி விருந்தோடும் கொண்டாடும் தீபாவளியோ தனி ரகமானது; தடபுடலானது.
தென்சென்னையில் திருவல்லிக்கேணியில் நான் கண்ட தீபாவளி வேறு விதமானது. ‘மிடில் க்ளாஸ்’ மக்களின் களேபரம் அது.
திருவல்லிக்கேணி மக்களுக்கு ஆடம்பரம் அவசியமில்லை. பண்டிகையைத் தங்கள் அளவில் கொண்டாடித் தீர்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
20 நாள்களுக்கு முன்பிருந்தே சிறுவர்களின் தீபாவளி ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பித்து விடும். காலண்டரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்போம்.
தீபாவளி நெருங்க நெருங்க ஜுரம் அதிகமாகும்.
அதிகாலை, மூன்று மணி போல தொடங்கிவிடும் திருவல்லிக்கேணியின் தீபாவளி சலசலப்பு.
தூக்கம் பிடிக்காத தாத்தாவும், பாட்டியும் எழுந்து நடமாடத் தொடங்க வீட்டின் முதல் சத்தம் ஆரம்பமாகி விடும். தாத்தாவின் உசுப்பலில், பொடிசுகள் கண்முழிப்பு கொண்டு விடுவோம்.
விடிந்தும் விடியாத அந்த அதிகாலை நேரத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்து வெளிவாசல் வந்து இருளும் குளிரும் போர்த்திய அந்த ‘புதிர் காலை’யைக் காண்பதில் ஆரம்பிக்கும் அந்த சுகம்.
‘ஊத்தை வெடி’ என்று ஒன்று உண்டு. அதாவது, பல்கூட தேய்க்காமல் வீட்டைவிட்டு வெளியேறி, ‘ஏரியாவின்’ முதல் வெடியை வைத்து விடுவதற்குப் பெயர்தான் ஊத்தை வெடி..
அது பெரும்பாலும் ‘ஆட்டாம் பாம்’ என்னும் கரு நிறக் குண்டாக இருக்கும். அதில்தான் மகா சத்தம் வெளிப்படும். ஊத்தை வெடிக்கு ஏரியா போட்டி ஓங்கும். நீ முந்தி, நான் முந்தி என வீதிக்கு ஓடி வரும்.
அப்பாவின் மேற்பார்வையில் வரிசையாக நிற்க, உச்சந்தலையில் அம்மா அழுந்த வைத்து விடும் நல்லெண்ணெய் மெல்ல வழிந்து கண்களில் பட்டு கதற விடும்.
‘ஆண்டாள் ஸ்நானப் பவுடர்’ கலந்த வாசனை வென்னீரில் குளியல்.
நல்லெண்ணெய் பட்ட எரிச்சலின் நீட்சியை, புலி மார்க் சீயக்காய் திறம்படக் கவனித்து பாத்ரூமில் இருந்து ‘ஓடு நாயே’ என்று வெளியனுப்பும்.
தாத்தா பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கப் போகும்போது, “எட்ட நின்னு பட்டுக்காம வெடிக்கணும் செல்லம்… தப்பித் தவறி ஆட்டம் போட்ட… உங்கப்பன் பிச்சிடுவான், ஜாக்கிரதை…” என்று கூடவே 10 ரூபாய் கிடைக்கும்.
அம்மா புதுத்துணியில் மஞ்சளும் குங்குமும் வைத்து எடுத்துக் கொடுக்க, அப்பா தீபாவளி மலரை ஒரு கையில் பிடித்தபடியே அதை வாங்கிக் கொடுப்பார். பட்டாசுப் பெட்டியை திறந்துவிட்டு, “ஜாக்கிரதை” என்பார்.
புதுத்துணி அணிந்தவுடன், தெருவில் இறங்கி பட்டாசு வெடிக்க மனம் ஆலாய்ப் பறக்கும். ஆனால், அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது.
ராமசாமி வரட்டும். அவருக்கு மரியாதை ஆன பின்னே வெளியே போகலாம் என்பார்கள்.
ராமசாமி!
அன்றைய திருவல்லிக்கேணியில், வாசுதேவபுரத்தின் முனையில் அவரது சலூன் அமைந்திருந்தது. முடி திருத்துகிறேன் பேர்வழி என்று கதறக் கதற பின் மண்டையில் மெஷின் ஓட்டி அனுப்பும் நாவிதர்.
தீபாவளி சமயம் மட்டும் முக்கியஸ்தர்களின் வீடுகளுக்கு நேரில் வந்து “நாதஸ்வரம்” வாசிப்பார். அவருக்கு ஜவுளிகளும் இனிப்பும் பரிசுப் பணமும் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
அவர் வந்து ஆண்டு முழுவதும் கொண்ட “ராக தாகத்தை” எல்லாம் விலாவாரியாக வாசித்துக் காட்டுவார். எதிரே கையைக் கட்டிக்கொண்டு அப்பா ரசித்துக்கொண்டிருப்பார்.
ராமசாமிக்கு மரியாதைப் பணம் எடுக்க அப்பா உள்ளே செல்லும் சமயம். வேகமாக அவரிடம் ஓடோடிச் சென்று, “சீக்கிரம் முடிச்சுக்குங்க சார், வெடிக்கப் போகணும்…” என்று மெல்லிய குரலில் அவசரமாகக் கெஞ்சுவோம்.
“இருங்கப்பா, அப்பாவுக்கு பாரதியாரோட “சின்னஞ்சிறு கிளியே…” ரொம்பப் பிடிக்கும். வாசிச்சுட்டுப் போறேன்…” என்று சீவாளியை மாற்றிப், “பீப்… பீ…” என்று சரி பார்க்க ஆரம்பிப்பார்.
அதற்குள் வெளிச்சம் வந்து வீதியெங்கும் மாக்கோலங்கள் போடப்பட்டிருக்கும்.
ஆள விடுங்கடா சாமி என்று ஒட்டு மொத்த திருவல்லிக்கேணியும் தெருவில் இறங்கும்.
தேங்காய் சிரட்டையை கவிழ்த்து ஆட்டாம்பாம், சாணியில் லக்ஷ்மி வெடி, கரண்ட் கம்பங்களுக்கு இடையே கயிறு கட்டி “ட்ரெயின்”, குப்பைகளைக் குவித்து வைத்து சரவெடி, ஒட்டடைக் கொம்பில் செருகி ராக்கெட் என திருவல்லிக்கேணியே அமளிதுமளிப்படும்.
பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கும்போதே அம்மா அதட்டி அழைத்து விடுவாள். அப்பாவின் முகம் வாசலில் தெரியும் வரை வெடித்துக் கொண்டிருப்போம். அதன் பிறகு, சர்வ நாடியும் ஒடுங்க, பயபக்தியோடு அப்பா அம்மாவுடன் பார்த்தசாரதி ஸ்வாமி தரிசனம்.
திரும்பியவுடன் சுடச்சுட இட்லியும் பட்டை மணக்கும் குருமாவும்.
அதன் பிறகு, பெரியவர்கள் தெருவில் கூடி தீபாவளி மலர்களில் பெஸ்ட் விகடனா – கல்கியா என்று கருத்து மோதல் நடத்திக் கொண்டிருப்பார்கள்.
சுமார் 11 மணி போல பெரியவர்கள் எல்லாம் வீடடைந்து குறட்டையை ஆரம்பித்து விட, காலியான திருவல்லிக்கேணி தெருக்களில் கிரிக்கெட் ஆரம்பிக்கும்.
அடடா, தீபாவளி நாளின் தெரு கிரிக்கெட் தனி சுகம்.
மீர்சாகிப்பேட்டையிலிருந்து முஸ்லிம் சிறுவர்கள், சாந்தோமிலிருந்து கிறித்துவ சிறுவர்கள் என சகலரும் கூடி விடுவார்கள். தீபாவளி பட்சணத்தை ஒருபிடி பிடித்துவிட்டு மாலை நாலு மணி போல்தான் கிளம்புவார்கள்.
கொஞ்சம்கூட களைப்போ, அலுப்போ தட்டாத தீபாவளி அந்த நாளைய தீபாவளி.
மாலை, வீடுகளில் பாட்டுக் கச்சேரி நடக்கும். மாமிகள் புதுப் புடவையோடு வருவதும் போவதுமாக இருப்பார்கள்.
போகிறபோக்கில், “நன்னா படிக்கறயோல்லியோ…” என்று கொளுத்திப் போட்டுப்போவார்கள். கதி கலங்கும். அப்பா பக்கம் திரும்பாமல் சிட்டாய் பறந்து ஓடிப் போவோம்.
தீபாவளி நாளில் இரவு உணவருந்தியதாகச் சரித்திரமேயில்லை. களைப்பும், கனவுகளுமாய் 8 மணி போலவே உறங்கிப் போவோம்.
இருப்பதை வைத்து, எல்லாம் அடைந்துவிட்டதைப் போன்றதொரு திருப்தியை வெளிப்படுத்தி கொண்டாடி தீர்த்து விடுவதில் திருவல்லிக்கேணி வாசிகளுக்கு நிகரில்லை.
இன்றைய திருவல்லிக்கேணி, அன்று போலில்லை.
”மெர்சலான” வேறு முகம் காட்டுகிறது.
“அப்பா, காலையில நாலு மணிக்கு ப்ரீமியர் ஷோ. மூணு ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து போறேன். எல்லாரையும் நம்ம வீட்டுக்கு வர சொல்லிட்டேன். காரை எடுத்துக்கிட்டுப் போகட்டுமா…?”
அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல், கொஞ்சம் முறைத்துப் பார்க்க முயன்றால்…
“சரி, சரி… குளிச்சுட்டே போறேன். போதுமா…”
நரகாசுரா, நீ இறக்காமலேயே இருந்திருக்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com