ஐசியுவில் சிகிச்சை பெறும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியை அவரது மகன் நேற்று நேரில் சந்தித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 20 நாளாகச் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்பிபிக்காகப் பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவரது மகன் எஸ்பிபி சரண், “புதிய அப்டேட் கொடுக்கும் முன் சில விஷயத்தை விளக்க விரும்புகிறேன். அப்பாவுக்கு கொரோனா நெகட்டிவ் என்று ஒரு செய்தி பரவியது. என்னுடைய பிஆர்ஓ நிகில் முருகன் இதுகுறித்து என்னிடம் கேட்டறிந்தார். பூஜையில் இருந்ததால் இந்த பிரஸ் நோட்டை ஓகே செய்து விட்டேன். அதற்கு பிறகுதான் அதில் அப்பாவுக்கு கொரோனோ நெகட்டிவ் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அப்பாவுக்கு பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என எதுவாக இருந்தாலும் அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவமனை நிர்வாகம் மாலையில் ஒரு பிரஸ் நோட் வெளியிட்டது. அதில் அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன்தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இரண்டு வாரங்கள் கழித்து அப்பாவை நேரில் சென்று பார்த்தேன். அவர் விழித்துக் கொண்டுதான் இருந்தார். மருந்துகள் வழங்கப்படுவதால் மயக்க நிலையிலிருந்தார். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். அவர் எப்படி இருக்கிறார் என்பதை எல்லாம் கேட்டறிந்து அவருக்காக நடைபெறும் பிரார்த்தனைகள் பற்றியும் தெரிவித்தேன். அவர் வலிமையாக மீண்டு வர வேண்டும் என்று கூறினேன். இதற்கு அவர் தம்ஸ்அப் காட்டினார்.
நான் எப்படி இருக்கிறேன், அம்மா எப்படி இருக்கிறார் என்றெல்லாம் கேட்டறிந்தார். அவர் சிகிச்சை பெறும் அறையில் ஒலிபரப்பப்படும் பாடலுக்கு ரெஸ்பான்ஸ் கொடுத்தார்.
நீங்கள் கொடுத்த பிரசாதம் எல்லாம் ஐசியு டீமிடம் கொடுக்கப்பட்டு அவர் அருகிலேயே வைக்கப்பட்டிருக்கிறது .
அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என்னைப் பார்த்ததும் அப்பா மகிழ்ச்சி அடைந்தார். அடிக்கடி அவரை சென்று பார்க்கப் போகிறேன். இது அவருக்கு நல்ல ஊக்கமளிக்க உதவும். அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் எனது குடும்பம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அவர் மீண்டும் நம்மிடம் திரும்பி வந்துவிடுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
**-கவிபிரியா**�,