கொரோனாவால் அமெரிக்கா திணறி வரும் நிலையில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி புதிய வரலாற்றை படைத்துள்ளது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்” கிட்டதட்ட 10 ஆண்டுகளாகவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டு வந்தது. அதன்படி நேற்று சனிக்கிழமை பிற்பகல் (3.22 மணிக்கு) , இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.22 மணிக்குத் தனது முதல் குழு பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட் மற்றும் க்ரூ டிராகன் விண்கலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
நாசாவின் டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மேல் ஒரு வெள்ளை மற்றும் கருப்பு, புல்லட் வடிவ டிராகன் காப்ஸ்யூலில் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனுபவத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்ட இவர்கள் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளனர்.
நாசாவுடன் கைகோர்த்த முதல் தனியார் நிறுவனம் மற்றும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை தற்போது கொண்டுள்ளது எலான் மஸ்க்கின் “ஸ்பேஸ்எக்ஸ்” .
2011 ஆம் ஆண்டுக்கு பிறகு, விண்வெளி வீரர்கள் அமெரிக்க மண்ணிலிருந்து, முதல் தடவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். வர்த்தக ரீதியான பயணத்தின் புதிய விடியலாக இந்த பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும், முதல்கட்டமாக சுமார் 2.5 நிமிடங்களுக்கு விண்ணில் பறந்த பிறகு, ராக்கெட்டிலிருந்து முதல் பகுதியான பூஸ்ட்டர் பிரிக்கப்பட்டு பூமிக்குத் திரும்பும். இது புளோரிடா கடற்கரையில் அட்லாண்டிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள “ஆஃப் கோர்ஸ் ஐ ஸ்டில் லவ் யூ” என்ற ஸ்பேஸ்எக்ஸின் ட்ரோன் கப்பலில் தரையிறங்கும்.
இரண்டாம் கட்டமாக ட்ராகன் பூமியை ஒரு வட்டப்பாதையில் சுற்றி வரும். சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நொடிக்கு 7.66 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. அதன் வேகத்திற்குத் தனது எந்திரத்தை தயார்ப்படுத்திக் கொள்வதற்காக ட்ராகன் பூமியை வட்டப்பாதையில் சுற்றி வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது.
இதையடுத்து, 19 மணி நேரத்திற்கு பிறகு ட்ராகன் தாமாகவே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைத்துக் கொள்ளும். இதனை வரவேற்பதற்காக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் காத்திருக்கின்றனர்.
2011ல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இல்லை. ரஷ்யாவின் சோயஸ் விண்வெளி ராக்கெட்டைதான் நாசா நம்பி இருந்தது. இந்த சூழலில் அமெரிக்க ராக்கெட்டில், வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க மண்ணில், அமெரிக்க விண்வெளி வீரர்களுடன், அமெரிக்க ராக்கெட் விண்ணுக்குப் புறப்பட்டுள்ளது புதிய சாகப்தம் என்று ராக்கெட் வடிவமைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பல துன்பங்களைச் சந்தித்து வரும் நமக்கு இந்த பயணம் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.
**-கவிபிரியா**
�,”