கழற்றிவிடப்படுகிறதோ தமிழகம்? – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை உற்று நோக்கும்போது சில சந்தேகங்கள் எழுகின்றன.

**முதலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜகவுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டு,

தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வாய்ப்பை இழக்கும் காங்கிரஸுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு,

கலைஞர் என்னும் ஆகர்ஷணத் தலைவரின் தோற்றம் இல்லாமல் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட க்ளீன் ஸ்வீப் அடித்திருக்கும் திமுகவுக்கும் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அதை அமரவைத்துக் காட்டிய அதன் தலைமைக்கும் பிரத்யேக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு கட்டுரைக்குள் போவோம்.**

நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவைப் பொறுத்தவரை தனிப் பெரும்பான்மை என்பதையும் கடந்து சென்ற தேர்தலைவிட 21 சீட்கள் கூடுதலாகப் பெற்று 303 என்னும் எண்ணிக்கையில் அசுர பலத்தோடு அமர்ந்துவிட்டது .

ஆனாலும், மொத்தமும் வடநாட்டுப் புதையல்தானே அன்றி தென்னாட்டுக்குள் ஏதுமில்லை. கர்நாடகாவைத் தவிர…

ஆந்திரம், கேரளம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர்களுக்குக் கிடைத்தது என்னமோ கலர்கூட அடிக்கப்படாத வெறும் காலிப் பானைதான்.

தென்னிந்தியா பாஜகவைச் சுத்தமாகப் புறக்கணித்திருக்கிறது.

நாடே ஒரு முடிவை நோக்கி நகரும்போது தென்னிந்தியா மட்டும் தனித்ததோர் முடிவை எடுக்குமா? எடுத்தது! ஏன் எடுத்தது, எதனால் எடுத்தது என்பது பற்றியெல்லாம் பல கருத்துகளும் நியாயங்களும் இங்கே இருக்க, நம் கேள்வி வேறு ஒன்றாகி நிற்கிறது.

வடஇந்தியா முழுவதும் ஏறத்தாழ க்ளீன் ஸ்வீப் என்னும் அளவுக்கு வென்ற பாஜகவைத் தென்னிந்தியா புறக்கணித்ததா அல்லது தென்னிந்தியாவை பாஜக புறக்கணித்ததா என்பது உரையாடிக் கவனிக்க வேண்டியதாகிறது.

தென்னிந்தியா தனக்கென்று ஒரு தனித்த முடிவை எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம், அதன் மேல் செலுத்தப்பட்ட அக்கறையின்மை எனக் கொள்ளலாமா எனில், அது ஏன்?

பாரதப் பிரதமரோ அல்லது பாஜகவின் தலைவரோ இதுவரை இந்தத் தென்னிந்தியத் தேர்தல் முடிவைக் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லையே ஏன்? அது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே ஏன்? எதிர்பார்த்திருந்தார்களோ…

தென்னகத்துக்கான அந்த அக்கறையின்மையின் முன்னணியில் இருப்பது தமிழகம் என்பது நமக்குக் கசப்பூட்டுகிறதே… அந்த அக்கறையின்மையாகப்பட்டது சீனா, தென்னிந்தியாவுக்குள் ஊடுருவிவிடக்கூடும் என்னும் அச்சம் சுமந்து ஏற்கெனவே மின்னம்பலத்தில் வெளிவந்த “ஸிங்க் ஸூயி” கட்டுரைகளுக்கு வலு சேர்த்துவிடாதா ?

அதுபற்றி எங்களுக்கென்ன என்று வாளாவிருக்கிறார்களோ..?

கேரளாவில் ஆளுங்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய அதற்குப் பதிலாக அங்கே கொலு மண்டபம் கண்டிருப்பது நாடெங்கும் தோற்ற காங்கிரஸ்.

மொத்தமுள்ள 20 இடங்களில் 19 இடங்களை காங்கிரஸ் வென்றெடுக்க ஓர் இடத்தை மட்டும் சிபிஎம் வென்றெடுக்க எந்தச் சலனமுமில்லாமல் கையைத் துடைத்துக்கொண்டு புதுடெல்லியை நோக்கி நடைபோட்டிருக்கிறது பாஜக.

ஆந்திராவைப் பொறுத்தவரை கேட்கவே வேண்டாம். சுத்தம். தெலங்கானாவில் மட்டும் நாலு சீட். அது என்ன கணக்கில் என்று தெரியவில்லை.

**தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவர்கள் ஆதிமுதலே அக்கறைப்படவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.** கடந்த ஐந்தாண்டுகளில் இங்கே அவர்கள் போட்ட தெருமுனைக் கூட்டங்கள், மாநாடுகள் எத்தனை?

ஒருமுனைப்பட்ட தலைமை, ஒருங்கிணைந்த செயற்பாடுகள், தொண்டர்களை ஊக்குவிக்கும் கூட்டங்கள், அவர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புகள் என எதுவுமே இல்லாமல் ஏர்போர்ட் பாலிடிக்ஸ் செய்தபடியே காலம் கடத்திய விதமும் அதை எந்தக் கேள்வியும் கேட்காமல் மத்தியத் தலைமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததும் நம்மை தலைப்பை நோக்கி அழைத்துச் செல்கிறது.

மத்தியில் தனித்து ஆளும் ஒரு கட்சியின் மாநிலக் கிளை போலவே இல்லாமல் ஏதோ ‘காத்தடிச்சுதா; கதிர் ஆடிச்சா….’ என்பது போலவே அரசியல் செய்து நகன்று இருந்த விதம் ஆச்சரியமானது.

தேர்தல் அரசியலில் இருக்கும் ஒரு கட்சிக்கு அப்படி என்ன அக்கறையின்மை?

**தேர்தலுக்கு முந்தைய கூட்டணிப் பேச்சு வார்த்தையில் வெறும் ஐந்து இடங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு, இரண்டாக உடைந்த மாநிலக் கட்சி ஒன்றின் வலுவற்றதொரு பகுதியைக் கூட்டணிக்குத் தலைமையேற்கச் சொல்லிக் கிளம்பிப் போன விதமும் குறித்துக்கொள்ள வேண்டியது.**

தேர்தல் காலத்தில் முகநூல் வெளியில் விவரமற்ற அப்பாவி அட்டைக் கத்திகள் மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தாலும் களத்தில் இறங்கிய சொற்பர்களோ பாவம் டெய்லர் ஊசியைக் கொண்டு பாறைக்குள் தாமரையைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள்.

**தேர்தல் அரசியலில் பழந்தின்று கொட்டை போட்ட திமுகவிடம் மோதுவது போலா மோதினார்கள்? தூத்துக்குடியில் களமாடிய கனிமொழி ஒருவரின் கூரிய அரசியலாட்டத்துக்கு ஐவரின் பரப்புரையும் ஈடாகுமா என்று கேட்டால் விவரம் தெரிந்த பாஜக அபிமானிகள் நிச்சயம் கோபப்பட மாட்டார்கள்.**

தமிழகத்தைக் குறித்த அவர்களின் அக்கறையின்மைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? ஏன் இவ்வளவு அக்கறையின்மை?

அகில இந்திய அளவில் இருமுறை தனிப்பலம் பெற முடிந்தவர்களின் தன்முனைப்பற்ற அந்த அக்கறையின்மைதான் நமக்குள் இருக்கும் அந்த சந்தேகக் கேள்வியை மெருகேற்றி வலுக்கச் செய்கிறது.

பாஜகவால் கழட்டிவிடப்படுகிறதோ தமிழகம்?

கழட்டிவிட்டால் என்ன? போகட்டுமே! பாஜக என்ன பாஞ்சசன்யப் பெருமாளா? அதற்கெதற்கு ஒரு தலைப்பும் தனிக் கட்டுரையும்?

சனாதனத்தை வெறுக்கும் இந்தத் திராவிட மண்ணுக்கு அது நல்ல சேதிதானே எனலாம். இல்லை. உணர்வெழுச்சிக்கு அப்பாற்பட்ட கணக்கை நாம் போட்டாக வேண்டும்.

பாஜக இப்போது மற்றொரு கட்சியல்ல. மாறாக, அசுர பலத்தோடு மத்தியில் இரண்டாம் முறையாக ஆளும் கட்சி என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தென்னகத்துக்கு, தமிழகத்துக்குத் தேவையான அத்துணை நலன்களும் அவர்கள் கையில்தான்.

வரும் நாட்களில் வடஇந்தியாவில் ஏறத்தாழ க்ளீன் ஸ்வீப் செய்த பாஜகவும் தமிழகத்தில் ஏறத்தாழ க்ளீன் ஸ்வீப் செய்த திமுகவும் நாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்கப் போகின்றன.

தனித்து ஆளும் கட்சி என்னும் தோரணையில் பாஜக அமர்ந்திருக்க, மூன்றாம் பெரிய கட்சி என்னும் தோரணையில் திமுக எழுந்து நிற்கும். வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்கக்கூடும்.

இரண்டும் சித்தாந்த ரீதியாக எதிரெதிர் கருத்துள்ள கட்சிகள். இரண்டுமே அரசியலில் ஆழம்கண்ட கட்சிகள். இருபுறத்து உறுப்பினர்களும் விளைந்தவர்கள்.

தேச நலனை மட்டுமே முன்வைத்து மாச்சரியங்கள் ஏதுமின்றி ஒருவருக்கொருவர் நலம்பாடிக் கொள்வார்கள் என்றால் தமிழகம் தப்பிக்கும் .

இல்லாது போனால், ஏற்கெனவே நம் அனுமானப்படி பாஜகவின் அக்கறையின்மைக்கு ஆளாகியிருக்கும் தமிழகம் மேலும் நொந்துபோகும்.

தேவையற்ற கசப்புணர்வுகளால் ஈகோ மோதலால் இந்த மண்ணுக்கு வர வேண்டிய நன்மைகள் அனைத்தும் தடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுமானால்…

தனித்துக் காயும் தென்னகத்தில் அந்தப் புளித்த கண் டிராகன் பறந்து வந்து வாலசைத்து நின்றுவிடுமோ, அதன்பின் இந்த மண்ணில் இன்னும் என்னென்னவெல்லாம் நடந்தேறிவிடுமோ என்னும் மனக் கிலேசத்தோடு இந்தக் கட்டுரையைத் தொடர முடியவில்லை.

**ஏ…மாஸிடோனியாவின் மகளே…

உன் பாழும் தீர்க்கதரிசனம் பலித்தேவிடுமோ வான்கா?**

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக](https://minnambalam.com/k/2019/06/02/21)

**

.

**

[ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்](https://minnambalam.com/k/2019/06/02/14)

**

.

**

[நமக்காக யாரும் பேசவில்லை: தினகரனிடம் முறையீடு!](https://minnambalam.com/k/2019/06/02/42)

**

.

**

[திட்டமிட்டு பழிவாங்கிட்டீங்க: அமைச்சரிடம் ராமதாஸ் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/06/02/36)

**

.

**

[நாங்க கேட்டது மூன்று, அவர்களோ?: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/02/47)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share