இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று மும்பையில் பிசிசிஐ 39 ஆவது தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகின் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று(அக்டோபர் 23) காலை மும்பையில் நடந்த பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ-யின் 39ஆவது தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி லோதா அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிசிசிஐயில் உள்ள குறைகளைக் களைவதற்காக வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த நிர்வாகக் குழுவின் (சிஓஏ) 33 மாதங்கள் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அக்டோபர் 23ஆம் தேதியான இன்றைய தேதிக்குள், பிசிசிஐ அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிஓஏ தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடந்தது. இதில் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்காக, வேட்புமனுத் தாக்கல் செய்தார். கங்குலியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்பதால் அக்டோபர் 14ஆம் தேதி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கங்குலி.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐயின் புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் பதவியேற்றுள்ளனர். அருண் துமால், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் ஆவார்.
இதுகுறித்து பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில், “பிசிசிஐ தலைவராக கங்குலி முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்” என்று பதிவிட்டுள்ளது. மும்பை பிசிசிஐ தலைமையகத்தில் தற்போது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
It's official – @SGanguly99 formally elected as the President of BCCI pic.twitter.com/Ln1VkCTyIW
— BCCI (@BCCI) October 23, 2019
�,”