நம் இந்திய உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளும் முக்கியமானவை. உதாரணமாக, பூண்டு உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும். மஞ்சள், வெந்தயம், இஞ்சி, சீரகம் போன்ற மசாலா பொருள்கள் சுவையையும் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளையும் சேர்க்கின்றன. குறைந்த கலோரி கொண்ட உணவுகள், தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு நல்ல ஆற்றலையும் தர உதவுகின்றன. அந்த வகையில் கோடைக்காலத்தில் நீரிழிவு உள்ளவர்கள் நீர்க்காய்களை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்குக் கிடைக்கும். அதற்கு இந்த புடலங்காய் சப்ஜி உதவும்.
**என்ன தேவை?**
பொடியாக நறுக்கிய புடலங்காய் – இரண்டு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – கால் டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
மிக்ஸி ஜாரில் வெங்காயத்தையும் தக்காளியையும் தனித்தனியாக கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து கைவிடாமல் வதக்கவும். வெங்காய விழுது நன்கு வதங்கியதும், அதில் தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய புடலங்காய் சேர்த்து கைவிடாமல் வதக்கவும். புடலங்காய் வதங்கியதும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். புடலங்காய் வெந்ததும் அதில் கரம் மசாலாத்தூள் சேர்த்து எலுமிச்சைச்சாறு கலந்து இறக்கவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: சுரைக்காய் பொரியல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/04/21/1/suraikai-poriyal)**
.�,