தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் முதுநிலை பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜனவரி 19) மாலை வெளியிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”முதுநிலை மருத்துவத்தில் எம்டி, எம்எஸ் போன்ற படிப்புகளுக்கு 2,216 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீடு 1,053 மாநில ஒதுக்கீடு 1,163. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற 23 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மாநில ஒதுக்கீட்டில் உள்ள 1,163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை(இன்று) முதல் தொடங்கும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் படிப்புகளில் 16,693 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 58,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 16 ஆயிரத்து 486 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். தற்போது 207 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. இது மிக சிறந்த வெற்றியாகும்.
அதுபோன்று எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 349 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 2,650 இடங்களும் என 6,999 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ளன. இதற்கான கலந்தாய்வு படிப்படியாக நடைபெற உள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும். அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் நேரடியாக நடைபெறும். இந்த இட ஒதுக்கீட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 436 இடங்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறும்.
அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பிற மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஜனவரி 30ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பிடிஎஸ் படிப்பிற்கு 1930 இடங்கள் உள்ளன. அதற்கும் 30ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். எம்பிபிஎஸ் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 24ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
**-வினிதா**
�,