சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் சிறுதொழில்கள் – ஒரு பருந்துப் பார்வை!

Published On:

| By Balaji

நா. ரகுநாத்

நாட்டில் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18இல் 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்த தேசிய மாதிரி ஆய்வு (NSSO) அமைப்பின் Periodic Labour Force Survey 2017-18 அறிக்கை அரசிடம் சென்ற ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA ) அரசு பல மாதங்களாக இந்த அறிக்கையை வெளியிடாமலேயே வைத்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிசினஸ் ஸ்டாண்டர்டு என்னும் வணிகப் பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், இந்த அறிக்கையிலுள்ள முக்கியமான தரவுகளைப் பெற்று வெளியிட்டதும் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

**சுய தொழில் செய்வோரின் நிலை**

நாட்டின் உழைப்புப் படையின் (Labour Force) நிலையைப்பற்றி ஆய்வு செய்து NSSO சமர்ப்பித்த அந்த அறிக்கையின் முழு விவரத்தையும் பெற்று, அதை அலசி ஆராய்ந்துள்ள பொருளியல் ஆய்வாளர்கள், கவலையளிக்கும் பல முக்கியப் போக்குகளை சமீபத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். அதில் முக்கியமான கண்டுபிடிப்பு சுயதொழில் செய்து பிழைப்பவர்கள் பற்றியது.

தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி சுயதொழில் நடத்துபவர்களின் பங்கு 70 விழுக்காடு. கூலி, சம்பளம் ஏதும் பெறாமல் இந்தத் தொழில்களில் உதவியாளராக இருக்கும் குடும்பத்தினர் போன்றவர்களின் பங்கு 26 விழுக்காடு. சுயதொழில் செய்பவர்களில் வெறும் 4 விழுக்காட்டினரே வெளியாட்களை வேலையில் அமர்த்தி தொழில் நடத்துபவர்கள். அதாவது, அடுத்தவர்களுக்கு வேலைகொடுக்கும் சுயதொழில் செய்யும் தொழில்முனைவோரின் (Job Creators) பங்கு மிகவும் சொற்பம். இதுபோன்ற சுயதொழில்கள் பெரும்பாலும் சிறுதொழில்களாகவே இருக்கின்றன.

சிறுதொழில்களுக்கான முத்ரா கடன்கள் வழங்கியதன் வழியே ஏப்ரல் 2015 – டிசம்பர் 2017 காலத்தில் நாட்டில் புதிதாக 1.12 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தெரிவிப்பதாகச் சென்ற மாதம் சில பத்திரிகைகளில் செய்தி ஒன்று வந்தது.

மேலும், கடன் வாங்கியவர்களில் வெறும் 20 விழுக்காட்டினரே புதிய தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது. இந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வைக்கப்படாததால் இந்தத் தரவுகள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

**சிறுதொழில்கள் பற்றிய புதிய அறிக்கை**

இதற்கிடையே, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மற்றும் Global Allaince for Mass Entrepreneurship (GAME) எனும் நிறுவனம் சேர்ந்து சென்ற வாரம் இந்தியாவிலுள்ள சிறுதொழில்கள் பற்றி Microenterprises in India: A Multidimensional Analysis என்ற விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொருளியல் கணக்கெடுப்பு (Economic Census) 2013-14, விவசாயமற்ற மற்ற முறைசாராத் தொழில்கள் பற்றி தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு 2010-11 மற்றும் 2015-16இல் மேற்கொண்ட ஆய்வுகள் தரும் விவரங்களை ஆராய்ந்து பார்த்து, அவற்றில் கவனிக்கத்தக்க போக்குகளை இந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.

வெளியாட்களை வேலையில் அமர்த்தாமல் தங்களுடைய, தங்கள் குடும்பத்தினருடைய உழைப்பை மட்டுமே செலுத்தி சுயதொழில் செய்யும் 7.5 கோடி பேர் ஒருமுனையிலும், அமைப்பு சார்ந்த பெருநிறுவனங்கள் மறுமுனையிலும் இருக்க, இவ்விரண்டுக்கும் இடையே சிறிய அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறுதொழில்கள் உள்ளன. இவை சுமுகமாகத் தொழில் நடத்துவதில் எதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன, இவை எந்த அளவுக்கு உற்பத்தியில் மதிப்பைக் கூட்டுகின்றன (value-addition), இத்தொழில்களில் வேலைசெய்பவர்களின் உற்பத்தித்திறன் என்ன, அவர்களின் உற்பத்தித்திறனுக்கும் அவர்கள் பெறும் ஊதியத்துக்குும் உள்ள இடைவெளி பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது இந்த அறிக்கை.

மேலும், எந்தெந்த துறைகளில் அதிகமான சிறுதொழில்கள் இயங்குகின்றன, எந்தெந்த துறைகளில் இயங்கும் சிறுதொழில்கள் அதிகளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன, ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த சிறுதொழில்கள் சராசரியாக எத்தனை ஆட்களை வேலையில் அமர்த்தியுள்ளன, இந்தச் சிறுதொழில்களில் பெண் உடைமையாளர்களின் பங்குு… போன்ற பல அம்சங்களை மிகத்தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்த அறிக்கை. அவற்றில் சிலவற்றை நாம் இக்கட்டுரையில் விவாதிப்போம்.

என்ன சொல்கிறது இந்த அறிக்கை?

**சுய தொழிலும் வேலைவாய்ப்பும்**

அகில இந்திய அளவில் 55 விழுக்காடு சிறுதொழில்கள் ஒரேயொரு நபரைக்கொண்டு மட்டுமே இயக்கப்படுவதும், 32 விழுக்காடு சிறுதொழில்கள் 2-3 நபர்களைக்கொண்டு இயக்கப்படுவதும் தெரியவருகிறது. பொருளியல் ரீதியாக முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படும் பகுதிகளில் இயங்கும் சிறுதொழில்களிலும் 6-19 வேலையாட்களைக்கொண்டு இயங்கும் தொழில்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது.

2010இல் இதுபோன்ற முறைசாரா சிறுதொழில்களில் வேலைசெய்து வந்தவர்கள் கிட்டத்தட்ட 10.8 கோடி பேர். இது அடுத்த ஐந்தாண்டுகளில் வெறும் 0.6 விழுக்காடு மட்டுமே வளர்ந்து 2015இல் 11.13 கோடியாக இருந்தது. இந்தச் சிறுதொழில்களில் ஏற்பட்ட உற்பத்தியின் மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added) 2010இல் தோராயமாக ரூபாய் 7.4 லட்சம் கோடியாக இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ந்து 2015இல் ரூபாய் 11.5 லட்சம் கோடியானது. அதாவது, உற்பத்தி மதிப்புக் கூட்டலின் வளர்ச்சியின் வேகத்துக்கும், வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி வேகத்துக்கும் இடைவெளி பெரிதாக இருப்பதால், உற்பத்தி அதிகரித்தும் வேலைவாய்ப்பு பெருகவில்லை என்பதே இந்த விவரங்களில் இருந்து நாம் தெரிந்துகொள்ளும் சேதி.

**சில்லரை வணிகத்தில் புதிய வேலைவாய்ப்புகள்**

ஊரகம், நகரம் இரண்டிலுமே மொத்த சிறுதொழில்களில் சில்லறை வியாபாரத்தின் பங்கு கிட்டத்தட்ட 30 விழுக்காடு. அதே அளவு (30 விழுக்காடு) தொழிலாளர்கள் வேலைசெய்யும் புகலிடமாகவே இந்தச் சில்லறை வியாபாரம் திகழ்கிறது. ஜவுளித் துறை, புகையிலை, கல்வி மற்றும் உணவகங்கள் ஊரகப் பகுதிகளில் பெருமளவுக்கு வேலையாட்களை அமர்த்தியிருப்பதோடு மட்டுமில்லாமல் புதிய வேலைவாய்ப்புகளை வேகமாக உருவாக்கும் போக்கையும் காட்டுகின்றன. நகரங்களில் இந்தப் போக்கைக் கல்வி, சுகாதாரம், புகையிலை, மரச்சாமான்கள் செய்யும் தொழில்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், கார்களை விற்பனை செய்யும் தொழில்கள் வெளிப்படுத்துகின்றன.

வேலை செய்பவர்களின் உற்பத்தித்திறன், அவர்கள் பெறும் ஊதியம் இவ்விரண்டும் ஊரகப் பகுதிகளில் இருப்பதைவிட நகரங்களில் அதிகமாகவே இருக்கின்றன. மேலும், உற்பத்தித்திறன் மற்றும் ஊதியம் இரண்டுமே உற்பத்தித் துறையைவிட (Manufacturing) சேவைத் துறையில் உயர்வாக இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், அதிகமாக வேலையாட்களை அமர்த்தியுள்ள எந்தத் துறையிலும் தொழிலாளர்கள் பெறும் சராசரி ஊதியம் ரூ.10,000 எனும் நிலையைக்கூடத் தொடுவதில்லை என்பது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒவ்வொரு தொழிலிலும் சராசரியாக ஏற்படும் மொத்த மதிப்புக் கூட்டல், பணியாட்களின் எண்ணிக்கை, உற்பத்தித் திறன் மற்றும் கூலியின் மட்டம் என்னும் நான்கு குறியீடுகளை எடுத்துப்பார்த்தால், உற்பத்தித் திறனில் டெல்லி, டெல்லியைச் சுற்றியுள்ள பகுதி முதலிடத்தில் இருந்தாலும், கூலியின் மட்டம் கேரளம், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகமாக உள்ளது. அதிகளவில் உழைப்பாளி மக்களைக்கொண்ட வட, கிழக்கு மாநிலங்களில் உற்பத்தித் திறன், கூலியின் மட்டம் இரண்டுமே மிகக்குறைவாக இருப்பதால், தரவரிசையில் உ.பி, பிகார், கிழக்கு வங்காளம், ஒடிசா மாநிலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளன.

**சிறுதொழில்களில் பெண் உடைமையாளர்கள், தொழிலாளர்கள்!**

பொருளியல் கணக்கெடுப்பு 2013-14 வழங்கும் தரவுகளின்படி நாட்டிலுள்ள மொத்த சிறுதொழில்களில் 14 விழுக்காடு தொழில்களுக்குப் பெண்கள் உடைமை69யாளர்களாக இருந்தனர். இவற்றில் 65 விழுக்காடு சிறுதொழில்கள் ஊரகப்பகுதிகளில் இருந்தன. வடகிழக்கு, தென்மாநிலங்களில் பெண் உடைமையாளர்களின் பங்கு 25-30 விழுக்காடு. இங்குதான் பெண் உடைமையாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் இயங்குகின்றனர். ராஜஸ்தான், பஞ்சாப், உ.பி, உத்தராகண்ட், அஸ்ஸாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பெண் உடைமையாளர்களின் பங்கு மிகவும் குறைவு (5-10 விழுக்காடு மட்டுமே).

பெண் உடைமையாளரைக்கொண்ட சிறுதொழில்கள் 2013-14இல் 1.34 கோடி தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருந்தன. இந்த தொழிலாளர்களில் 77 விழுக்காட்டினர் பெண்களே. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பெண் உடைமையாளர்கள் பெரும்பாலும் பெண் தொழிலாளர்களையே பணியில் அமர்த்துகின்றனர்.

பிகார் மற்றும் ஹரியானாவில் பெண் உடைமையாளர்கள், பெண் தொழிலாளர்கள் இருவரின் பங்கும் மிகக்குறைவாக உள்ளது. ஜவுளித் துறை, புகையிலை, உணவகம், கல்வி, சுகாதாரம், சில்லறை வணிகம் என மொத்தமாகவே வெறும் 10 துறைகளில் மட்டுமே 90 விழுக்காடு பெண் உடைமையாளர்கள் இயக்கும் சிறுதொழில்கள் இருக்கின்றன. ஆண் உடைமையாளரைக்கொண்டு இயங்கும் சிறுதொழில்களில் போக்குவரத்துத் துறையின் பங்கு 9.4 விழுக்காடு. ஆனால், பெண் உடைமையாளரைக்கொண்டு இயங்கும் சிறுதொழில்களில் போக்குவரத்துத் துறையின் பங்கு வெறும் 0.08 விழுக்காடு மட்டுமே. சிறுதொழில் உடைமையிலும் பெரும் பாலின இடைவெளி உள்ளதை இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் சிறுதொழில் நடத்துவதில் ஏராளமான சிக்கல்களும் இடர்களும் உள்ளன. இந்தத் துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் அல்ல. தடையற்ற மின்சார வசதி, நல்ல சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதி, பொருட்களைத் தேக்கிவைக்கக் கிடங்குகள், தொழில் விரிவாக்கத்தை ஊக்குவிக்க குறைந்த வட்டியில் வங்கிக்கடன் எனத் தொழில் செய்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை. வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் சிறுதொழில்களை பங்குபெறச் செய்வது அவசியம்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share