மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவசங்கர் பாபா மீது 2 போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதல் வழக்கில் சிறையில் இருக்கும்போதே, இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் கீழ் ஜூலை 27ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்கள் உள்பட அனைத்து பள்ளி ஊழியர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலியல் வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சிவசங்கர் பாபா சார்பில் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று(ஜூலை 19) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 போக்சோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதுமட்டுமின்றி சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக இருந்ததாக கூறப்பட்ட ஆசிரியை சுஷ்மிதாவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சிவசங்கர் பாபாவின் தனி அறையில் சோதனை செய்தபோது பல முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி உள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் அவரை ஜாமீனில் வெளியே விட்டால் ஆதாரங்களை அவர் கலைக்கக்கூடும் என்றும் போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
**-வினிதா**
�,