டெல்லி ஹரியானா இடையே உள்ள எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் சிங்கு பகுதியில் உள்ளூர் வாசிகள் என்று சொல்லக்கூடிய சிலர் புகுந்ததால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து இரு மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த சூழலில் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். டெல்லி செங்கோட்டையில் உள்ள சிறிய கம்பம் ஒன்றில் போராட்டக்காரர்கள் கொடி ஏற்றியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 80க்கும் மேற்பட்ட போலீசார்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், டெல்லி காவல் துறையின் துணை ஆணையர் சின்மொய் பிஸ்வால், சன்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பைச் சேர்ந்த தர்ஷன் பால் என்பவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்துவதற்குக் குறிப்பிட்ட பாதைகளில் செல்ல போலீசார் அனுமதி வழங்கிய நிலையில் அதனை மீறியது ஏன் என்றும், விதிமீறலில் ஈடுபட்டதற்காக உங்கள் மீதும் உங்களுடைய கூட்டாளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பி இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் உரியப் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியை முடித்துக் கொண்டு திரும்பிய விவசாயிகள் சிங்கு எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இந்நிலையில் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள், உடனே அந்த இடத்தை காலி செய்து அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று கூறி உள்ளூர் மக்கள் என்று சிலர் அப்பகுதியில் திரண்டுள்ளனர். அங்கு விவசாயிகள் அமைத்துள்ள கூடாரங்கள் மீது கற்களை வீசி அவற்றைச் சேதப்படுத்தி இருக்கின்றனர். விவசாயிகள் அங்கு வைத்திருந்த வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பொருட்களையும் இந்த கும்பல் சேதப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
This person with blue mufflar, snatched laathis from Delhi Police personnel and vandalised the tents, broke washing machines, barricades @NewIndianXpress @TheMornStandard pic.twitter.com/w0U5DqZwAm
— Gayathri Mani (@gayathrireports) January 29, 2021
இதனால் அப்பகுதியில் மீண்டும் வன்முறை ஏற்பட்ட நிலையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுவீசி இந்த கூட்டத்தை கலைக்க முயன்றனர். விவசாயிகள் போராட்டத்தால் சிங்கு பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்ட நிலையிலும் இந்த கும்பல் எப்படி உள்ளே நுழைந்தது என்ற தகவல் தெரியவரவில்லை.
இந்த சம்பவத்தால் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. சிங்கு எல்லை பகுதி முழுவதும் தற்போது மூடப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**
�,”