qசிம்புவின் அடுத்த படமும் ‘டிராப்’ ஆகிறதா?

Published On:

| By Balaji

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் கன்னட படத்தின் ரீமேக்கான ‘மஃப்டி’ கைவிடப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

2017ஆம் ஆண்டு கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடித்து வந்தனர். கன்னடத்தில் மஃப்டியை இயக்கிய நார்தன் இப்படத்தை தமிழிலும் இயக்கிவந்தார். கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஶ்ரீமுரளி நடித்த கதாபாத்திரங்களில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடித்து வந்தனர். ஆக்‌ஷன்-க்ரைம்-த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்து வந்தார்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம், படப்பிடிப்புத் தளத்தில் சிம்புவும், கெளதம் கார்த்திக்கும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதன் மூலம், இந்தப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை உறுதியாக நம்பலாம்.

இந்நிலையில், சிம்பு தனது முந்தைய படங்களில் செய்தது போலவே படப்பிடிப்பிற்கு சரியாக வரவில்லை என்றும், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான தேதிகள் தராமல், படத்துக்காகக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் சிம்பு கையெழுத்திட்டுத் தராமல் இழுத்தடிப்பதாகவும் இன்று(09.10.19) காலை முதல் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் இது குறித்த புகார் கடிதம் ஒன்றை கொடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக மஃப்டி ரீமேக் பாதியிலேயே கைவிடப்படலாம் எனவும் செய்திகள் உலா வந்தன.

இதுகுறித்து உண்மை நிலை அறிய தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா தரப்பில் விசாரித்த போது, மஃப்டி படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லை என பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு எதையும் ஞானவேல் ராஜா சார்பில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு படம் இது போன்ற புகார்களால் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டது. சிம்பு, ஒப்பந்தமாகும் படங்களுக்கு முன்தொகை பெற்றுக் கொண்டு, படப்பிடிப்பிற்கு முறையாக ஒத்துழைக்காமல் இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதற்கு முன் இவ்விஷயத்தில் சிம்பு நடந்துகொண்டதைப் போலவே, மஃப்டி ரீமேக் படப்பிடிப்பிலும் சிம்பு முழுமையான ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஞானவேல் ராஜாவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, இவ்விவகாரத்தில் சிம்பு தரப்பில் எவ்வித எதிர்வினையும் வராத பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனுவை அளிக்கும் முடிவில் இருக்கிறார் எனத் தெரிகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel