rஊர்தோறும், திண்ணைதோறும் பிரச்சாரம்: திமுக!

Published On:

| By Balaji

வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்களை தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கி சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பேசிய ஸ்டாலின், “வெற்றி சாதாரணமாக கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள். ஒற்றுமையின்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது. பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அன்பு உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரத்தை கையிலெடுப்பேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் இன்று (நவம்பர் 11) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

**பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள்**

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “நேற்றைய தினம் (10.11.2019) நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லுமளவுக்கு, பகல் கொள்ளை – உளுத்துப் போன ஊழல் – எதற்கும் லஞ்சம் – எங்கும் கமிஷன் என்று, அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அதிமுக அரசையும் மற்றும் அது தனது அடிவருடும் ஆட்சி என்பதால், அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட, 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், நவம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை) “தி.மு.கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை” நடத்திட கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மேற்கண்ட 20 தீர்மானங்களில் குறிப்பாக , “ பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அதிமுக”, “ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அதிமுக ஆட்சி”, “ ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு – உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பாஜக அரசு”, “மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு துணைபோகும் அதிமுக அரசு” ஆகிய தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப் பதிந்திடும் வண்ணம், துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள் தோறும் விநியோகித்திட ஆவன செய்வதென்றும், தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரச்சாரங்கள் மேற்கொள்வதென்றும்; கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share