நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாஜி கணேசனுக்கு இன்று (அக்டோபர் 1) 92ஆவது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் சிவாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எந்த கதாப்பாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் சிவாஜி என்று பெருமிதம் தெரிவித்தார். அவரை பற்றி நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்கலாம் என்று தெரிவித்த அவர், பார்ப்பவர்களையும் கதாப்பாத்திரத்தோடு ஒன்றச் செய்தவர் சிவாஜி என்றார்.
இதேபோல் சிவாஜி மகன் நடிகர் பிரபு, பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்ட பிரபலங்களும் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், பிரபு பேசுகையில், அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தியது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. கடற்கரையில் மீண்டும் சிவாஜி சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். வைப்பார்கள் என்று நம்புகிறோம் என்று பேசினார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிவாஜி புகைப்படங்கள் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
�,