மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக இன்று ஆளுநரை சந்திக்கவுள்ளது. அதே சமயம் பாஜக சிவசேனா எம்.எல்.ஏக்களை இழுக்கப் பார்க்கிறது என்ற புகார்களும் சிவசேனா தரப்பில் எழுந்தவண்ணம் உள்ளன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 161 இடங்களை வென்றது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. ஆயினும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிவசேனாவின் முதல்வர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையில், தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அம்முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இத்தகைய சூழலில், சிவசேனா எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் சாம்னா பத்திரிக்கையில், “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராக வரவேண்டும் என மகாராஷ்டிரா மக்கள் விரும்புகின்றனர். சிலர் பணத்தை வைத்துக் கொண்டு சிவசேனா எம்.எல்.ஏக்களை இழுத்து வெற்றி பெற முயல்கிறார்கள்” என குற்றம் சாட்டியது. அதனைத் தொடர்ந்து, சிவசேனா தனது எம்.எல்.ஏ.க்களை ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றியதாக செய்திகள் வெளியானது.
சிவசேனா தனது எம்.எல்.ஏ.க்களை ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றியதாக வெளியான தகவல்கள் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இன்று(நவம்பர் 7) காலை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் கேள்வி எழுப்பியது, “இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. எங்கள் எம்.எல்.ஏக்கள் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்கள், கட்சிக்கு உறுதியுடன் உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் முதலில் தங்கள் எம்.எல்.ஏ.க்களைப் பற்றி கவலைப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும், “மகாராஷ்டிரா முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவர் தான்” என திட்டவட்டமாக கூறினார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் காலம் நவம்பர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பாஜக இன்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளது. மீண்டும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமைகோரவுள்ளது. இதனிடையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை பாஜக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரில் நடக்கும் விழாவில் சந்தித்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளார்.
அதே சமயம், சிவசேனா பாஜகவுடன் இனி எந்த சமரசப் பேச்சுவார்த்தையும் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
�,