சிவசேனாவுக்கு முதல்வர் பதவியா? பட்னாவிஸ் விளக்கம்!

Published On:

| By Balaji

சிவசேனாவுக்கு முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை அளிப்பது குறித்து பாஜக எந்த உறுதியையும் தரவில்லை என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

288 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பாஜக 105 தொகுதிகளையும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. இந்தத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 145 இடங்களை பாஜக கைப்பற்றாததால், சிவசேனாவின் ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.

ஆனால், ஆதித்யா தாக்கரேவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் ஆக்க வேண்டும், ஆட்சியில் சமபங்கு வேண்டும் உள்ளிட்ட நிபந்தனையை பாஜகவுக்கு சிவசேனா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இதனை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டுமென சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது.

இந்த நிலையில் மும்பையில் இன்று (அக்டோபர் 29) தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமையும். நிலையான மற்றும் திறமையான அரசாங்கமாக அது 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான்தான் முதல்வர். இதுவரை சிவசேனா எங்களிடம் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு கோரிக்கை விடுத்தால் அதுகுறித்து நாங்கள் பரிசீலித்து முடிவெடுப்போம்” என்று தெரிவித்தார்.

தங்களுக்கு ஏற்கனவே 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மேலும் 5 பேர் வரை ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்ட பட்னாவிஸ், “இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகளுக்கு முதல்வர் பகிர்ந்துகொள்வது என சிவசேனாவுக்கு நாங்கள் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. முதல்வர் பதவி குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்று அமித் ஷா என்னிடம் தெரிவித்தார்” என்றும் விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய மகாராஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 9ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளித்துள்ள சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக-சிவசேனா இடையிலான ஆலோசனை இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருந்தது. ஆனால், ஆட்சியில் சமபங்கு என்ற சிவசேனாவின் நிபந்தனை குறித்து விவாதிக்கப்படவில்லை என்று முதல்வரே கூறிவிட்டார். பிறகு நாங்கள் பாஜகவிடம் எதைப்பற்றி பேசுவது? எந்த அடிப்படையில் பேசுவது? எனவேதான் இன்றையக் கூட்டத்தை எங்கள் தலைவர் ரத்துசெய்துவிட்டார்” என்று தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share