எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்கும் சிவசேனா: பரபரப்பாகும் மகாராஷ்டிரா!

Published On:

| By Balaji

சட்டப்பேரவை ஆயுட்காலம் இன்றுடன் காலாவதியாகும் நிலையில், மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய சிவசேனா கூட்டணியின் ஆதரவு இல்லாத நிலையில், பாஜக எச்சரிக்கையுடன் செயல்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 288 பேர் கொண்ட சட்டசபையில் 105 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும், அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை பாஜகவிடம் இல்லை. மைனாரிட்டி அரசாக ஆட்சியமைக்க உரிமை கோருவதில் பாஜகவுக்கு விருப்பமில்லை என பாஜக தரப்பு நேற்று (நவம்பர் 7) செய்தியாளர்களிடம் கூறியது.

ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 50 சதவிகிதப் பங்கு வேண்டும் என்ற வேண்டுகோளுடன்தான் சிவசேனா கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது. சிவசேனா கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் சிவசேனா கட்சியின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படுகிறது. ஆனால், பா.ஜ.கவோ முதல்வர் பதவி தேவேந்திர பட்னாவிஸுக்குத்தான் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதற்கு சிவசேனா கட்சி உடன்படுவதாக இல்லை. முதல்வர் பதவி, ஆட்சியைமைப்பதில் இரண்டரை ஆண்டுகள் பகிர்வு என்பதில் சிவசேனா கட்சி உறுதியாக உள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேர்தலுக்கு முன் செய்துகொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். கூட்டணி ஏற்படுவதற்குக் காரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருந்தால், மேற்கொண்டு பேசுவோம், இல்லையேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என நேற்று (நவம்பர் 7) அவரது இல்லத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பில் திட்டவட்டமாக கூறிவிட்டார். தலைவர் உத்தவ் தாக்கரேவின் உத்தரவுக்குக் காத்திருப்பதாக சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முன் நிபந்தனையாக முதலமைச்சர் பதவியை விட குறைவான எதையும் ஏற்க மாட்டேன் என்று சேனா கூறிய நிலையில், கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நல்லிணக்க அடிப்படையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உடைக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், பாஜக நேற்று ஆளுநரையும் சந்தித்தது. மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில், “பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றது. அதனடிப்படையில் ஆட்சியமைய வேண்டும். இது குறித்து ஆளுநரிடம் பேசினோம். தற்போது உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து அவருடன் விவதாதித்தோம்” என்று ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

பாஜக அமைச்சர் சுதிர் முன்கந்திவார், ‘பட்னாவிஸும் ஒரு சிவசேனாதான், ஒரு சிவசேனாதான் முதல்வராக இருப்பார்’ என்று சிவசேனாவின் பிடிவாதத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் கூறினார். இதை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாகக் கண்டித்து, “சிவசேனாவைச் சேர்ந்தவர் ஒருபோதும் பொய் சொல்லாமல் தன் வார்த்தையைக் கடைப்பிடிப்பார். ஒரு சிவசேனா உறுப்பினர் ஒருபோதும் யாரையும் முதுகில் குத்துவதில்லை” என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக பாஜக கடுமையான பேரம் பேசும் அதே வேளையில், சிவசேனா தனது அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தலைமையகத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலான ரங் ஷரதாவில் தங்க வைத்துள்ளது.

சிவசேனா பத்திரிகையான சாம்னா, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடி வருவதாக மறைமுகமாக குற்றம் சாட்டியது. “பாஜகவுடனோ அல்லது இந்துத்துவாவுடனோ எந்த தொடர்பும் இல்லாதவர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களைத் தொடர்புகொண்டு, பணத்தின் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த புகார்கள் அதிகரித்து வருகின்றன” என குற்றம் சாட்டியுள்ளது.

முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது இல்லமான வர்ஷாவில் தங்கி பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜக தலைவர்களின் ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு மாநில அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனியும் ஆளுநரைச் சந்தித்தார். மாநிலத்தின் அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து ஆளுநர் சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களைக் கலந்தாலோசித்தார் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருவதை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விரும்பவில்லை என்றாலும், இன்று மாலைக்குள் ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராத பட்சத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அடுத்த உத்தரவு வரும் வரை ரங் ஷரதா ஹோட்டலில் தங்குமாறு சிவசேனா உத்தரவிட்டிருக்கிறது. மகாராஷ்டிரா அரசியலில் இன்றைய தினம் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share