ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

Published On:

| By Balaji

பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபி பெண் எஸ்.பியை பாட்டுப் பாட சொல்லி வற்புறுத்தியது சிபிசிஐடியின் எப்.ஐ.ஆர் மூலம் தெரியவந்துள்ளது.

முதல்வர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பின்னர் சென்னை திரும்பிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குறிப்பிட்ட மாவட்ட பெண் எஸ்பியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ராஜேஷ் தாஸ் மற்றும் பெண் எஸ்பியை சென்னை நோக்கி செல்ல விடாமல் வழிமறித்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளதாவது, முதல்வரின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ராஜேஷ் தாஸ் திரும்பி சென்றபோது, மாவட்ட எல்லைகளில் அவரை வரவேற்கக் காத்திருந்த நிலையில், பெண் எஸ்பியை சிறப்பு டிஜிபி காரில் அழைத்து சென்றார்.

உளூந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது பெண் எஸ்பிக்கு காரில் வைத்திருந்த திண்பண்டங்களயும், வசதியாகத் தலையை சார்த்துக்கொள்ள headrest தலையணையையும் கொடுத்திருக்கிறார் சிறப்பு டிஜிபி. இதையடுத்து பாட்டுப்பாடச் சொல்லி வற்புறுத்தி, கையை பிடித்திருக்கிறார். நன்றாகப் பாடுவதாகக் கூறி பாராட்டும் வகையில் பெண் எஸ்பியின் கையை பிடித்திருக்கிறார்.

பின் கண்ணை மூடிக்கொண்டு சிறப்பு டிஜிபியும் பாட்டு பாடியிருக்கிறார். பெண் எஸ்பியின் கையை 20 நிமிடங்கள் பிடித்து கொண்டு விடாமல் இம்சித்திருக்கிறார். பெண் எஸ்பிக்குப் பிடித்த பாடல் குறித்துக் கேட்டு தன்னுடைய மொபைலில் ப்ளே செய்திருக்கிறார்.

டிரைவரிடம் கார் கண்ணாடியை மேல்நோக்கி திருப்பச் சொல்லிவிட்டு, கைகளில் முத்தமிட்டிருக்கிறார்.

இதனால் பதறிப்போன பெண் அதிகாரி கைகளை உதறித் தடுக்க முயன்றுள்ளார். சிரித்தபடி கைகளை விட்ட ராஜேஷ் தாஸ், மீண்டும் அவரது கைகளைப் பிடித்து 5 நிமிடம்தான் எனக் கூறியிருக்கிறார்.

சிறப்பு டிஜிபியின் செயல்களால் பதற்றமடைந்த பெண் எஸ்பிக்கு வியர்த்து கொட்டியதால் துடைக்க தன்னுடைய துண்டையும் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த முறை பெரம்பலூர் வந்தபோது, பெண் எஸ்பிக்கே தெரியாமல் எடுத்த அவரது புகைப்படங்களை தன்னுடைய ஃபேவரட் கேலரியில் வைத்திருப்பதாகக் கூறி காண்பித்திருக்கிறார். இந்தப் பயணம் மறக்க முடியாத பயணம் என பெண் எஸ்பி சங்கடம் தரும் வகையில் பேசியிருக்கிறார் டிஜிபி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மாவட்ட எல்லைகளில் மற்ற காவல்துறை அதிகாரிகளைக் கண்டதும் பெண் அதிகாரியின் கையை விட்டிருக்கிறார். இதனையடுத்து வேகமாகக் காரை விட்டு இறங்கிய பெண் அதிகாரி உடனடியாக அங்கிருந்த கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியா-உல்-ஹக் என்ற ஐபிஎஸ் அதிகாரியின் காரை கேட்டு வாங்கி வீட்டுக்குத் திரும்பினார்.

இதையடுத்து 22ஆம் தேதி டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுப்பதற்காகச் சென்னை புறப்பட்டபோது, பெண் எஸ்பிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அவர் எடுக்காததால், திருப்பூர் எஸ்பி, கள்ளக்குறிச்சி எஸ்பி, கடலூர் எஸ்பி ஆகியோருக்கு தொடர்புகொண்டு பெண் எஸ்பியை சென்னை நோக்கி வரவிடாமல் தடுத்து நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.

இந்தநிலையில்தான் செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், பெண் எஸ்பியின் காரை மறித்து நிறுத்தி, சிறப்பு டிஜிபிக்கு போன் செய்து கொடுத்திருக்கிறார். அப்போது, காலில் விழுகிறேன். புகார் அளிக்க வேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார் ராஜேஷ் தாஸ். ஆனால் எதையும் கேட்காமல் காவல்துறை தலைமை அதிகாரியைச் சந்தித்து புகார் கொடுக்க வேண்டும் என்று சென்னை வந்துள்ளார் பெண் எஸ்பி. இதனிடையே ராஜேஷ் தாஸ் மீது புகாரளிக்கச் சென்னைக்குச் செல்வதாக ஐஜி ஜெயராமனிடம் தெரிவித்துள்ளார் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, பெண் எஸ்பியின் மாமனாரிடமும் சமாதானம் பேசுவதற்கு ராஜேஷ் தாஸ் முயன்றதும் எஃப்.ஐ.ஆர் மூலம் தெரியவந்துள்ளது. இந்த எஃப்.ஐ.ஆர் தகவலின் படி, மூன்று மாவட்ட எஸ்.பிக்கள் உட்பட 15 போலீஸ் அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share