�இன்றைய குழந்தைகள் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் அதிகம் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களில் மைதா, உருளைக்கிழங்கு, எண்ணெயில் பொரித்த அசைவ வகைகள், சாப்பிடத் தூண்டும் வண்ணங்கள், உணவுப் பொருள் கெடாமல் தடுப்பதற்கான ரசாயனங்கள் நிரம்பியுள்ளன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் எடை கூடுவதுடன் மந்தநிலையும் ஏற்படுகிறது. கெட்ட கொழுப்பும் உடலில் சேர்கிறது. இதுபோன்ற ஸ்நாக்ஸ் வகைகள் விரைவில் உள்ளுறுப்புகளைத் தாக்கி பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. மிகச்சிறு வயதில் சர்க்கரைக் குறைபாடு வர இதுவும் ஒரு காரணம். இதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் இந்த எள் உருண்டை உதவும்.
**எப்படிச் செய்வது?**
வெறும் வாணலியில் ஒரு கப் எள் போட்டு, படபடவென்று வெடிக்கும் வரை வறுத்து எடுக்கவும். பாத்திரத்தில் பொடித்த வெல்லம் அரை கப் சேர்த்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பிறகு, வடிகட்டி மீண்டும் வெல்லக்கரைசலைக் கொதிக்கவிட்டு உருட்டுப் பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். இத்துடன் வறுத்த எள், 2 டீஸ்பூன் பொட்டுக்கடலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சூடாக இருக்கும்போதே கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
**சிறப்பு**
எள்ளில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகை, உடல் சோர்வு, உடல் பலமின்மையைப் போக்கும். கறுப்பு எள்ளில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. இது மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைக்கும் நல்ல பலன் தரும்.�,