தமிழகத்தில் 2020ஆம் ஆண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இச்செய்தி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ள நிலையில், தேர்வுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5,8ஆம் வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் சினிமா பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், ”பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நீக்கமற நன்றி. பட்டாம்பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில், ”5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது .இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்குச் சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும் .வாழ்த்துக்கள்.. நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”மாணவர்களின் நலன் கருதித்தான் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும். வரும் காலங்களிலும் தற்போதுள்ள நிலையே தொடரும்” என்றார்.
அப்போது பள்ளிகளில் இந்தி பாடத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, இருக்கிற பாடத்தை ஆசிரியர் சங்கங்கள் ஒழுங்காக நடத்தினால் போதும் என்றார்.
�,