தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலையின் கீழ் தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கொரோனா காரணமாக 1,2,3ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீட்டு மதிப்பெண்கள், வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்வு நடைபெறாத போதிலும் அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசின் அனுமதி பெற்றுத் தான் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேர்வுகள் நடத்தப்படாவிட்டாலும் மதிப்பெண் பட்டியல் அச்சடித்தல் உள்ளிட்ட இதர பணிகளுக்காகத் தேர்வுக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனிடையே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான ஹரிகரன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில் பல்கலைக் கழகத்தின் கீழ் பொறியியல் படிப்புகளில் படித்து வரும் 7 லட்சம் மாணவர்களிடம் கட்டணமாக தலா ரூ.1,450 என கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்படவுள்ளது. தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தினால் தான் முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற பல்கலையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது மாணவர்கள் சார்பில், செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது என்று அண்ணா பல்கலை அறிவித்துவிட்டது. இதனால் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலையின் சார்பாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
**கவி பிரியா**�,