முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவ்ட்டமான சேலத்தின் பல பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் கச்சேரிகள் நடைபெறும். அதுவும் சமீபத்தில் முதல்வரின் தொகுதியான எடப்பாடியில் இருக்கும் கொங்கணாபுரம் அருகே கரட்டூர் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்ட அழகிகள் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருகிறது.
கோயில் திருவிழாக்களில் கலாசார நடனம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம் போடும் பழக்கம் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் மட்டும் ஏனோ நெடு வருடங்களாகவே இருந்து வருகிறது. இந்த வகையில் கொங்கணாபுரம் அருகே உள்ள கரட்டூர் செல்லியம்மன் கோயில் திருவிழாவுக்காக கடந்த வாரம் ஆடல் பாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 36 பேர் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இதன் காட்சிகள் தற்போது சமூக தளங்களில் பரவி வருவதால் சர்ச்சையாகியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து சேலத்தில் இருக்கும் சில சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்.
“செல்லியம்மன் கோயில் விழாவுக்காக அரை குறை ஆட்டம் போட பெங்களூருவில் இருந்து ரயிலில் சேலம் வந்திறங்கியிருக்கிறார்கள். இந்த விழாவை ஏற்பாடு செய்தவர் கரட்டூரைச் சேர்ந்த கொங்கணாபுரம் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் மணி என்று சொல்கிறார்கள். இவர் முதல்வருக்கு அறிமுகமானவர் என்றும் சொல்கிறார்கள்.
2012 ஆம் ஆண்டு இதுபோன்ற நடனங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரைகுறை ஆடல்பாடல்களை அனுமதிக்கக் கூடாது. முழு நிகழ்ச்சியையும் வீடியோ பதிவு செய்யவேண்டும். அதில் நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், ஆடிய பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் பெரும்பாலும் அப்படி நடப்பதே இல்லை. சேலத்தின் மேற்குப் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், மேச்சேரி, மேட்டூர் பகுதிகளில் இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மிகவும் சகஜமாகிவிட்டன.
ஆடி மாதம் ஆரம்பித்தால் சித்திரை மாதம் வரைக்கும் சேலத்தில் இது பெரிய பிசினஸாகவே இருக்கிறது. சேலத்தில் இதற்கென்று வழக்கறிஞர்கள் குழுவே இருக்கிறது. அவர்கள் முறைப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில், நாங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்று சொல்லி அனுமதி வாங்கித்தந்துவிடுவார்கள்.
கலாசார நடனம் என்று போலீஸ் ஸ்டேஷனில் போய் அனுமதி கேட்டு வாங்கிவிடுவார்கள். மாலை ஏழுமணிக்கே நிகழ்ச்சியை ஆரம்பித்து இரவு பத்து, பத்தரை வரை பக்திப் பாடல்கள், ஹீரோயிச பாடல்களுக்கு ஆடிக் கொண்டிருப்பார்கள். பத்தரை பதினோரு மணிக்கு மேல் பெண்களை எல்லாம் அனுப்பிவிட்டு ஆபாச ஆட்டத்தை ஆரம்பித்துவிடுவார்கள். காவல்துறையின் முழு சம்மதத்தோடுதான் இது நடக்கிறது. இப்போது கூட யு ட்யூபில் ஊர், பெயர் பேனர்களோடு ஏகப்பட்ட ஆபாச நடன நிகழ்ச்சிகள் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. சேலம் மாவட்டத்துக்கு நல்ல பெயரெடுத்துக் கொடுக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற ஆடல் பாடல்களால் சேலத்தின் பெயரே கெடுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்முயற்சி எடுத்து மாவட்ட அளவில் பேசி இந்த ஆபாச நடனங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அவர் சேலம் மாவட்ட போலீஸுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
�,