தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலது கரமாக இருப்பவர் இளங்கோவன். இவரை கூட்டுறவு இளங்கோவன் என்று சொன்னால்தான் டக்கென அனைவருக்கும் தெரியும்.
சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் அதிமுகவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொள்வார். எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினரின் கோரிக்கைகள், குமுறல்கள் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்வார். அந்த இளங்கோவன் இப்போது சேலம் மாவட்டத்தின் அறிவிக்கப்படாத அமைச்சராக மாறி அரசுத் துறை தொடர்பான ஆய்வுகளை நடத்திவருகிறார் என்று திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதற்கு இன்னொரு சம்பவம் உதாரணமாக நேற்று (நவம்பர் 8) நடந்திருக்கிறது.
சேலம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி- பள்ளிக்குப் பின்னால் பெரிய கிரவுண்டு இருக்கிறது. இந்த வட்டாரத்திலேயே மிகப்பெரிய பள்ளி மைதானம் இதுதான். 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கிற இந்தப் பள்ளிக்கு இந்த மைதானம் முக்கியமானதாகவும் இருக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் ஆதி திராவிட மாணவிகள் நல விடுதி கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாகவே இருக்கிறது
இந்நிலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் சில அதிகாரிகள், கட்சியினர் சூழ ஆத்தூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். தலைமை ஆசிரியர் வி.சந்திரசேகர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார். பள்ளிக்குள் சென்ற இளங்கோவன் தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்று தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்துகொள்ள பக்கத்தில் நின்று கொண்டே இருந்தார் தலைமை ஆசிரியர். அதாவது ஆதி திராவிட மாணவிகள் நல விடுதி பற்றிய ஆய்வுக்காக வந்திருக்கிறார் இளங்கோவன். கொஞ்ச நேரம் தலைமை ஆசிரியர் சீட்டில் அமர்ந்து மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே ஆய்வு செய்துவிட்டுப் புறப்பட்டிருக்கிறார். மாணவர்களிடமும் பேசியிருக்கிறார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய ஆத்தூர் நகராட்சி முன்னாள் திமுக உறுப்பினர் ஸ்டாலின்,
“ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக் கல்வித் துறைக்குள் வருகிறது. இளங்கோவனோ கூட்டுறவு வங்கிக்குதான் தலைவர். பள்ளிக்கு வந்து ஆய்வு செய்வதற்கு இளங்கோவனுக்கு அனுமதி அளித்தது யார்? தலைமை ஆசிரியரின் சீட்டில் அமர்ந்து ஆய்வு நடத்துவதற்கு இளங்கோவனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரம் வழங்கியுள்ளாரா? சேலம் மாவட்டத்துக்கு அறிவிக்கப்படாத அமைச்சர் போல இளங்கோவன் நடந்து வருகிறார். அண்மையில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால் ஆளுநரால் ஏதும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஒருவேளை முதல்வரின் பரிந்துரையில் ஆளுநரால் அறிவிக்கப்படாத அமைச்சராக இளங்கோவன் செயல்படுகிறாரா?
ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் இதேபோல இப்பள்ளிக்கு ஆய்வு செய்ய வந்தார் இளங்கோவன். ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் ஒன்றும் செய்ய முடியாமல் கை பிசைந்து நிற்கின்றனர். முதல்வரோ வேறு உரிய பிரதிநிதிகளோ ஆய்வு செய்யட்டும்.கூட்டுறவு வங்கித் தலைவரான இளங்கோவன் இப்படி ஆய்வு நடத்துவது பற்றி முதல்வர் விளக்கம் தரவேண்டும்” என்கிறார் ஸ்டாலின்.
�,”