ராஜீவ் காந்தி கொலை விவகாரம் பற்றி பேசி, இங்கே தமிழகத்தில் சர்ச்சையில் சீமான் சிக்கியிருக்கும் நிலையில், மலேசியாவிலும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
மலேசியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஜனநாயக ஆக்ஷன் கட்சி என்ற கட்சியைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களான ஜி.சாமிநாதன், பி.குணசேகரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் உட்பட 12 பேர் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசிய பயங்கரவாத தடுப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மலேசியாவின் மலேகா, நெக்ரி செம்பிலன்,கேடா, கோலாலம்பூர், சேலங்கர், பரேக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இரு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் மலேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மலேசியாவுக்கு கடந்த காலங்களில் வந்திருந்ததாகவும், அப்போது பல அரசியல்வாதிகளை சந்தித்ததாகவும் மலேசிய சமூக தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டன.
இதுபற்றி அக்டோபர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூரில் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை சிறப்புப் பிரிவின் தலைவரான துணை போலீஸ் கமிஷனர் அயூப் கான் மைதீன் பிச்சை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மலேசியா அரசியல்வாதிகளுடன் சீமான் இருக்கும் புகைப்படங்கள் பற்றி கேட்கப்பட்டபோது,
“தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல அரசியல்வாதி சீமான் மலேசியாவுக்கு கடந்த காலங்களில் வந்துபோயிருக்கிறார். அவர் மலேசியாவில் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கக் கூடியவர்களோடு தொடர்பில் இருக்கிறார். சீமான் மலேசிய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபராக கருதப்பட்டால் அவர் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். இப்போது கைது செய்யப்பட்ட 12 பேரிடம் நடத்தப்படும் விசாரணையில்தான் அது தெரியவரும். சீமான் மலேசியாவில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவான அல்லது நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், நாங்கள் இதுபற்றி குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் பேசி சீமானை மலேசியாவுக்குள் நுழைய விடாதபடி தடுப்போம்” என்ற அயூப் கான் தொடர்ந்து பேசுகையில்,
“மலேசிய அமைச்சர் குலசேகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. விரிவான விசாரணை நடத்திய பிறகே இதுகுறித்து நாம் முடிவெடுக்க முடியும். எந்த அரசியல் விருப்பு வெறுப்பும் இல்லாமல் விசாரணை நடக்கும்” என்று குறிப்பிட்டார்.
�,