நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டி தற்கொலைக்கு முயன்றது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமியிடம் குற்றவியல் நடுவர் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் விஜயலட்சுமி. இதுகுறித்து தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர், அன்று இரவே கண் விழித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
அதற்கு முன்னதாக விஜயலட்சுமி, இதுதான் எனது கடைசி வீடியோ. சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன். சீமானும் ஹரி நாடாரும் என்னை அசிங்கப் படுத்தி வருகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கூறி வீடியோவை வெளியிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ நேற்று தீயாய் பரவியது. இந்த சூழ்நிலையில் எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயலட்சுமியிடம் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அப்போது சீமான் மற்றும் ஹரிநாடார் குறித்து விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை எழுத்துப்பூர்வமாகவும் வீடியோவாகவும் மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டுள்ளார்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து சீமான் மற்றும் ஹரிநாடார் மீது விஜயலட்சுமி தரப்பில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சீமான் மற்றும் ஹரி நடார் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருவதாகவும், இன்றுக்குள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஜயலட்சுமி விவகாரத்தில் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் விளக்கம் அளித்துள்ளார்.
“கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீமானின் தாயாரைப் பற்றி அவதூறாகப் பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருந்தார். இதுவே என்னுடைய கோபத்திற்குக் காரணம் ஆகிவிட்டது. என் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை அவதூறாகப் பேசியதால்தான், நானும் பேச வேண்டிய நிலைமை வந்தது. முதலில் விஜயலட்சுமியை தொலைபேசியில் தான் தொடர்புகொண்டேன். ஆனால் அவர், என்னுடைய அழைப்பை எடுக்கவில்லை, எனவே எனது கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு வீடியோ வெளியிட்டேன் என்று கூறியுள்ளார் ஹரி நாடார்.
இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, “தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள். ஒருவருடைய உயிர் விஷயத்தில் விளையாடாதீர்கள். யாரும் இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து சாகச் செல்லமாட்டார்கள். நான் அதுபோன்ற கீழ்த்தரமானவரும் கிடையாது. மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வருவேன். எனக்காக பிரார்த்தித்த அனைவரும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,