விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவின் சோகம் தாங்காமல் திமுகவினர் இருக்கிறார்கள் என்றால், அதிமுகவினரோ இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபடாமல் உள்ளனர்.
ஜெயித்தால் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் 15 ஆயிரம் என்பதுதான் அதிமுகவினர் போட்டிருந்த கணக்கு. ஆனால் அதையும் தாண்டி 44 ஆயிரத்து 924 அதாவது சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்.
மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகத்துக்கு நிர்வாகிகளின் வாழ்த்து குவிந்துகொண்டிருந்த நிலையில், அதிமுகவினரின் வெற்றிக்கான செயல் திட்டங்கள் குறித்து களத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகளிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாகப் பேசினோம் .
**அமைச்சர்களின் கூடுதல் தாராளம்**
“இடைத்தேர்தல் என்றாலே மக்களுக்கு பணம் கொடுப்பது என்று எழுதப்படாத சட்டமாகிவிட்டது. ஒரு பக்கம் அரசின் சாதனைகள் என்று தலைவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதேநேரம் கள அளவில் செய்துகொண்டிருக்கும் பணிகளை நாங்கள் தெளிவாகச் செய்துகொண்டிருந்தோம்.
தலைமை கொடுத்த பணம் என்பது ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய். இதை அனைத்துப் பகுதிகளுக்கும் சரியாக கொண்டு போய் சேர்த்தது உண்மையிலேயே எங்கள் கட்சி நிர்வாகிகளின் நல்ல குணம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தோடு நிற்கவில்லை எந்தெந்த பகுதியிலெல்லாம் குளோஸ் ஃபைட் ஆக இருக்கிறதோ அதையெல்லாம் கண்டறிந்து, அந்தந்த பகுதிகளின் பொறுப்பாளர்களான அமைச்சர்களே கூடுதலாக பணத்தை வாரி இறைத்தனர். அந்த வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பொறுப்பு வகித்த பகுதியில்… தலைமை கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டலும், நிலைமை கருதி வேலுமணியே தன் சொந்தப் பணத்தை எடுத்து கூடுதலாக வாக்குக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுக்க உத்தரவிட்டார். மேலும் தேர்தல் அன்று கூட யார், எந்தக் கட்சி என்ற பேதம் பார்க்காமல் அனைவர் கைகளிலும் 500 ரூபாய் தாள்களை கொடுத்துக்கொண்டே இருந்தது அமைச்சரின் டீம் இது ஒரு உதாரணம்தான். இதேபோல பல பகுதிகளிலும் அமைச்சர்கள் அந்தந்த பகுதிகளின் நிலைமைக்கேற்ப அள்ளி இறைத்தனர். பணம் மட்டுமல்ல தீபாவளி பண்டிகை வருவதால் வீட்டுக்கு வீடு வேட்டி சேலை, கிப்ட் பாக்ஸுகளும் கொடுக்கப்பட்டன.
ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் முதலில் கொடுத்துவிட்டால் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டது திமுக. அவர்களை விட நாங்கள் தாமதமாகக கொடுத்தாலும் தாறுமாறாகக் கொடுத்தோம். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் திமுகவினர் பண விஷயத்தில் மாறவே மாட்டார்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள். சிலருக்குக் கொடுத்தும் சிலருக்குக் கொடுக்காமலும் பட்டியல் போட்டுக் கொடுத்தார்கள். ஆனால் எங்களுக்கு வந்த உத்தரவு என்னவென்றால், எதிக்கட்சித் தொண்டர்களை முதலில் கவனியுங்கள். அப்புறம் மக்களை கவனியுங்கள் என்பதுதான்.
**அமைச்சரும் அண்ணனும்**
தலைமை கொடுத்த பணம், அந்தந்த பொறுப்பாளர்கள் கொடுத்த பணம் இதையெல்லாம் தாண்டி மாவட்ட அமைச்சர் சி.வி. சண்முகமும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் கையில் ஒரு பட்டியல் வைத்திருந்தனர். அதாவது கடந்த எம்பி தேர்தலில் திமுக கூட்டணி எங்கெல்லாம் அதிக வாக்குகள் வாங்கியதோ அந்த பகுதிகளை மட்டும் குறிவைத்துப் படையெடுத்தனர். அங்கே என்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்தார்கள். அதனால்தான் திமுகவின் ஒன்றிய செயலாளர்களுக்கு சொந்த ஊர் பூத்துகளில் எல்லாம் அதிமுகதான் அதிக அளவு ஓட்டு வாங்கியிருக்கிறது. திமுகவினர் களப் பணியில் யோசித்து யோசித்து செலவழித்தார்கள். நாங்கள் செலவழித்த பிறகு கூட அதுபற்றி யோசிக்கவில்லை” என்றவர்கள் அடுத்து கூட்டணிக் கட்சிகளைப் பற்றி விவரித்தனர்.
**அதிமுகவின் கணக்கை மாற்றிய ராமதாஸ் **
“எங்கள் கூட்டணித் தலைவர்களான விஜயகாந்தை அமைச்சர்கள் நேரில் சந்தித்தார்கள். ஆதரவு தர மறுத்தும் கூட டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோரை அமைச்சர்கள் நேரில் சந்தித்தார்கள். அதுபோல பாஜகவின் ஆதரவு கேட்டு அமைச்சர் ஜெயக்குமார் கமலாலயத்துக்கே சென்றார். ஆனால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தேடிச் சென்று ஆதரவு கேட்டதாக வெளிப்படையான எந்தத் தகவலும் இல்லை.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்களுக்கு சற்று குறைவான அளவில் என்றாலும் பரவலாக அடர்த்தியாக தலித் மக்களும் இருக்கிறார்கள். எனவே ராமதாஸை தொகுதிக்குள் பிரச்சாரத்துக்குள் அழைத்து வந்தால் எங்களுக்கு (அதிமுகவுக்கு) இயல்பாக விழக் கூடிய தலித் மக்கள் ஓட்டு கிடைக்குமோ கிடைக்காதா என்று சி.வி.சண்முகத்துக்கு ஒரு சந்தேகம். மேலும் ராமதாசுக்கும் 80 வயதாகிவிட்டது அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தோம்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர் சமூகத்துக்கு செய்த நன்மைகள் பற்றி விரிவான ஓர் அறிக்கை வெளியிட்டதால் தனது இருப்பைக் காட்ட வேண்டிய நிலைக்கு ராமதாஸ் தள்ளப்பட்டார். அதனால்தான் கடந்த பொதுத் தேர்தலில் கூட பிரச்சாரத்தில் பெரிய அளவில் பங்கெடுக்காத ராமதாஸ், இந்த இடைத்தேர்தலைக் குறிவைத்துக் களத்தில் இறங்கிவிட்டார். ராமதாஸ் பிரச்சாரத்தால் தலித் ஓட்டுகள் கிடைக்குமோ கிடைக்காதா என்று நாங்கள் கருதினோம். ஆனால் ராமதாஸ் திமுகவினரை நோக்கி, ‘உங்களில் யாரும் மாவட்டச் செயலாளருக்கு தகுதியுள்ளவர்கள் யாரும் இல்லையா?’ என்று பிரச்சாரத்தில் கேட்டதற்கு திமுக தரப்பினரே உள்ளுக்குள் வரவேற்பு தெரிவித்தனர். ‘நாங்க வெளிப்படையாக சொல்ல முடியாம தவிக்கிறோம். ராமதாஸ் வெளிப்படையா சொல்லிவிட்டார்’ என்று திமுக நிர்வாகிகளே எங்களிடம் கூறினார்கள். எனவே ராமதாஸ் ஃபேக்டர் எங்களுக்கு வேறு வகையில் உதவி விட்டது” என்று களத்தின் புதிய கோணத்தை சுட்டிக் காட்டினார்கள் அதிமுக நிர்வாகிகள்.
**தலித்துகளை வைத்துக் கொண்டு வன்னியர் பிரச்சினை பேசிய ஸ்டாலின்**
”இப்படியாக திமுகவில் இருக்கும் வன்னியர்களை கூட ராமதாசின் பிரச்சாரம் யோசிக்க வைத்தது என்றால், ஸ்டாலின் மேடையில் வன்னியர்களைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டே இருக்க எதிரே முதல் வரிசையில் அமர்ந்திருந்தது எல்லாம் தலித் மக்கள்தான். இதனால் அவர்களும் திமுக மீது சலிப்படைந்துவிட்டர்கள்” என்பதைக் குறிப்பிட்டு தாங்களுக்கு எதிரான அம்சங்கள் கூட தங்களுக்கு சாதகமாக மாறியதைக் குறிப்பிட்டனர் அதிமுக நிர்வாகிகள்.
**தேர்தலன்று மதியம் வரை… **
தேர்தல் அன்று மதியத்துக்கு மேல் பல பூத்துகளில் அதிமுக பொறுப்பாளர்கள் ஓரிருவரை உள்ளே வைத்துவிட்டு வெளியே சென்றார்கள். இதைப் பார்த்த திமுகவினர் அப்போதும், ‘ரிசல்ட் அதிமுகவுக்கு எதிராக வரப் போகுதுன்னு தெரிஞ்சு போறாங்க பாரு’ என்று எங்கள் காதுபடவே பேசினார்கள். ஆனால் கொஞ்ச நேரத்தில் எங்கள் பூத் பொறுப்பாளர்கள் விடுபட்ட வாக்காளர்களை எல்லாம் தேடிப் பிடித்து கூட்டி வந்து வாக்களிக்க வைத்தார்கள். இதுதான் அதிமுகவின் களப்பணி” என்று தங்களின் வெற்றி ரகசியத்தை விவரித்து முடித்தனர் அதிமுகவினர்.
�,”