=
சாலையில் கண்டெடுத்த 10,000 ரூபாயை போலீஸில் ஒப்படைத்த சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவிகளை செம்பியம் இன்ஸ்பெக்டர் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
சென்னை பெரம்பூர் வீனஸ் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வரும் மாணவிகள் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகியோர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது சாலையில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து பார்த்தனர். அதில் ரூ.10,000 இருந்தது. அந்த வழியாக சென்ற யாரோ அந்த பணத்தை சாலையில் தவறவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.
அந்தப் பணத்தை எடுத்து பத்திரமாக வைத்துக்கொண்ட மாணவிகள், நேற்று காலை பள்ளிக்குச் சென்றதும், ஆசிரியர்கள் சுரேந்திரபாபு, திருச்செல்வன் ஆகியோரிடம் நடந்த விவரங்களை கூறி பணத்தை ஒப்படைத்தனர். ஆசிரியர்கள், அந்தப் பணத்தை செம்பியம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதியிடம் கொடுத்து, அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து அதை ஒப்படைக்கும்படி தெரிவித்தனர்.
சாலையில் கண்டெடுத்த 10,000 ரூபாயை நேர்மையுடன் போலீஸில் ஒப்படைத்த மாணவிகள் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகியோரை இன்ஸ்பெக்டர் கோமதி நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார். மேலும் அவர்களுக்கு சன்மானமாக 500 ரூபாய் வழங்கினார். செய்தி அறிந்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவிகளுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
**-ராஜ்**
.�,