பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுபோலவே பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த தனித்தேர்வரின் தந்தையான பொறியாளர் பாலசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனித் தேர்வர்களின் தேர்வு முடிவினை அறிவிக்கும் வரை மேல்நிலைப் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகள் எப்போது தொடங்கும் எனப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தது.
இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு நேற்று (ஆகஸ்ட் 25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, “தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை” என்ற தகவலைத் தெரிவித்தார்.
தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதன்பிறகு இரண்டு வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
**எழில்**�,