�
அரசு பள்ளி கட்டடம் ஒன்று கனமழையின் காரணமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அணைகள், குளங்கள், ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்கள், மின்கம்பங்களும் விழுந்துள்ளன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள வானதிராயபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் கட்டடம் ஒன்று இன்று (நவம்பர் 18) காலை 10.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த பள்ளிக் கூடம் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இங்கு மொத்தமாக 35 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் உள்ள நெய்வேலி டவுன் பள்ளியில் அதிகளவில் மாணவர்கள் சேர்வதால் அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்நிலையில், எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்த பள்ளி கட்டடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை மாணவர்கள் உள்ளே இருந்தால், அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்த அத்தொகுதி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார். பின்பு, கலெக்டருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை கலெக்டர் வழங்கியுள்ளார்.
**-வினிதா**
�,