kகனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு!

Published On:

| By Balaji

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரகோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரதமரின் மக்கள் தொடர்பு இயக்குநர் கேமரூன் அகமது ட்விட்டர் அக்கவுண்டில் பகிர்ந்திருக்கும் சோஃபியின் அறிக்கை மூலம் இது உறுதியாகியிருக்கிறது.

கனடா நாட்டின் ஏழு மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை 153 நபர்களைத் தாக்கியிருக்கிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே உயிரிழந்திருந்தார். கொரோனா வைரஸின் தொடர் பாதிப்பினால் கனடா நாட்டின் மக்கள் உயர் எச்சரிக்கைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால், சில தினங்களுக்கு முன்பாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் வீட்டிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அவரது மனைவி சோஃபி கிரகோருக்கு ஏற்பட்ட காய்ச்சலின் மூலம் சந்தேகம் ஏற்பட்டது. சோஃபியின் நிலை நாளுக்கு நாள் மோசமானதால் ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பம் மொத்தமும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எவ்வித அறிகுறிகளும் தென்படாததால், பிரதமரின் அலுவல்களைத் தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ தொடரலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், ‘சோஃபியின் ரிசல்ட் வரும் வரை நான் தனிமையிலேயே இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார் ஜஸ்டின். இதனால், இத்தாலிய பிரதமர் குசிப்பி கோண்ட், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரோடு நடைபெறவிருந்த கொரோனா கேபினேட் மீட்டிங் தள்ளிப்போவதற்கான சூழல் நிலவியது. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் என்னால் இந்நிகழ்வு தள்ளிப்போகக்கூடாது என்று முடிவெடுத்த ஜஸ்டின், ஃபோன் மூலமாக பேசிக்கொள்ளலாம் என்று கூறி வெற்றிகரமாக மீட்டிங்கை முடித்தனர்.

இத்தாலி, மற்றும் இங்கிலாந்து பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபருடன் ஜஸ்டினின் மீட்டிங் முடிந்ததும் சோஃபியின் மருத்துவ பரிசோதனை ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. அதில், சோஃபிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து சோஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் “என்னுடைய நண்பர்கள், குடும்பம் மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் முதலில் நன்றி. கொரோனா பாதிப்பால் இப்போது கொஞ்சம் சகஜமற்ற நிலையில் இருந்தாலும், மீண்டும் நான் குணமாகி வருவேன். கொரோனா பாதிப்பினால் மிகவும் மோசமான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கனடா மக்களின் நிலைக்கு முன்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருக்கும் என் நிலை ஒன்றுமே இல்லை. இந்த கட்டத்தை நாம் ஒன்றாகச் சேர்ந்தே கடந்து செல்வோம். உண்மை நிலவரங்களை அறிவித்து உங்களது உடல் நலனில் தீவிர கவனம் செலுத்துங்கள். என்னுடைய தைரியத்தையும், நல்லெண்ணத்தையும் உங்களுக்கு அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டவர், “என் தைரியத்தை கட்டிப்பிடித்துச் சொல்லாமல் தூரமாக இருந்தே சொல்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்டவர். அவரது பலதரப்பட்ட மக்களையும் அரவணைத்துச் செல்லும் நற்செயல்கள் கனடாவைத் தாண்டி பல நாடுகளிலும் பிரசித்தி என்பதால் சோஃபி விரைவில் குணமடைய மக்கள் தைரியம் கூறிவருகின்றனர்.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share