விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒரு வாரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறவில்லை.
ஆனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிரதோஷம், ஆடி அமாவாசை திருவிழாவுக்கு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “சதுரகிரி கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக மூன்று நாட்கள் அனுமதி அளித்து ஒரு வாரத்துக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சதுரகிரிக்குச் செல்லும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-ராஜ்