சிறப்புக் கட்டுரை: ஜெயராஜ் – பென்னிக்ஸ்: வளர்ப்பு நாயின் துக்கம் நீதியின் முதுகெலும்பைத் தேடுகிறது!

Published On:

| By Balaji

ச.மோகன்

தாளாத துக்கத்தால் தளர்ந்து போனது பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி. சாத்தான்குளம் போலீஸாரால் கொடூரமாகச் சித்ரவதைச் செய்யப்பட்டுச் சிறைக் காவலில் மாண்டு போன தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் படு சாவு ஏற்படுத்திய துயரில் டாமி துவண்டு போயுள்ளது. உணவு உண்ண மறுக்கிறது. அருந்தும் நீரின் அளவைக் குறைத்துள்ளது. இதே நிலை நீடித்தால் உண்ணாநிலையில் இன்னுயிரை டாமி தானே மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும். ஏனெனில் இது வழக்கமான நாய் அல்ல; மாறாக அவர்களது குடும்பத்தில் ஓர் அங்கம், அதனால்தான் டாமியின் சோகம், துயரம், துக்கம் போன்றவற்றில் புதைந்து கிடக்கும் மனித உரிமைகள் சார்ந்த கேள்விகள் நீதித் துறையின் முதுகெலும்பைத் தேடுகின்றன.

**கள ஆய்வுக் கூறும் காவல் மரணத்துக்கான காரணம்:**

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி, தங்களது ஏபிஜே மொபைல் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தி, சாத்தான்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். **இது முற்றிலும் தவறு. நிகழ்ந்த உண்மை யாதெனில், வழக்கம் போல் சீருடையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் 18.6.2020 அன்று இரவு 8.15 மணிக்கு ரோந்துப் பணியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் பென்னிக்ஸின் ஏபிஜே மொபைல் கடை உட்பட அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.**

இதுபற்றி நேதாஜி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஆட்டோ ஓட்டுநர் கூறும்போது “ஏபிஜே மொபைல் கடைக்கு அருகில் உள்ள கடையில் சுமார் 15 தொழிலாளர்கள் கூடி இருந்தனர். அதைப் பார்த்த எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் அவர்களிடம் உரிய மரியாதையுடன் ‘நீங்கள் யார், இந்த நேரத்தில் ஏன் இங்கே கூட்டமாக நிற்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் கட்டட வேலை செய்யும் தொழிலாளர்கள். கூலி வாங்கக் காத்திருக்கிறோம்; என்று பதிலளித்தனர். உடனே எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் அவர்களிடம் ‘இரவு 8 மணிக்குப் பிறகு இங்கே நிற்க வேண்டாம். வீட்டுக்குச் சென்று நாளை காலை கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அந்த நேரத்தில் ஜெயராஜ் தனது கடையை நோக்கி வந்து கொண்டிருந்தார். தூரத்தில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன்

தொழிலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை அடையாளம் கண்டு கொண்டார். அவருடைய கடை அருகே வந்ததும் அங்கிருந்தவர்களிடம் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் என்ன சொன்னார் என்று தேவையற்ற இழி சொற்களால் பேசினார். இதை அருகிலுள்ள நேதாஜி ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஒரு ஆட்டோவில் அமர்ந்திருந்த ஒரு போலீஸ்காரர் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த போலீஸ்காரர், தான் கேட்டதை அப்படியே எஸ்.ஐ.பாலகிருஷ்ணனுக்குத் தெரிவித்தார், பின்னர் அதை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்குத் தெரிவித்தார்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜெயராஜ் கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் பெயர் சொல்ல விரும்பாத மற்றொரு கடைக்காரர் கூறும்போது “19.6.2020 அன்று இரவு சுமார் 7 மணியளவில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் சீருடையில் வந்தார். அவருடன் ஒரு காவலர் சீருடையில் வந்தார். ஏ பி ஜே மொபைல் கடை முன் நின்றுகொண்டு, ‘நேற்று என்னைப் பற்றித் தவறாகப் பேசியவன் யார்? இப்போது தனியாக வந்திருக்கிறேன். யாருன்னு தெரிஞ்சா அவன் நெஞ்சைப் பிளந்திடுவேன்’ என்று கெட்ட வார்த்தைகளால் திட்டினார். அங்கிருந்த ஜெயராஜ் அவரிடம், ‘உங்களை இங்கு யாரும் தவறாகப் பேசவில்லை. உங்களை யாரு சார் பேசுவா’ என்று கூறினார். அதன் பின் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் அங்கிருந்து அவர் வந்த போலீஸ் வண்டியை நோக்கிச் சென்றார். **அப்போது முதல் நாள் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனைத் தவறாக ஜெயராஜ் பேசியதை நேரில் பார்த்த போலீஸ்காரர்

எஸ்.ஐ. பாலகிருஷ்ணனிடம் சார் இப்போது உங்களிடம் பேசினவன்தான் உங்களை நேற்று தவறாக ஏசியவன்’ என்று கூறினார்.**

உடனே எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஒரு காவலருடன் திரும்பிச் சென்றார். இருவரும் ஜெயராஜை விசாரணைக்குக் காவல் நிலையம் அழைத்தனர். ஜெயராஜ் மறுப்பேதும் கூறாமல் காவல் வண்டியில் ஏறிச் சென்றார்” என்று அவர் தெரிவித்தார்.

“இதைக் கேள்விப்பட்ட ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஸ்டேஷனுக்குச் சென்று காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். **ஒருகட்டத்தில் பென்னிக்ஸ் கோபத்தில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மார்பு மீது கை வைத்து தள்ளியதால் அதில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனின் யூனிஃபார்மில் இருந்த முன் பட்டன், தோள் பட்டையிலிருந்த ஸ்டார் ஆகியவை அறுந்து கீழே விழுந்தது, அதே வேளையில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனும் நிலை குலைந்து தடுமாறிக் கீழே விழுந்தார். இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் போலீஸையே அடிச்சிட்டியா என்று கூறியவாறு காவல் நிலையக் கதவை அடைக்குமாறு கடுங்கோபத்துடன் கூறினார். ‘போலீஸை அடித்தவனை இந்த ஸ்டேஷன்ல உள்ள எல்லா போலீஸாரும் அடிங்க. அடிக்கிற ஒவ்வொரு அடியும் என் காதில் விழணும்’ என்று உத்தரவிட்டார்.** மேலும், ஜெயராஜ் சார்பாக வந்திருந்த வழக்குரைஞர்களையும் காவல் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார். நான்கு இளம் வழக்குரைஞர்கள் உடனே வெளியேறினார்கள். இரண்டு பேர் தயங்கியபடி நின்றனர். அவர்களைப் போலீஸார் பிடித்துத் தள்ளி வெளியேற்றினர்” என்று சம்பவத்தை நேரில் பார்த்த பெயர் சொல்ல விரும்பாத இளம் வழக்குரைஞர் தெரிவித்தார்.

எஸ்.ஐ. பாலகிருஷ்ணனை அவதூறாக ஜெயராஜ் பேசியதும், எஸ்.ஐ. பாலகிருஷ்ணனைக் காவல் நிலையத்துக்குள் வைத்து பென்னிக்ஸ் இம்மானுவேல் தாக்கியதும், காவலர்களின் திட்டமிட்ட கொடூரமான கட்டாயக் காவல் சித்ரவதைக்கு வழிவகுத்து சிறைக் காவல் மரணத்தில் முடிவுற்றது. **எஸ்.ஐ. பாலகிருஷ்ணனின் காவல் சீருடையில் இருந்த பட்டனும், ஸ்டாரும் அறுந்து கீழே விழுந்ததற்கு இரண்டு மனித உயிர்கள் மண்ணில் சடலமாய்ச் சாய்ந்தன. இதுவே கள ஆய்வு சொல்லும் உண்மை.**

**டாமியின் துக்கம் எழுப்பும் கேள்விகள்:**

இங்கே சட்டத்தை முழுமையாக மதித்து நடக்க வேண்டிய போலீஸார் அதை மூர்க்கமாக மீறித் தந்தையையும், மகனையும் கட்டாயக் காவல் சித்ரவதை செய்ததால் இருவரும் சிறைக் காவலில் உயிரிழக்க நேரிட்டது. இந்த நிகழ்வு, ஐக்கிய நாட்டவையின் பொதுச் செயலாளர் அன்டோனியா கட்ரெஸ் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இது வழக்கமான காவல் மரணம் அல்ல. வழக்கமான கள அனுபவத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டை, நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை, செம்மரக் கடத்தல், திருட்டுக் குற்றம், கொலைக் குற்றம் போன்றவைத் தொடர்பான விசாரணையில் பலர் காவல் சித்ரவதையால் அரச படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறப்பெற்ற வழக்கமான குற்றச் செயலுக்குக் கிஞ்சித்தும் தொடர்பில்லாத, எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத, இதற்கு முன் வழக்கு ஏதுமில்லாத அப்பாவித் தந்தையும், மகனும் காவல் மரணம் அடைந்த சேதி, **உலகையே உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தின் தொடர்ச்சியாக அமைந்ததே காரணமாகும். எஜமானரின் மரணம் குறித்து டாமி எழுப்பும் நியாயத்தின் கேள்விகள் பொதுச் சமூகத்தில் மட்டுமல்ல, உலகளவில் மானிட உரிமைகளைப் பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் மனித உரிமைக் காப்பாளர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.**

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணங்கள் குற்றவியல் நீதி முறைமைக்குள் வெகு மக்களுக்கான நீதி குறித்து மட்டுமல்ல, கைது செய்வதற்கு முந்தைய, பிந்தைய சட்ட நடைமுறைகள், காவல் சித்ரவதை, காவல் மரணம் போன்றவை குறித்து, சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு, டாமியின் துக்கம் சில முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.

**1. இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 பிரிவு 21:**

காவல் விசாரணை முறை என்பது இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள உயிர் வாழும் உரிமை, கண்ணியமாக மனித மாண்புடன், சுதந்திரமாக நடத்தப்படுவதற்கான உரிமை, சித்ரவதை, கீழ்த்தரமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை ஆகியவற்றுடன் இயைந்ததாக இருக்க வேண்டும்.

இவை யாவும் காவலில் உள்ள கைதிகளுக்கு மறுக்க முடியாதவை ஆகும். ஆனால், ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் இவை மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு பிரிவு 21ஐ அப்பட்டமாக மீறிய செயலாகும். மேலும் அடிப்படை மனித உரிமைகளை மதிக்கத் தவறிய மீறலாகும்.

**2. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973:**

இச்சட்டம் கைது செய்ய காவல் துறைக்கு உள்ள அதிகாரம் பற்றிக் கூறுகிறது. அதே வேளையில் கைது செய்யப்பட்டவரின் பாதுகாப்பு குறித்துப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் தெளிவாக விரித்துரைக்கிறது. **இங்கே காவல் துறை தனக்குள்ள அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட தந்தை, மகன் இருவரையும் இச்சட்டப்படி பாதுகாக்கத் தவறிவிட்டது.**

**3. டி.கே.பாசு எதிர் மேற்குவங்க அரசு (18.12.1996):**

பெருகி வரும் காவல் மரணங்களை மட்டுப்படுத்த வேண்டும் என்ற சமூக நோக்கில் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் 20, 21, 22 ஜூலை 1986,

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் 17 ஜூலை 1986 ஆகிய தேதிகளில் வெளியான சேதிகளைச் சுட்டிக்காட்டி, மேற்கு வங்கத்தில் உள்ள அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் காவல் சித்ரவதை, காவல் மரணம் ஆகியவற்றால் பாதிப்புற்றக் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இக்கடிதம் 9.2.1987 அன்று பொது நல வழக்கின் கீழ் ‘ரிட் பெட்டிசனாக’ உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. இதன் அடிப்படையில் டி.கே.பாசு எதிர் மேற்குவங்க அரசு வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிகுத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 18.12. 1996 இல் வழங்கியது. இத்தீர்ப்புக் கைதின் போது கடைப்பிடிக்க வேண்டிய 11 வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக கைது செய்யப்பட்டவரின் வழக்குரைஞர் அவரைச் சந்திக்க அனுமதி அளிக்கப் பெறல் வேண்டும்.

கைது குறித்து மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப் பெறல் வேண்டும். **உண்மையிலேயே இந்நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் தந்தை, மகன் மரணம் தடுக்கப்பட்டிருக்கும். கைதின்போது கடைப்பிடிக்க வேண்டிய டி.கே.பாசு வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதல்கள் காவல் நிலையம் வருவோர் கண்களில் தெளிவாகத் தெரியும்படி அறிவிப்புப் பலகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் எடுப்பாக இருக்க வேண்டும். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இந்நடைமுறை இந்நாள் வரை பின்பற்றப் பெறவில்லை. தமிழ்நாட்டில் எத்தனைக் காவல் நிலையத்தில் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது அந்த உச்ச நீதிமன்றத்திற்கே வெளிச்சம்.**

**4. அர்னேஷ் குமார் எதிர் பிகார் மாநிலம் (2 ஜூலை 2014):**

இந்தியா விடுதலை அடைந்து எழுபது ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் காலனி ஆதிக்க அதிகாரக் கவர்ச்சியிலிருந்து

காவல் துறை இன்னும் விடுபடவில்லை. காவல் துறையின் இந்த கட்டற்ற அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நெறிமுறையில்

அர்னேஷ் குமார் எதிர் பிகார் மாநிலம் வழக்கில், 2 ஜூலை 2014 அன்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புநிறைத் தீர்ப்பை உச்சரித்தது.

இத்தீர்ப்பின்படி ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வழக்கின் விசாரணைக் கைதிகளை சிறையில் அடைக்காமல் காவல் நிலைய பிணையில் விட வேண்டும். இங்கே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது Cr.No:312/2020 u/s 188,269,294(b).353,506(ii) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை யாவும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடியவை. இங்கு காவல் துறையும், சாத்தான்குளம் குற்றவியல் நடுவரும் அர்னேஷ் குமார் எதிர் பிகார் மாநிலம் வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சிறையில் அடைத்து விட்டனர். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தைச் செய்துள்ளனர்.

**5. காவல் துறைத் தப்பிக்கும் சட்டத்தின் ஓட்டைகள்:**

கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இச்சட்டத்தின் பிரிவு 46(1)இன்படி, ‘உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய ஒருவரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தைத் தெரிவித்தவுடன், அவர் கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாகத் தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய ஒருவர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாகத் தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்டவர் தப்பித்துச் சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்.’

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)இன் படி, ‘கைது செய்யப்பட வேண்டிய ஒருவர், கைது முயற்சியை வன்மையாகத் தடுத்தாலோ அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாகத் தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்குத் தேவையான வழிமுறைகளைக் கையாளலாம்.’ அதாவது தப்பியோட முயற்சிப்பவரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும் தேவையான அளவுக்குத் தாக்கியும் அவரைத் தடுத்து நிறுத்தலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(3)இன்படி, ‘கைது செய்யப்பட வேண்டிய ஒருவர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக, குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. அதாவது, கைது செய்யப்படவேண்டிய ஒருவர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சி செய்தாலோ – கைதைத் தவிர்க்க முயற்சி செய்தாலோ அதைத் தடுப்பதற்காக முயற்சி செய்யும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய ஒருவருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.’

**மேற்கூறப் பெற்ற குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் இங்கே காவல் நடைமுறைச் சட்டங்களாக உள்ளன. காவல் சித்ரவதை, காவல் மரணம், திட்டமிட்ட மோதல் சாவுகள் போன்றவை எல்லாம் தொடர்ந்து அதிகரிப்பதற்கு மேற்கூறப் பெற்றவையே காரணமாகும். இவற்றில் திருத்தம் கொண்டு வராமல் காவல் சித்ரவதை, காவல் மரணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வது கானல் நீராகும்.**

**6. காவல் துறையின் கைப்பாவையாக மருத்துவத் துறை, நீதித் துறை, சிறைத் துறை:**

கைது செய்யப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் தகுதி மருத்துவச் சான்றிதழ் பெற்று, அதன் பின்னர் குற்றவியல் நடுவர் முன் நேர் நிறுத்தி, மருத்துவச் சான்றிதழில் உள்ள உடற்தகுதியோடு கைதானவர் இருக்கிறாரா என்பதைக் குற்றவியல் நடுவர் உறுதிபடுத்திய பின், உடல்நலம் சீராக இருந்தால் சிறைக்கும், உடல்நலம் குன்றியிருந்தால் அரசு மருத்துவமனைக்கும் அனுப்புவது நடைமுறை ஆகும். ஆனால் இந்த நடைமுறை இங்கு 99 விழுக்காடு பின்பற்றப்படுவதில்லை. அரிதாக ஒரு விழுக்காடு பின்பற்றப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சாத்தான்குளம் காவலர்களால் கொடூரமாகச் சித்ரவதைச் செய்யப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சாகும் தறுவாயில் இருந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் உண்மையான உடற்தகுதி சான்றிதழ் வழங்கியிருந்தால் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். காவல் துறைக்குச் சாதகமாக, மனசாட்சிக்கு விரோதமாக, மனிதாபிமானமே இல்லாத மானிடராக, பொய்யான சான்று கொடுத்ததால் அவர்கள் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர். **ஒரு பெண் மருத்துவர் கொடுத்த பொய்யான மருத்துவச் சான்று இரண்டு ஆண்கள் மாண்டு போக மூலகாரணமாகிறது. அதையும் தாண்டி அக்குடும்பம் ஆண் இல்லாத குடும்பமாகி விட்டது. குற்றவியல் நடுவர் மருத்துவச் சான்றிதழையும் கைதானவரையும் ஒப்பு நோக்காமல் காவலர்கள் கொடுத்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.**

சிறை அதிகாரியோ இருவரின் நிலையைப் பார்த்து சிறையிலடைக்காமல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்திருக்க வேண்டும். அதை விடுத்துக் கடமைக்குக் காயங்களைப் பதிவு செய்து விட்டு இருவரையும் சிறைக்குள் அனுமதித்து அடைத்து விட்டார்.

குற்றுயிரும் குலையுயிருமாகச் சாகும் தறுவாயில் இருந்தவர்களிடமே மருத்துவரும், குற்றவியல் நடுவரும் பாரமுகமாக நடந்துள்ளது அவர்கள் காவல் துறையின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாக உள்ளது.

**7. அகில உலக மனித உரிமைப் பிரகடனம்:**

1948 டிசம்பர் 10ஆம் நாள் உருவான அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் பிரிவு 5 ‘யாரையும் சித்ரவதைச் செய்யக் கூடாது. கொடூரமாக, மனிதத்தன்மையற்றுக் கேவலமாக நடத்தக் கூடாது. கொடூரமான, மனிதத் தன்மையற்றக் கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது’ என்று அறிவுறுத்துகிறது.

காவல்துறையினர் சித்ரவதை, அடக்குமுறை, கெடு நடத்தைமுறை போன்றவற்றைப் பயன்படுத்துவதும், இத்தகைய முறைகேட்டால் பாதிப்புற்றவர்களுக்கு நீதி வழங்கத் தவறுவதும் அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின்படி இந்தியாவுக்குள்ள தார்மிகக் கடப்பாடுகளை மீறுவதாகும். குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு ஒப்பந்தத்துக்கு இந்தியா ஏற்பிசைவு அளித்துள்ளது. மேலும் சித்ரவதை, பிறவகைக் கொடிய, மனிதத்தன்மையற்ற அல்லது இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைமுறைக்கு எதிரான ஒப்பந்தத்திலும் இந்தியா ஒப்பமிட்டுள்ளது. காவலில் இருப்பவர்களுக்கு எதிரான சித்ரவதையையும் பிறவகை மோசமான முறைகேடுகளையும் தடுக்க முயலும் கட்டாயக் காணாமற் போகச் செய்தலுக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தத்திலும் இந்தியா ஒப்பமிட்டுள்ளபோதிலும் இன்னும் அதற்கு ஏற்பிசைவு வழங்கவில்லை.

சித்ரவதைச் செய்தல், மோசமாக அல்லது இழிவாக அல்லது மானக்கேடாக நடத்துதல் போன்றவற்றைத் தடுப்பதற்கான விதிகளைக் காவல் துறையினர் கடுமையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே காவல் சாவுகளைத் தடுக்க முடியும். அதே போன்று சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கடமை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்காவல் துறையே சட்ட மீறலுக்குப் பொறுப்புக்கூறும் விதி உருவாக்கப்பட்டுக் கடுமையாகக் கடைப்பிடிக்கப் பெறல் காலத்தின் அவசியம். அப்போதுதான் சட்டத்தின் ஆட்சி குறித்து

இந்தியா பெருமை பேச முடியும்.

** அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாகி 60ஆம் ஆண்டு நிறைவிலும் மீறல்கள், சித்ரவதைகள் போன்ற குற்றங்கள் தடையின்றிப் பரவலாகத் தொடர்கிறது. இப்பிரச்சினைகள் யாவும் உலகளாவிய சவாலாகவே உள்ளன. இதை எதிர்த்துக் குரலற்ற டாமியின் குரல் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கிறது.** காவல் சித்ரவதைக்கும், காவல் மரணத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் உலகளாவிய நடவடிக்கைத் தேவையென எதிரொலிக்கிறது. நாகரிகச் சமூகத்தின் கறுப்புப் பக்கத்தில் ஒரு நாயின் குரலும் பதிவுறுகிறது காவல் சித்ரவதைகளுக்கு எதிராய்… காவல் மரணங்களுக்கு எதிராய்….

**கட்டுரையாளர் குறிப்பு:**

மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ச.மோகன், தற்போது மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை நேரடியாக அணுகி பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share