உலக பொருளாதார கூட்டமைப்பின் 50ஆவது மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், நேற்று (ஜனவரி 22) பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ், நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில்,“வேளாண் நிலங்களில் மரங்கள் இல்லாமல் போனதால் நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது” என உலக பொருளாதார மாநாட்டில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.
உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1 லட்சம் கோடி மரங்கள் (1 டிரில்லியன்) நடுவதற்கான புதிய முன்னெடுப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு டாவோஸில் இன்று (ஜனவரி 22) நடைபெற்றது.
இதில் சத்குரு பங்கேற்றுக் கூறியதாவது, ”பூமியில் உள்ள மண்ணில் 50 முதல் 60 சதவீதத்தை நிழலில் வைத்துக்கொண்டால் தான் சூழலியலை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். மண் வளமாக இருக்க மரங்கள் அவசியம். வேளாண் நிலங்களில் மரங்கள் இல்லாமல் போனதால் நாம் உண்ணும் உணவில் ஊட்டச் சத்துக்களின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இதைச் சரிசெய்யப் பயிர்களுடன் மரங்களையும் சேர்த்து வளர்க்க வேண்டும்.
பயனற்ற இடங்களில் (Waste land) மரங்கள் நடுவதைக்காட்டிலும், விவசாயிகளுக்கு வருமானம் அளிக்கும் விதமாக வேளாண் நிலங்களில் மரங்கள் நட்டு வளர்ப்பது சிறந்தது. டிம்பர் என்பது ஒரு லாபகரமான பொருளாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு டிம்பர் பொருட்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. எனவே, அதை வன உற்பத்தி பொருளாகக் கருதாமல், வேளாண் உற்பத்தி பொருளாக அறிவிக்க வேண்டும்.
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 220 மில்லியன் மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளார்கள். அதேபோல், உலகளவில் 1.6 பில்லியன் மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள். இவ்வளவு அதிகமான மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வது நல்லதல்ல. இதைத் தடுக்க நாம் பல செயல்களைச் செய்ய வேண்டும். அதில் மிக முக்கியமாக விவசாயிகளை அவர்களின் நிலத்துடன் தொடர்பில் இருக்குமாறு வழிவகை செய்ய வேண்டும்.
விளைநிலங்களில் மரங்கள் நீண்டகால பயிராக இருந்து நல்ல லாபம் தந்தால் கிராம மக்கள் நகரங்களுக்குச் செல்லாமல் தடுக்க முடியும். சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் பொருளாதார வளர்ச்சி மட்டும் தான் நிகழும். சுற்றுச்சூழல் மேம்படாது.
இவ்வாறு பேசினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொலம்பியாவின் அதிபர் இவான் டுக்யூ, சேல்ஸ்ஃபோர்ஸ் டாட் காம் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆஃப், சர்வதேச சூழலியல் செயற்பாட்டாளர் ஹிண்டோவ் ஒமொரொவ் இப்ராஹிம் மற்றும் விஞ்ஞானி டாக்டர் ஜானே குட்டால் ஆகியோர் சத்குருவுடன் பங்கேற்றனர்.
சத்குரு இம்மாநாட்டில் 3 நாட்கள் தியான வகுப்பையும், ’கான்சியஸ் ரெட்ரீட்’ என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.�,”