}அரசு டாக்டரை மிரட்டிய சாத்தான்குளம் போலீசார்!

Published On:

| By Balaji

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜூன் 28ஆம் தேதி விசாரணை மேற்கொண்டு… அது குறித்த விவரங்களை ஜூன் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். அதனடிப்படையில் சாத்தான்குளம் போலீசார் மாஜிஸ்திரேட் பாரதிதாசனை மிரட்டிய விவகாரம் அம்பலமானது.

இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடர்ந்து வருகிறார். கடுமையான காயங்களுக்கு உள்ளான ஜெயராஜையும் அவர் மகன் பென்னிக்ஸையும் நீதிமன்ற காவலுக்கு சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் அனுப்பியது எப்படி என்று விவாதம் ஆனது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா விடம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே அவர்கள் மாஜிஸ்திரேட் சரவணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். மருத்துவர் வெண்ணிலாவின் சான்றிதழின் அடிப்படையில் மாஜிஸ்ட்ரேட் சரவணன் ரிமாண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

மருத்துவர் வெண்ணிலா சாத்தான் குளத்துக்கு மாறுதலாகி வந்து சில மாதங்களே ஆகின்றன. இந்நிலையில் போலீசார் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அழைத்து சென்று அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கான மருத்துவ தகுதிச் சான்றிதழ் தருமாறு கேட்டிருக்கிறார்கள். இருவருக்கும் ஏற்பட்ட காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வெண்ணிலா இவர்களுக்கு தகுதி சான்றிதழ் தர மறுத்துவிட்டார். ஆனால் போலீசார் அங்குள்ள சீனியர் டாக்டர் ஒருவர் மூலம் தாங்கள் கேட்டபடி சான்றிதழ் தருமாறு மிரட்டியுள்ளார்கள். அதையடுத்தே இருவருக்கும் மருத்துவ தகுதிச் சான்றிதழ் கொடுத்துள்ளார். அந்த பயத்திலேயே நான்கு நாட்கள் விடுமுறையில் சென்றார். பின்னர் 15 நாட்கள் விடுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், இன்று ஜூலை 1ஆம் தேதி திருச்செந்தூர் விருந்தினர் மாளிகையில் மருத்துவர் வெண்ணிலா விடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் பிற்பகல் தொடங்கி நான்கு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.

இந்த விசாரணையில் காயங்களுடன் இருந்த இருவருக்கும் தகுதி சான்றிதழ் தருமாறு தன்னை வற்புறுத்திய சீனியர் டாக்டர் ஒருவர் பெயரையும் டாக்டர் வெண்ணிலா தெரிவித்துள்ளார்.

**வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share