சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது காவல்துறையினர் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக ஜெயராஜின் மனைவி செல்வராணி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில்,” இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், 8க்கும் அதிகமான முறை விசாரணை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டபோது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உறவினரின் செல்போன் மூலமாக யாரிடமோ பேசி, ரூ.36 லட்சத்தை வழங்கி விடுமாறு மிரட்டிக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக நீதித்துறை நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். அன்றைய தினமே குற்றவாளிகள், பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் மற்றும் செய்தியாளர்களை மிரட்டியதோடு, மோசமான வார்த்தைகளில் திட்டினர். ஆகவே இந்த வழக்கில் பணபலம் காரணமாக சாட்சிகளை மிரட்டி, கலைக்க வாய்ப்புள்ளதால், மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
**வினிதா**
�,”