சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவுக்குள் சேர்ப்பது குறித்து பொதுக்குழு தீர்மானிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மருது சகோதரர்களின் 218ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் அமைந்துள்ள இருவரின் சிலைகளுக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (அக்டோபர் 24) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக முன்னிலை பெற்று வருவது அதிமுக அரசுக்கு மக்கள் அளித்த திடகாத்திரமான தீர்ப்பாகவே கருதுகிறேன். இறுதிச் சுற்று முடிந்தவுடன் இரு தொகுதிகளிலும் நாங்கள் மகத்தான வெற்றிபெறுவோம். புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதி, ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்தது. அவர்களது தொகுதியை அவர்கள் வென்றிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸிடமிருந்த இரண்டு தொகுதிகளிலும் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்குதான் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தினகரன் உங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “இதற்குரிய பதிலை ஏற்கனவே சொல்லிவிட்டோம். தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் இசைவைப் பெற்றுதான் அந்த குடும்பம் சார்ந்த 16 பேரையும் கட்சியை விட்டு நீக்கினோம். அவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. அப்படி எழுந்தால் அதனை தீர்மானிக்கக் கூடிய மிகப்பெரிய சக்தியாக எங்களது பொதுக்குழுதான் இருக்கும்” என்று பதிலளித்துள்ளார் பன்னீர்செல்வம்.
சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் சேருவாரா அல்லது அமமுகவில் சேருவாரா என்ற வாதம் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளுக்கு இடையே எழுந்துள்ளது. ஆனால், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று அதிமுகவின் குரலாக ஊடகங்களில் பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கட்சியில் சேர்ப்பது குறித்து பொதுக்குழு முடிவெடுக்கும் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சசிகலாவை சேர்ப்பது குறித்த கேள்விக்கு, “தலைமைக் கழகம் பேசி முடிவு செய்யும்” என்ற நழுவலான பதிலையே பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,”