sசசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா!

Published On:

| By Balaji

பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா வருகிற 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. உடனடியாக சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் இருமல் இருந்தது. அதன்பின்னர் நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. கொரோனா பாதிப்பும் உறுதியானது. இதைத் தொடர்ந்து சசிகலாவை விக்டோரியா அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு நேற்று அதிக காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்கள் அளித்து வந்த சிகிச்சையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. காய்ச்சலும் குறைந்து விட்டது. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் அனைத்தும் சீராக உள்ளது. நுரையீரல் தொற்றும் குறைந்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சிறையில் சசிகலாவுடன் ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசிக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை. இரண்டாவது முறையாக இன்று (ஜனவரி 23) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.

இளவரசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் சிறையில் இருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

**- ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share