தற்போது சிறையில் இருக்கும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவில் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ‘இதுபற்றி தலைமைக் கழகம் ஆலோசித்து பேசி நல்ல முடிவெடுக்கும்’ என்று அதிமுகவின் பொருளாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சொல்லியிருப்பது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பழைய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சில வாரங்களாகவே , சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவில் இணைவார் என்றும் ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கேயே சசிகலாவும் இணைவார் என்றும் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அக்டோபர் 13 ஆம் தேதி கலந்துகொண்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவில் சசிகலா இணைவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தந்தி டிவி நெறியாளர் ஹரிஹரனின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், “இதுபற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துபேசி முடிவெடுப்பார்கள்” என்று பதிலளித்தார் .
நீங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் இதில் உங்கள் நிலைப்பாடு மிகவும் முக்கியமாயிற்றே என்று கேள்வி கேட்கப்பட,
“என்னுடைய நிலைப்பாடு என்றல்ல, கட்சியின் நிலைப்பாடு, தமிழக மக்களின் நிலைப்பாடு. அண்ணா திமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து நல்ல முடிவெடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார் பன்னீர் செல்வம்.
‘ஏற்கனவே கழகத்தின் பொதுக்குழுவில் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைத்திருக்கிறோம். குற்ற வழக்கில் தண்டனை பெற்றாலே அவர் தானாக அதிமுகவின் உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் சசிகலா பற்றிய விவகாரங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அதிமுகவின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில், ‘சத்தியத்தின் கோட்டையும் சாத்தான்களின் நோட்டமும்’ என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் கவிதை வெளியானது. அதாவது சசிகலாவால் அதிமுகவில் இணையவே முடியாது என்று அடித்துச் சொன்னது அந்த கவிதை.
ஆனால் இப்போது பன்னீர் செல்வமோ பேசி நல்ல முடிவெடுப்போம் என்று சொல்கிறார். இதுவே சசிகலா அதிமுகவுக்கு திரும்புவதில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருப்பதை தெளிவாக்குகிறது.
இதற்கிடையில் அக்டோபர் 13 ஆம் தேதி குன்னத்தூரில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதா மறைந்த பிறகு சிறு சலசலப்புக்குக் கூட இடமில்லாமல் சசிகலாவால் இந்த ஆட்சி உருவாக்கப்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இந்த ஆட்சியாளர்கள் எந்த அளவு நன்றியுடன் இருக்கிறார்கள் பாருங்கள். ஆட்சியில் இருப்பதால்தான் அதிமுக என்ற கட்சியே இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். துரோகத்தை வென்று ஜெயலலிதாவின் உண்மையான இயக்கத்தை மீட்டெடுக்க உருவாகியிருப்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என்று தெரிவித்தார்.
மேலும், “ எங்களையும், ஜெயலலிதாவின் தொண்டர்களையும் அவமதித்தவர்களுடன் சசிகலா எப்படி சேருவார். எப்படி நாம் சேருவோம்? அதிமுகவுடன் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுகவை மீட்டெடுப்பதுதான் அமமுகவின் இலக்கு” என்று தெரிவித்தார்.
எனவே இந்த விவகாரத்தில் குழப்பம் அதிகரித்து வருகிறது.
�,”