சசிகலா விரைவில் விடுதலையாவார் என்ற நம்பிக்கை உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்டோபர் 25) சந்தித்துப் பேசினார். சசிகலா விடுதலைக்கான சட்ட ரீதியான முயற்சிகள் அவரது குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
கர்நாடகா தினத்தை முன்னிட்டு நன்னடத்தையை காரணம் காட்டி 141 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதுபோலவே சசிகலாவும் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார்” என்று கர்நாடக சிறைத் துறை இயக்குநர் என்.எஸ். மெகரிக் தெரிவித்துவிட்டார். சசிகலாவை சந்தித்த பிறகு இதற்கு பதிலளித்துள்ளார் தினகரன்.
செய்தியாளர்களை சந்தித்தபோது, “சசிகலா விரைவில் விடுதலையாவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கான சட்டப்படியான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. ஏதோ ஒரு அதிகாரி பேட்டி அளித்தது போல எல்லாம் இல்லை. அனைத்து கைதிகளுக்கும் ஒரே விதமான நடைமுறைதான். சசிகலாவுக்கு தண்டனையிலிருந்து நிவாரணம் வழங்குதல் உள்ளிட்டவையெல்லாம் உள்ளன” என்று குறிப்பிட்ட தினகரன்,
சசிகலா அணிந்திருந்த உடை குறித்து பேசுகிறார்கள். பெங்களூரு சிறைத் துறையைப் பொறுத்தவரை சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது சாதாரண தண்டனைதான். அதனால் சசிகலா சிறையில் சாதாரண ஆடையை அணிந்துகொள்ளலாம் என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, “சசிகலா சிறையிலிருந்து வெளியே சென்று வரவில்லை. சிறை முன்பகுதியில் உள்ள பிளாக்கில் எங்களை சந்திக்கிறார். எங்களை சந்திக்க வரும்போது கையில் ஏதோ எடுத்துவந்ததை, வெளியே சென்று வருகிறார் என பரப்புகிறார்கள். வினய்குமார் அறிக்கையில் எந்த இடத்திலும் சசிகலா பற்றி குற்றம்சாட்டி சொல்லவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “சசிகலா சிறைக்கு வருவதற்கு முன்பு பாதுகாப்பு கருதி, சசிகலா தங்க இருந்த அறையிலுள்ள கைதிகளை வேறு இடங்களுக்கு அதிகாரிகள்தான் மாற்றியுள்ளனர். சிறையில் இருப்பவர் ஊடகங்களில் பேச முடியாத நிலையில் இருப்பதால், எதனை வேண்டுமானாலும் கூறுவதா” என்று தினகரன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
திமுகவின் திறமையின்மை காரணமாக இடைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
�,