சேலை உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Published On:

| By admin

விருதுநகர் ராஜபாளையம் நூல் விலை உயர்வை கண்டித்து கலர் ரக சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வும் வழங்கப்படும் என வட்டாட்சியர் முன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து மருத்துவத்துணி வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் நூல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என சேலை உற்பத்தியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் கலர் ரக பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்தத் தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள 4,000 நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டினர். எனவே நூல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நூல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கலர் ரக பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share