`சரவணா ஸ்டோர்ஸ்: அந்தப் புகாரின் கதி!

Published On:

| By Balaji

சென்னை பாடியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மீது வில்லிவாக்கத்தைச் சேர்ந்த உமர் பரூக் என்பவர் கொடுத்த புகார் சமரசம் செய்து வைக்கப்பட்டுவிட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னை பாடியில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்குச் சென்ற உமர் பரூக், பிஸ்கட் விலை அதிகமாக இருப்பதாகக் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அக்கடையில் வேலை செய்யும் பவுன்சர்கள் உமர் பரூக்கை சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றனர். இது தொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்தில் பரூக் புகார் கொடுத்தார். அதற்கான சி.எஸ்.ஆர். காப்பியையும் போராடி பெற்றார் பரூக்.

இந்த நிலையில் கொரட்டூர் போலீஸ் நிலையத்திலிருந்தும், சரவணா ஸ்டோர்ஸ் தரப்பிலிருந்தும் புகார் கொடுத்த பரூக்குக்கு அழுத்தங்கள் அதிகரித்தபடியே இருந்தன. ‘மோடி மாமல்லபுரம் வர்றதால எல்லா போலீஸ் அதிகாரிகளும் அங்கேதான் பாதுகாப்புப் பணியில இருக்காங்க. அதுக்குள்ள நீங்க அந்தப் பையனை பிடிச்சு பேசி சரிக்கட்டி சமாளிச்சுடுங்க. இல்லேன்னா சி.எஸ்.ஆருக்கு அப்புறம் எஃப்.ஐ.ஆர். போட வேண்டி வந்துடும்’ என்று போலீஸார் தரப்பில் சரவணா ஸ்டோர்ஸுக்கு ஆலோசனை சொல்லப்பட்டதையும் பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையில் புகார் கொடுத்த உமர் பரூக்கின் உறவினர்கள், குடும்பத்தினரிடம் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் பேசியவர்கள், “அந்த பவுன்சர்கள் மேல எங்க ஓனரே நடவடிக்கை எடுக்க சொல்லிட்டாங்க. அதனால நீங்க இதைப் பெரிசு பண்ணாதீங்க. கோர்ட்டு, கேஸ்னு போனா உங்க பையன் அரசு வேலையில இருக்காரு. தேவையில்லாத சிக்கலெல்லாம் வரும், கட்சிக்காரங்க இதை வைத்து பிரச்சினை பண்ண அனுமதிக்காதீங்க’’ என்றெல்லாம் சொல்ல, இந்த அழுத்தத்தின் அடிப்படையில் புகார்தாரர், சரவணா ஸ்டோர்ஸ் ஆகிய இரு தரப்பினரும் கொரட்டூர் காவல் நிலையத்தில், ‘இனி இந்த விவகாரம் தொடர்பாக பிரச்சினை செய்ய மாட்டோம்’ என்று எழுதிக் கொடுத்துவிட்டார்கள் என்கிறார்கள் காவல் துறை தரப்பில்.

இதுபற்றி காவல் துறை தரப்பில் கேட்டபோது, “சரவணா ஸ்டோர்ஸுக்கு எதிராக புகார் காவல் நிலையங்களில் வாங்கப்படுவதே அரிது. அதிலும் புகார் பதியப்படுவது அரிதினும் அரிது” என்றார்கள் சிரித்துக்கொண்டே.

[அநியாய விலை: தட்டிக் கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்!](https://minnambalam.com/k/2019/10/09/93/saravana-stores-customer-fight-illegal-price)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share