பாஜகவுடன் கைகோத்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட அஜித் பவார் மீது தேசியவாத காங்கிரஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், அதில் பல சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
நேற்று (நவம்பர் 23) காலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அஜித் பவார் பாஜகவுடன் சேர்ந்து கைகோத்து துணை முதல்வர் பதவியேற்று அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சித் தலைவர் சரத் பவார் நேற்று பிற்பகல் அறிவித்தார்.
அதன்படி மும்பை சவான் மையத்தில் நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சரத் பவார் தலைமையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 54 எம்.எல்.ஏ.க்களில் 49 பேர் இக்கூட்டத்துக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.
இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸின் சட்டமன்றத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவாரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொறடாவுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உட்பட அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் நீக்கப்பட்டன.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குப் புதிய சட்டமன்றத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அடுத்த சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீலுக்கு அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் இருக்கும் என்று இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாகக் கூட நீக்கப்படவில்லை. இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சிவசேனா, காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயும் குழப்பத்தை மட்டுமல்ல; சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சிக்கே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் சரத் பவார் ஒருபக்கம் இறங்கியிருப்பதாகவும், அதனால்தான் புதிய சட்டமன்றத் தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், அதேநேரம் அஜித் பவார் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்படவில்லை என்றும் கூறுகிறார்கள் மும்பை பத்திரிகையாளர்கள்.
�,”