xசாண்டா கிளாஸ் உலகிற்கு சொன்ன சிறப்பு செய்தி!

Published On:

| By Balaji

நாளைய தினம் (டிசம்பர் 25), கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உலகமெங்கிலும் உள்ள மக்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். இவ்வருட கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சாண்டா கிளாஸ் உலகிற்கு சொன்ன சிறப்பு செய்தி அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட பல நாட்கள் முன்பிருந்தே மக்கள் தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் நாளன்று பரிசுகளையும், இனிப்புகளையும் எடுத்துக்கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா என்றழைக்கப்படும் சாண்டா கிளாஸ் வருவார் என்னும் நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. துருக்கி நாட்டில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த செயிண்ட் நிக்கோலஸ் என்னும் பாதிரியார், ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏழை எளிய குழந்தைகளுக்கு பரிசுகளையும், உதவிகளையும் செய்து வந்தார். ஃபாதர் கிறிஸ்துமஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அவரை நினைவுகூறும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தா என்னும் கதாபாத்திரத்தை டாக்டர் க்ளெமென்ஸி மூர் என்பவர் உருவாக்கினார்.

அதற்குப் பின்னர் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கும் வழக்கம் தொடர்ந்தது. பின்லாந்து நாட்டில் அமைந்துள்ள ரோவனியமி, சாண்டா கிளாஸின் அதிகாரப்பூர்வ கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பும் பரிசுகளைப் பட்டியலிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கடிதங்கள் இங்குள்ள சாண்டா கிளாசின் அலுவலகத்திற்கு வருகின்றன. ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு அவற்றை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாண்டா கிளாஸ் வேடமிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் பயணித்து பரிசுகளை வழங்குவார்கள். அதற்கு முன்னதாக கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி, சிறப்பு கிறிஸ்துமஸ் உரையை சாண்டா நிகழ்த்துவார். இவ்வருட நிகழ்ச்சியில் பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றிருந்தனர்.

தனது பயணத்தை ஆரம்பிக்கும் முன்பாக சாண்டா சிறப்பு கிறிஸ்துமஸ் செய்தியைக் கூறினார். ‘இயற்கை நமது நண்பன். நமது நண்பனுக்கு நாம் எப்போதும் உதவி செய்ய வேண்டும். மக்கள் என்னிடம் சிறந்த பரிசு என்ன என்று கேட்பார்கள். என்னைக் கேட்டால் காலம் தான் சிறந்த பரிசு என்று எப்போதும் கூறுவேன். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் உங்கள் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.’ என்னும் செய்தியை அவர் உலகிற்குக் கூறியுள்ளார். பரிசுகளை வழங்கப் புறப்படும் முன்பாக சாண்டா கூறியிருக்கும் இந்த முக்கிய செய்தி அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share