ஆயுதம் விற்கவா டிரம்ப் பயணம்? அமெரிக்காவிலும் விமர்சனம்!

Published On:

| By Balaji

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணம் நம் நாட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மட்டுமல்ல, அமெரிக்க எதிர்க்கட்சிகள் மத்தியிலும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பிப்ரவரி 24 ஆம் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியோடு பங்கேற்றார் டிரம்ப்.

இந்த நிகழ்வில் டிரம்ப் பேசும்போது மோடியை வெகுவாக புகழ்ந்துவிட்டு, “ பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியாவோடு நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்புவோம். இந்தியாவுக்கு இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா காத்திருக்கிறது” என்று பேசினார்.

டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. “காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று ராட்டை நூற்றுவிட்டு சில நிமிடங்களிலேயே இந்தியாவுக்கு ஆயுதம் விற்பேன் என்று காந்தி பிறந்த மண்ணில் அறிவிக்கிறார் டிரம்ப். இதை மோடி வரவேற்கிறார். இதேபோன்ற ஆயுத வியாபாரப் பேச்சைதான் சவுதி அரேபியாவுக்கு சென்றபோதும் டிரம்ப் பேசினார்” என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதேபோன்ற எதிர்ப்பு அமெரிக்க அரசியல் அரங்கத்திலும் எழுந்துள்ளது. அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவரான பெர்னி சாண்டர்ஸ் குடியரசுக் கட்சியின் அதிபரான டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பற்றி கடுமையாக கருத்து வெளியிட்டுள்ளார்.

“அதிபர் டிரம்ப் ராணுவத்துக்கு ஆயுத விற்பனை செய்வதற்காக இந்தியாவுக்கு சென்றிருக்கக் கூடாது. ராணுவ ஆயுதங்களான போயிங் மற்றும் லாக்ஹீட்களை விற்பனை செய்வதற்காக இந்தியா சென்றதற்குப் பதிலாக, பருவ நிலை மாற்றம், காற்று மாசுபாடு, ஆகியவற்றை தடுப்பதற்கும், மறுசுழற்சி ஆற்றல்களைப் பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உலகைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் இந்தியா சென்றிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணம் இந்திய, அமெரிக்க அரசியல் அரங்கில் ஒரே விதமான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

**-பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share