சமையல் செல்லப்பா என்ற பெயரை காதுகளை விட நாவுகளே அதிகம் அனுபவித்திருக்கும். ஏனென்றால் சமையல் உலகின் சக்கரவர்த்தியாக சென்னையில் பல வருடங்கள் கொடி கட்டிப் பறந்தவர் செல்லப்பா. ஊடகங்கள் எல்லாம் ஜெ.அன்பழகன் மரணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அதே ஜூன் 10ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர மாரடைப்பால் இறந்துபோனார். அவர் கொரோனா பாதிப்பால் இறந்துபோனார் என்றும் அவரது நட்பு வட்டங்களிலும் ஊடகங்களிலும் படபடக்கிறார்கள்.
எத்தனையோ கல்யாணங்களை கோலாகலமாக்கியவர், மணப்பெண்ணின் லட்சணத்தை விட செல்லப்பாவின் பட்சணத்தால் பேசப்பட்ட கல்யாணங்கள் அதிகம். அப்படிப்பட்ட செல்லப்பா அநேகர் அறியாமல் அமைதியாய் அதிர்ச்சியாய் மரணம் அடைந்ததுதான் ஜீரணிக்க முடியாத கொடுமை.
**நளராஜா**
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த குடும்பம் செல்லப்பாவினுடையது. இவரது பூர்வீக குடும்பத்துக்கு அங்கே பெரிய கம்பத்தம் என்பது பட்டப் பெயர். பெரிய கம்பத்தம் என்றால் 100 ஏக்கருக்கு மேல் நிலபுலன்கள் வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம். அப்பேர்பட்ட குடும்பத்தில் சுப்பிரமணியனாய் பிறந்தவர் செல்லப்பா. நான்கு பெண்கள், இரு ஆண் குழந்தைகளுக்கு மூத்த பிள்ளையாய் பிறந்தவர் சுப்பிரமணியன். பெரிய கம்பட்டம் என்பதல்லாம் போய், வாழ்வின் பெரும்பாட்டை உணர ஆரம்பித்த காலம் அது. சென்னைக்குச் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்று விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு பெயர்ந்தது குடும்பம். சுப்பிரமணியனுக்கு இயற்கையிலேயே கை பக்குவம் வாய்த்திருந்தது. சிறு சிறு வேலைகளாய் தொடங்கிய நளபாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி தன் கைப் பக்குவத்தால் சென்னையின் நள நாயகர்களில் ஒருவராக உயர்ந்தார் செல்லப்பா.
ஒரு நாளைக்கு ஒரு திருமணம், இரு திருமணம், மூன்று திருமணம்… அட போங்கள்… ஒரே நாளில் 18 திருமணங்களுக்கு செல்லப்பாவின் சமையல் சென்னையில் நடந்திருக்கிறது. பொதுவாக சமையல் கலைஞர்கள் தங்களுக்கென ஒரு அரசாங்கம் நடத்தி வருவார்கள். செல்லப்பாவும் அப்படிப்பட்ட அரசாங்கம் நடத்தியிருக்கிறார். அவரிடம் நூற்றுக்கணக்கான பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இதுபோன்ற மிகப்பெரிய சமையல் தொழில் செய்பவர்கள் தொழிலை நான்கு வகைகளாகப் பிரித்து வைத்திருப்பார்கள்.
முதல் இடத்தில் தலைவராக அதாவது ஹெட் குக் நள ராஜாவாக இருப்பது செல்லப்பாதான். இரண்டாவது இடத்தில் ஏழு பேர் இருப்பார்கள். இவர்கள்தான் எவ்வளவு சமைக்க வேண்டும், எப்போது ஏற்ற வேண்டும், எப்போது இறக்கி வைக்க வேண்டும் என்ற பதம் பார்க்கத் தெரிந்த நள மந்திரிகள். அவர்களை அடுத்து மூன்றாவது கட்டத்தில் இருப்பவர்கள் காய்கறிகள் திருத்துதல் (நறுக்குதல்), சமையல் பொருட்கள் அரைத்தல் ஆகியவற்றைச் செய்பவர்கள். நான்காவது கட்டம் இலை போடுதல், சாதித்தல் (பரிமாறுதல்) ஆகியவை. நள வித்தகத்தில் இந்த நான்கும் பிரதானம், செல்லப்பா நான்காம் இடத்தில் இருந்து படிப்படியாய் தொழில் கற்றுக்கொண்டு முன்னேறி நளராஜாவாய் ஜொலித்தவர்.
சரி இந்த நெட்வொர்க்கில் நளராஜாவுக்கு என்ன வேலை என்றுதானே கேட்கிறீர்கள்? உப்பும், காரமும் போட வேண்டியது நளராஜாதான். எத்தனை கைப்பிடி உப்பு போடவேண்டும், எத்தனை கைப்பிடி மிளகாய்ப் பொடி போடவேண்டும் என்ற கைப்பக்குவம் நளராஜாவுக்கு மட்டுமே மட்டுமேயான வேலை. ஒரு நாளைக்கு ஏகப்பட்ட திருமணங்கள் நடக்கும், அத்தனைக்கும் செல்லப்பா சமையல்தான். முகூர்த்த நேரத்தை கணக்கு வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்யாண மண்டபத்துக்காய் காரில் பறந்து அங்கங்கே இருக்கும் தனது ஏழு நள மந்திரிகளிடம் பக்குவம் விசாரித்து உப்பும், மிளகாயும் தன் கையால் போடுவார் செல்லப்பா. அப்போதுதான் செல்லப்பாவின் சமையல் பூரணமாகும்.
**முடக்கிப் போட்ட ஊரடங்கு**
செல்லப்பாவின் மனைவி உஷா செல்லப்பாதான் அவருக்கு உறுதுணை. செல்லப்பாவின் நூற்றுக்கணக்கான கஸ்டமர்களின் எல்லா தொலைபேசி எண்களும் உஷாவுக்கு மனனம். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சொல்லுவார். இல்லத்தையும் தொழிலையும் அவர் கவனித்துக் கொள்ள, இப்படி அடுப்பு நெருப்போடும் பரபரப்போடுமே வாழ்ந்து பழக்கப்பட்ட செல்லப்பாவைக் கடந்த இரண்டு மாத ஊரடங்கு ஒரேயடியாய் முடக்கிப் போட்டுவிட்டது. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி எல்லாமே முகூர்த்த மாதங்கள். ஒரு நாள் கூட உட்கார்ந்திருக்க மாட்டார். ஆனால் கொரோனாவால் எல்லா நாட்களுமே இல்லத்தில்தான் இருக்க வேண்டியதாகிவிட்டது.
“69 வயது முடிந்து கடந்த ராம நவமி அன்றுதான் அவருக்கு 70 ஆவது வயது பிறந்தது. அவ்வப்போது சளி பிடிக்கும், அவரே முரட்டு வைத்தியம் பார்த்துக் கொள்வார். ஊரடங்கு நாட்களில் செல்லப்பாவை மிகவும் பதற்றமடைய வைத்தது டிவி செய்திகள்தான். விழிப்புணர்வு என்ற பெயரில் பீதியை மட்டுமே உற்பத்தி செய்தன டிவி சேனல்கள். கொரோனா இதோ வருகிறது, அதோ வருகிறது என்று போட்ட செய்திகளைப் பார்த்து அந்த எழுபது வயது ஜீவன் புலம்பிக் கொண்டே இருந்தார். அது என்னாச்சு என்றால் தனக்கு இயல்பாய் சளி பிடித்ததை கூட வெளியே சொன்னால் தனக்கு கொரோனா என்று பட்டம் கட்டி விடுவார்களோ என்ற அளவுக்கு அவரது முதிய மனது பயந்துவிட்டது. மூச்சுத் திணறலுக்காக காவேரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். மூச்சுத் திணறல் என்றதுமே கொரோனா என்று முடிவானது.
வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான திருமண சமையல் மட்டுமல்ல… ஆயிரக்கணக்கான அன்னதானங்களை செய்தவர். பிறர் வயிறார திருப்தியாக சாப்பிடுவதையே தனது மன திருப்தியாக உணர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் கொடுத்த நற்சுவை திலகம் என்ற விருது அவருக்கு அதை விட அதிக அளவு திருப்தியை ஏற்படுத்தியது. பரபரக்கும் வேலை, பாராட்டுகள் என்று கடும் உழைப்பில் கூட நிம்மதியாய் இருந்தவர், கடைசி நாட்களில் மனப் பதற்றத்திலேயே போய்விட்டார். விழிப்புணர்வுக்கும் பீதிக்கும் உண்டான இடைவெளியை ஊடகங்கள் உணரவேண்டும்” என்கிறார்கள் செல்லப்பாவின் குடும்பத்தினர்.
**செல்லப்பாவின் மைசூர் பா**
செல்லப்பாவின் சகோதரர் எஸ். மாதவன் ஹிந்து பிசினஸ்லைன் ஆங்கில ஏட்டில் சீனியர் சப் எடிட்டராக இருக்கிறார். செல்லப்பா என்றதுமே அவரது குரல் உருகியது.
“எங்க எல்லாரையும் கரையேத்தினது செல்லப்பா அண்ணாதான். அவர் அள்ளிக் கொடுத்ததுக்கு கணக்கே கிடையாது. கோடிக் கணக்கிலதான் இருக்கும். எங்க ஆலமரமே அவர்தான். எங்க குடும்பத்துக்கே உரிய கால் வலியால கஷ்டப்பட்டார். தாய்வழி ஃபேமிலி ட்ரீயில ஹார்ட் அட்டாக்கும் வந்திருக்கலாம்னு சந்தேகமா இருக்கிறது. செல்லப்பா அண்ணாவை நினைச்சு கலங்கறதை விட அவரை நினைச்சு மகிழ்ச்சியடையறதுதான் அவருக்கு உகப்பா இருக்குனு நான் நினைக்கிறேன். அவர் சமைக்கிற ஒவ்வொண்ணும் அந்த பட்சணங்கள் தரும் சுவையும் அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். உழைப்பு, திறமை, நல்ல மனம் மூன்றும் கலந்தவர் என் அண்ணா.
அவரைப் பத்தின என் நன்றியறிதலையும், உணர்வுகளையும் அப்பப்ப கவிதையா சமைச்சு வைப்பேன். அப்படி நான் சமைச்சு வச்ச கவிதைகளை நான் நினைவுபடுத்திப் பார்க்க ஆசைப்படுகிறேன்.
*எல்லார்போல் தோன்றிடினும் உள்ளத்துள் எளியவராம்*
*இல்லார்க்கு வழங்கும் இனிய குணம் உடையவராம்*
*நில்லா ஆற்றைப்போல் பேருழைப்பானவராம்*
*செல்லா எனக்கு தமையனார் செல்லப்பா”*
என்ற கவிதையைச் சொல்லி கண் கலங்கிய மாதவன் சட்டனெ கண்களைத் துடைத்துக் கொண்டே,
“இன்னொரு கவிதை. இது அண்ணா செல்லப்பா பத்தினது அல்ல. அவரோட மைசூர் பா பத்தினது. செல்லப்பாவின் மைசூர் பாவில் விழாத விஐபிகளே கிடையாது.
*இதை இதனால் இது முடிக்கும் என்பதுவாய்*
*அது அதனை அளவாய் கைப்பதமாய் கலந்து*
*மொறுமொறுவாய் செய்ய பெருமனதோன் நளனாய்*
*படுசுவையாய் வாயுள் இன்னொரு மைசூர்பா*.
மைசூர் பா போலவே எங்களுக்கு எப்போதும் இனிப்பானவர் செல்லப்பா அண்ணா” என்று நெகிழ்கிறார் பத்திரிகையாளர் மாதவன்.
தொண்டைக்குள் மெல்லென இறங்கிக் கரையும் அவரது மைசூர் பா போலவே, மனதுக்குள் கரைந்து இனித்துக் கொண்டிருக்கிறார் நளராஜா செல்லப்பா.
**- ஆரா**�,”