சிறுதானியங்கள் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. இதில் முக்கியமானது சாமை. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலுவூட்ட செய்வதில் சாமை சிறப்பாகச் செயல்படும் சாமை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. சுலபமாக ஜீரணிக்க கூடியது. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு நிரம்பும். இதை சாதமாக மட்டும் அல்லாமல் சாமை புட்டு, சாமை ரொட்டி, சாமை பிஸ்கட், சாமை பொங்கல் என்று விதவிதமாக சமைக்கலாம். அவற்றில் சாமை கிச்சடியும் ஒன்று.
**என்ன தேவை?**
சாமை – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 3 (கீறிக்கொள்ளவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
துருவிய இஞ்சி – சிறிதளவு
கேரட், பீன்ஸ், பட்டாணி காய்கறிக்கலவை – ஒரு கப்
சீரகம், மஞ்சள்தூள் – சிறிதளவு
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – சிறிதளவு
நெய்/எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
சாமையை தண்ணீரில் நன்கு அலசி, கழுவி எடுத்துக்கொள்ளவும். அதை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் அல்லது நெய்விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்துப் பொரிந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, நறுக்கிய தக்காளி, காய்கறிக்கலவை என இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் சிறிது மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இப்போது, வடிகட்டி, ஊறவைத்திருக்கும் சாமையை அதில் சேர்க்கவும். 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவினால், சுவையான, சூடான சாமைக் கிச்சடி அல்லது உப்புமா தயார்.
**[நேற்றைய ரெசிப்பி: தினை தோசை](https://minnambalam.com/public/2021/10/12/1/thinai-dosa)**
.�,